கல்வி

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடக்கம்

DIN

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2017-18-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான பொதுக் கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலும் அதன் இணைப்பு, உறுப்புக் கல்லூரிகளிலும் வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல் உள்ளிட்ட 13 பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இளம் அறிவியல் பிரிவில் உறுப்புக் கல்லூரிகளில் 915 இடங்களும், இணைப்புக் கல்லூரிகளில் 1,600 இடங்களும், இளம் தொழில்நுட்பப் படிப்புகளில் 305 இடங்களும் என மொத்தம் 2,820 இடங்கள் உள்ளன.
இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் மே 10-ஆம் தேதி தொடங்கின. ஜூன் 4-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 53,047 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், உரிய விண்ணப்பக் கட்டணம் செலுத்தப்பட்ட 49,030 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதில், 21,015 பேர் மாணவர்கள், 28,014 பேர் மாணவிகள், ஒருவர் திருநங்கை ஆவார்.
தரவரிசைப் பட்டியல் ஜூன் 10-ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு ஜூன் 16-ஆம் தேதி நடைபெற்றது. இதில், முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கான 32 இடங்கள் நிரப்பப்பட்டன.
இதையடுத்து, பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 600 மாணவ, மாணவிகள் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 401 பேர் கலந்தாய்வில் பங்கேற்றனர். இதில், 397 பேர் தங்களுக்கான இடங்களைத் தேர்வு செய்தனர். அவர்களில் 239 பேர் பெண்கள், 158 பேர் ஆண்கள்.
மாணவ, மாணவிகள் வழக்கம்போலவே இந்த ஆண்டும் பி.எஸ்சி. வேளாண்மை படிப்பைத் தேர்வு செய்யவே ஆர்வம் காட்டினர். முதல் நாளில் அதிகபட்சமாக கோவை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. வேளாண்மை படிப்பை 87 பேர் தேர்வு செய்தனர். அதேபோல மதுரை வேளாண் கல்லூரியை 83 பேரும், அடுத்தபடியாக திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர் கல்லூரிகளையும் தேர்வு செய்ய மாணவர்கள் ஆர்வம் காட்டினர்.
கடந்த காலங்களில் அதிகப்படியானோர் தேர்வு செய்து வந்த வனவியல் படிப்பை, இந்த ஆண்டு முதல் நாளில் 4 பேர் மட்டுமே தேர்வு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கல்லூரிகளைத் தேர்வு செய்த மாணவ, மாணவிகளுக்குத் துணை வேந்தர் கு.ராமசாமி, முதல்வர் மகிமைராஜா ஆகியோர் சேர்க்கைக்கான உத்தரவுகளை வழங்கினர்.
முதல் கட்டக் கலந்தாய்வு ஜூன் 24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து தொழில்கல்விக்கான கலந்தாய்வு ஜூன் 28-ஆம் தேதியும், வெளிநாடுவாழ் இந்தியர்கள், நிறுவனங்களுக்கான கலந்தாய்வு ஜூன் 30-ஆம் தேதியும் நடைபெறும். இரண்டாம் கட்டக் கலந்தாய்வு ஜூலை 12 முதல் 15 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT