கல்வி

தடையை மீறி பேருந்து தின கொண்டாட்டம்

DIN

சென்னையில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் தடையை மீறி வெள்ளிக்கிழமை பேருந்து தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
சென்னையில் கல்லூரி மாணவர்கள் நடத்தும் பேருந்து தினத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். போக்குவரத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் பேருந்து தினம் கொண்டாடுவதற்கு உயர் நீதிமன்றம் சில ஆண்டுகளுக்கு முன்பு தடை விதித்தது.
இருப்பினும், கல்லூரி மாணவர்கள் காவல் துறையின் கண்காணிப்பையும் மீறி, பேருந்து தின கொண்டாட்டத்தில் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அண்மைக்காலமாக பேருந்து தின கொண்டாட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.
இந்த நிலையில், கோடை விடுமுறைக்கு பின்னர் சென்னையில் உள்ள பெரும்பாலான கல்லூரிகள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன. கல்லூரியின் முதல் நாள் என்பதால் மாணவர்கள் பேருந்து தின கொண்டாட்டத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக காவல் துறை அதிகாரிகள் கருதினர். இதனால் நகரின் முக்கியமான பகுதிகள், கல்லூரி வாயில்கள், பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள் ஆகியப் பகுதிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தடையை மீறி கொண்டாட்டம்: இதனிடையே, ஆவடியில் இருந்து அண்ணா சதுக்கம் நோக்கி ஒரு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் இருந்தனர். பேருந்து, திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலை வந்ததும் அந்த மாணவர்கள் பேருந்து தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேருந்தில் பயணிகளை கீழே இறக்கிவிட்ட அவர்கள், கூரையின் மீது நடனமாடத் தொடங்கினர். அதேபோல பேருந்தின் முன்பு மாணவர்கள் மேளதாளங்களுடன் நடனமாடினர். இதனால் அங்கு வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதன் காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த போலீஸார், மெரீனா காமராஜர் சாலை அருகே பேருந்தை தடுத்து நிறுத்தினர். பின்னர் பேருந்து தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை விரட்டினர். பிடிபட்ட மாணவர்களை போலீஸார் எச்சரித்து அனுப்பினர். இதன் விளைவாக அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மாநிலக் கல்லூரி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரற்ற இதயத் துடிப்பால் பாதிக்கப்பட்டவருக்கு நவீன சிகிச்சை

மூலைக்கரைப்பட்டியில் குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

நிறுவன தினம்...

அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உரக் கடை உரிமையாளா் மரணம்

அரபு மொழியில் பாரதிதாசனின் கவிதைகள் நூல்

SCROLL FOR NEXT