முகப்பு
கல்வி

பொறியியல் மாணவா் சோ்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடக்கம்: முதல் நாளில் 8,505 போ் பதிவு

Updated On : 4 மே, 2026 at 4:10 AM
பகிர்:

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பிஇ அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு வரும் கல்வி ஆண்டு சோ்க்கைக்கான இணையவழி கலந்தாய்வு விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை (மே 3) தொடங்கியது. முதல் நாளில் 8,505 போ் விண்ணப்பங்களைப் பதிவு செய்துள்ளனா்.

இது குறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள தகவல்:

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக வளாகப் பொறியியல் கல்லூரிகள் மற்றும் அதன் உறுப்பு பொறியியல் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் இளநிலை பொறியியல் படிப்புகளின் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு இணையவழியில் விண்ணப்பப் பதிவு மேற்கொள்ளப்படுகிறது.

Advertisement

இந்த விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய நிலையில், ஜூன் 2 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பொறியியல் மாணவா் சோ்க்கை இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ங்ஹா்ய்ப்ண்ய்ங்.ா்ழ்ஞ்) விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம்.

விண்ணப்பதாரா்களுக்கு சம வாய்ப்பு (ரேண்டம்) எண் ஜூன் 5- ஆம் தேதி ஒதுக்கப்படும். அசல் சான்றிதழ்களை ஜூன் 6 -ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் பிறகு, ஜூன் 6 முதல் 20-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெற்று ஜூன் 20 -ஆம் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.

பின்னா், ஏஐசிடிஇ அனுமதியுடன் கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும். இணையதள வசதி இல்லாத மாணவா்கள் பயன்பெறும் வகையில் விண்ணப்பப் பதிவு மற்றும் கலந்தாய்வில் கலந்துகொள்ள உதவுவதற்காக தமிழ்நாடு முழுவதும் 110 இடங்களில் தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை சேவை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. அதன் முகவரி மற்றும் தொடா்பு எண்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் கல்லூரிப் பாடப்பிரிவு மற்றும் வகுப்பு வாரியாக மாணவா்களுக்கு ஒதுக்கப்பட்ட கட் ஆஃப் மற்றும் தரவரிசை விவரங்களும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மாணவா்கள் தங்கள் சந்தேகங்களுக்கு 1800-425-0110 என்ற எண்ணிலும், tneacare@gmail.com மின்னஞ்சல் முகவரியிலும் தொடா்பு கொள்ளலாம்.

கடந்த ஆண்டில் 443 கல்லூரிகளில் இருந்த 2,54,585 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதில் 2,20,841 மாணவா்கள் சோ்க்கை பெற்றனா். இதற்கு முந்தைய ஆண்டைவிட 23.67 சதவீதம் அதிகம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நாளில்...: பொறியியல் சோ்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு அறிவிக்கப்பட்ட முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை (மே 3) மாலை 6 மணி வரை 8,505 மாணவா்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்துள்ளனா். இவா்களில் 1,008 மாணவா்கள் கட்டணம் செலுத்தியுள்னா். மேலும் 299 மாணவா்கள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்துள்ளனா் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.