கல்வி

கெடுபிடிகளுடன் நடந்த நீட் தேர்வு: 11 லட்சம் மாணவர்கள் எழுதினர்

DIN

மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்டப் படிப்பு மாணவச் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. மொத்தம் 11 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர்.
தேர்வு அலுவலர்கள் கடும் கெடுபிடிகளுடன் நடந்து கொண்டதாக மாணவர்கள் தெரிவித்தனர். நீட் தேர்வை தமிழகத்தில் மட்டும் சுமார் 85 ஆயிரம் பேர் எழுதினர்.
நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கான இடங்கள் ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு நடைபெற்றது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) மூலம் தேர்வு நடைபெற்றதால், பெரும்பாலும் சிபிஎஸ்இ பள்ளிகளிலேயே தேர்வு நடைபெற்றது.
நாடுமுழுவதும் 103 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 1,920 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் இருக்க 490 அதிகாரிகளும் 3,500 பார்வையாளர்களும் தேர்வைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இளநிலை மருத்துவப் படிப்புக்கு 65 ஆயிரம் இடங்களுக்கும் பல் மருத்துவப் படிப்புக்கு 25 ஆயிரம் இடங்களுக்கும் இந்த தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 11 லட்சத்து 38 ஆயிரத்து 890 மாணவ மாணவிகள் இந்த நீட் தேர்வை எழுதினர். இதில் 1,522 பேர் வெளிநாடு வாழ் இந்தியர்களும் 613 பேர் வெளி நாட்டைச் சேர்ந்தவர்களும் ஆவர்.
இதற்கு முன்பு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அகில இந்திய இட ஒதுக்கீடான 15 சதவீதத்துக்கு மட்டுமே நீட் தேர்வை சிபிஎஸ்இ நடத்தியது. கடந்த ஆண்டு தமிழகம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்ட நிலையில் இரண்டு கட்டங்களாக இந்த நுழைவுத் தேர்வை நாடுமுழுவதும் நடத்தியது. இந்த ஆண்டு நீட் தேர்வை சிபிஎஸ்இ ஒரே கட்டமாக நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, வேலூர், நாமக்கல், திருநெல்வேலி, சேலம் என 8 இடங்களில் 47 மையங்கள், புதுச்சேரியில் 4 மையங்கள் என மொத்தம் 51 மையங்களில் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில், சுமார் 85 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.
அதிகாலையிலேயே திரண்ட மாணவர்கள்: காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது என்றாலும், காலை 7.30 மணி முதல் மாணவர்கள் தேர்வுக் கூடத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். 9.30 மணிக்கு மேல் வரும் மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதால், அதிகாலையிலேயே மாணவர்கள், பெற்றோருடன் தேர்வு எழுதும் மையங்களுக்கு வந்தனர்.
வெளியூர் மாணவர்கள்: தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 13 மையங்கள் போடப்பட்டிருந்தன. தங்கள் மாவட்டத்துக்கு அருகில் உள்ள தேர்வு மையங்கள் கிடைக்காததால் சிவகங்கை, மதுரை, திருவாரூர், புதுச்சேரி, சேலம், தருமபுரி, மாயவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் சென்னைக்கு தேர்வெழுத வந்திருந்தனர். தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஆதார் கார்டு குழப்பம்: மையங்களுக்குள் தேர்வு நுழைவு அட்டையைத் தவிர வேறு எதுவும் எடுத்துச் செல்ல அனுமதியில்லை. இருப்பினும் ஆதார் கார்டை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற வதந்தி பரவியது.
இதன் காரணமாக, ஆதார் அட்டை கொண்டு வராத மாணவர்கள் சிலர் பதற்றமடைந்தனர். ஆனால் நுழைவு அட்டையைத் தவிர வேறு ஆதாரங்கள் எதுவும் தேர்வுக்கூடத்தில் கேட்கப்படவில்லை.
கூடுதல் புகைப்படம்: தேர்வு நுழைவு அட்டையின் முதல் பக்கத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பின்புறம் அஞ்சல் அட்டை அளவு புகைப்படம் இதுதவிர, கூடுதலாக ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை உடன் கொண்டு வருமாறு விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் பல மாணவர்கள் கூடுதல் புகைப்படத்தை கொண்டு வரவில்லை. இதற்காக தேர்வு மையங்களில் இலவசமாக புகைப்படம் எடுத்துக் கொடுக்க வசதி செய்யப்பட்டிருந்தது.
பள்ளிகளில் கடிகாரம்: மாணவர்கள் கடிகாரம் அணிந்து செல்ல அனுமதி இல்லை என்பதால், அனைத்து தேர்வு அறைகளிலும் கடிகாரம் பொருத்தப்பட்டிருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
காலை 7.30 மணிக்கே தேர்வுக் கூடத்துக்குள் சென்ற மாணவர்கள் பிற்பகல் 1 மணிக்கு தேர்வு முடிந்து வெளியே வந்தனர். தேர்வு அறைக்குள் போதிய அளவு குடிநீர் வசதி செய்யப்படவில்லை என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

சட்டையைக் கிழித்த மாணவர்கள்!
தேர்வு அறைக்கு முழுக்கை சட்டை, ஷூ, ஆபரணங்கள் அணிந்து செல்லக் கூடாது என்று விதிமுறையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் பெரும்பாலான தேர்வுக்கூடங்களில் பல மாணவர்கள் முழுக்கை சட்டை அணிந்து வந்திருந்தனர். இதனையடுத்து, சில மாணவர்கள் அரைக்கை சட்டை அணிந்திருந்த தந்தையின் சட்டையை வாங்கி அணிந்து சென்றனர்.
சிலர் அருகில் இருந்த சாலையோரக் கடைகள், வீடுகளுக்குச் சென்று கத்தி, பிளேடு, கத்திரிகோல் உள்ளிட்டவற்றை வாங்கி, சட்டையின் கைகளை கிழித்து, அரைக்கையாக மாற்றி அணிந்து சென்றனர். முழுக்கை சுடிதார் அணிந்திருந்த மாணவிகளும் கைகளை கிழித்த பின்னரே தேர்வுக் கூடத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
ஷூ அணிந்திருந்த மாணவர்கள் வெறும் கால்களுடன் தேர்வுக்கூடத்துக்கு சென்றனர். கோயிலுக்கு அணிந்திருந்த மாலைகளும் கழற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT