கல்வி

3,000 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறை

DIN

தமிழகத்தில் முதல் கட்டமாக 3,000 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஓர் அறிவுத்திறன் வகுப்பறை (ஸ்மார்ட் கிளாஸ்) ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்: வளர்ந்து வரும் தொழில்நுட்ப சவால்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில், அரசுப் பள்ளி மாணவர்கள் போதிய கணினித் திறன்களை அடைவது அவசியம். அந்த வகையில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும்.
3,090 உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா 10 கணினிகளும், 2 ஆயிரத்து 939 மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா 20 கணினிகளும் அதனுடன் தொடர்புடைய இதர சாதனங்களும் அளிக்கப்படும். இதற்கென அரசுக்கு ரூ.437.78 கோடி செலவு ஏற்படும்.
இயக்ககத்துக்கு புதிய கட்டடம்: அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு கணினி மூலமாக பாடங்களைப் பயிற்றுவிக்கும் வகையில் முதல் கட்டமாக 3,000 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஓர் அறிவுத்திறன் வகுப்பறை ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.60 கோடி செலவிடப்படும்.
பள்ளிக் கல்வி இயக்ககம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்தக் கட்டடம் மிகவும் பழைமை வாய்ந்தது. பள்ளிக் கல்வி இயக்ககத்தில் இயங்கும் பல்வேறு பிரிவுகளுக்காக கூடுதல் இடவசதி தேவைப்படுகிறது.
இதற்காக ஒரு லட்சம் சதுர அடியில் ரூ.33 கோடியில் பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு புதிய கட்டடம் கட்டப்படும். இந்தக் கட்டடம் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கட்டடம் என்ற பெயரில் அழைக்கப்படும்.
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்குத் தேவைப்படும் கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.39 கோடியில் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT