அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகள் எவை?: விவரங்களை வெளியிட்டது ஏஐசிடிஇ
2017-18 கல்வியாண்டில் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகள் எவை, அவற்றில் பணிபுரியும் பேராசிரியர்களின் விவரங்களை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்
2017-18 கல்வியாண்டில் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகள் எவை, அவற்றில் பணிபுரியும் பேராசிரியர்களின் விவரங்களை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஏஐசிடிஇ) வெளியிட்டுள்ளது.
அதனுடன், இந்த கல்வியாண்டில் முழுமையாக மாணவர் சேர்க்கையை நிறுத்திய கல்லூரிகள், குறிப்பிட்ட பாடப் பிரிவுகளை கைவிட்ட பொறியியல் கல்லூரிகளின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் பி.இ. படிப்புகளில் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ள நிலையில், மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் பயன்படும் வகையில் இந்த விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் ஏஐசிடிஇ வெளியிட்டு வருகிறது.
அதன்படி, தமிழகத்தில் 2017-18-ஆம் கல்வியாண்டில் 523 பொறியியல் கல்லூரிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இவற்றில் மொத்தம் 2 லட்சத்து 70 ஆயிரம் பி.இ., பி.டெக். இடங்கள் உள்ளன.
இந்திய அளவில் அதிக பொறியியல் கல்லூரிகளைக் கொண்ட மாநிலம் தமிழகம்தான். இதற்கு அடுத்தபடியாக 372 கல்லூரிகளுடன் மாகராஷ்டிரமும், 329 கல்லூரிகளுடன் ஆந்திரமும், 296 கல்லூரிகளுடன் உத்தரப் பிரதேசமும், 283 கல்லூரிகளுடன் தெலங்கானாவும், 211 கல்லூரிகளுடன் மத்தியப் பிரதேசமும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மற்ற மாநிலங்கள் அனைத்திலும் 200 க்கும் குறைவான பொறியியல் கல்லூரிகளே உள்ளன.
முழுமையான விவரம்: இதில், தமிழகத்திலுள்ள 527 பொறியியல் கல்லூரிகளும் எங்கு உள்ளன, என்னென்ன பொறியியல் படிப்புகள் வழங்கப்படுகின்றன, பணிபுரியும் பேராசிரியர்கள் விவரம் என அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்கின்றன.
மாணவர் சேர்க்கை முழுமையாக நிறுத்தம்: 2017-18 கல்வியாண்டில் கல்லூரியை மூடுவதற்கு 20-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் ஏஐசிடிஇ-யிடம் விண்ணப்பித்திருக்கும் நிலையில், படிப்படியாக அதற்கான அனுமதியை ஏஐசிடிஇ அளித்து வருகிறது.
அதன்படி, முதல் கட்டமாக சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ கலைமகள் பொறியியல் கல்லூரி, நாமக்கல்லில் உள்ள விவேகானந்தா பெண்கள் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, ஈரோட்டில் உள்ள பாரதிதாசன் கம்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் பள்ளி ஆகியவை 2017-18 கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கையை முழுமையாக நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளன.
படிப்புகளைக் கைவிட்ட 59 கல்லூரிகள்: அதுபோல, குறிப்பிட்ட பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கையை முழுமையாக நிறுத்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, நாமக்கல், ஈரோடு எனப் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள பிரபல கல்லூரிகள் உள்பட 59 கல்லூரிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
இவை பி.இ. தகவல் தொழில்நுட்பம், மின்னியல் மின்னணுவியல் பொறியியல், கணினி அறிவியல் பொறியியல், இயந்திரவியல், விமானப் பொறியியல் உள்பட பல்வேறு பாடப் பிரிவுகளை கைவிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவரங்களை மாணவரும், பெற்றோரும் www.aicte-india.org என்ற இணையதளத்தில் புள்ளி விவரங்கள் என்ற பிரிவுக்குச் சென்று பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.