கல்வி

அதிக கட்டணம் வசூலித்தால் கல்லூரிகள் மீது நடவடிக்கை: மருத்துவக் கல்வி இயக்குநர் எச்சரிக்கை

DIN

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ கூறினார்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழங்களில் உள்ள அனைத்து இடங்களையும் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வின் மூலம் நிரப்பி வருகிறது.
கட்டணம் நிர்ணயம்: தனியார் கல்லூரிகளுக்கான கட்டணத்தை நீதிபதி என்.வி.பாலசுப்ரமணியன் தலைமையிலான குழு நிர்ணயித்துள்ளது. அதன்படி, ரூ.2 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை அந்தந்தப் படிப்புகள் மற்றும் கல்லூரிகளின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அனைத்து கட்டணமும் அடங்கும்: இதில் சேர்க்கைக் கட்டணம், கல்விக் கட்டணம், சிறப்புக் கட்டணம், ஆய்வகம், கணினி, பராமரிப்பு மற்றும் சிறப்பு வசதிகளுக்கான கட்டணம், கூடுதல் கல்வி நடவடிக்கைகள் என அனைத்தும் அடங்கும். மேலும், ஒரு மாணவரிடம் இருந்து மேம்பாட்டுக் கட்டணமாக ரூ.50 ஆயிரம் வசூலிக்கலாம் என்று கட்டண நிர்ணயக் குழு அறிவித்தது.
இதுதவிர, மாணவரிடம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கட்டணம் வசூலித்தால் குறிப்பிட்டக் கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி ரத்து செய்யப்படுவதோடு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கூடுதல் கட்டணம் வசூல்: இந்த நிலையில், முதுநிலை மருத்துவ இடங்களைப் பெறுவோரிடம் இருந்து கல்லூரிகள் அதிக கட்டணத்தை நன்கொடையாக கேட்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு ரூ.25 லட்சம் வரை கட்டணமாக கட்ட வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ கூறியது: கல்விக் கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே தனியார் மருத்துவக் கல்லூரிகள் வசூலிக்க வேண்டும். அதிகக் கட்டணம் வசூலிப்பதாக புகார் அளிக்கப்பட்டால் நீதிமன்றத்தின் மூலம் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் இதுவரை மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு புகார் எதுவும் வரவில்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

SCROLL FOR NEXT