வெளிநாடு சென்று உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களின் முதல் தேர்வாக மாறி வருவது ஜெர்மனி. காரணம், இங்குள்ள அரசுப் பல்கலைக்கழகங்கள், அந்நாட்டு மாணவர்களுக்கு மட்டுமல்ல, வெளிநாட்டு மாணவர்களுக்கும் இலவசக் கல்வியை வழங்குகின்றன.
ஜெர்மனி பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டப்படிப்பை, வெளிநாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படுவதும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
ஜெர்மனியில் ஒட்டுமொத்தமாக 534 பல்கலைக்காகங்கள் உள்ளன. இவை, இளநிலை, முதுநிலை, முனைவர் பட்டங்கள் வரை வழங்குகின்றன.
ஜெர்மனியில் பல்கலைக்கழகங்கள் மட்டுமே உள்ளன. இங்கு கல்லூரிகள் என்ற அமைப்புகள் இல்லை. இங்குள்ள பல்கலைக்கழகங்கள் இளநிலை பட்டப்படிப்பை 3 - 4 ஆண்டுகளிலும், முதுநிலை பட்டப்படிப்பை 1 - 2 ஆண்டுகளிலும் வழங்குகின்றன. வழக்கமான படிப்புகளுடன் கலை, இசை, தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றிலும் சிறப்பான பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.
மருத்துவம் மற்றும் சட்டப்படிப்புகளுக்கு இங்கு தனியாக நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
தனியார் பல்கலைக்கழகங்கள் கற்பிப்பதற்காக கட்டணம் டியூஷன் கட்டணம் வசூலித்த போதும், 322 அரசு பல்கலைக்கழகங்கள் கற்பிப்பதற்கான கட்டணத்தை வசூலிப்பதில்லை. இங்குள்ள 10ல் 9 மாணவர்கள் அரசு பல்கலைகளில்தான் பயில்கிறார்கள். அவ்வாறே கல்விக் கட்டணம் வசூலித்தாலும், மற்ற நாடுகளில் உள்ள பல்கலைகளோடு ஒப்பிடுகையில் கல்விக் கட்டணம் குறைவாகவே வசூலிக்கப்படுகிறது.
நம் நாட்டில் கல்வி பயில என்னென்ன தகுதிகள் தேவையோ, அது மட்டுமே ஜெர்மனியில் பயிலவும் போதுமானதாக உள்ளது. சில பல்கலைக்கழகங்கள் தாங்கள் வழங்கும் படிப்புகளுக்கு என சிறப்பான தகுதிகளை அமைத்திருப்பதும் வழக்கம். அவையும் குறைந்தபட்ச தகுதிகளாகவே இருக்கும். இதனால் பல்கலைக்கழகங்களில் சேர்க்கை கிடைப்பதும் எளிதாக இருக்கிறது.
சிறந்த பல்கலையை தேர்வு செய்வதுதான் மிகவும் குழப்பமானதாக இருக்கும். காரணம், அனைத்துப் பல்கலையும் சிறப்பானதாக இருப்பதால், மாணவர்கள்தான், பல்கலைக்கழகங்கள் பற்றிய முழு விவரங்களை அறிந்துகொண்டு, தங்களுக்கு ஏற்ற பல்கலைக்கழகத்தை தேர்வு செய்துகொள்ள வேண்டும்.
சில பல்கலைக்கழகங்கள், ஒரு சில படிப்புகளுக்கு மிகச் சிறந்தவையாக இருக்கும். சில சிறப்பான படிப்புகளை ஒரு சில பல்கலைகள் வழங்குகின்றன. எனவே, மாணவர்கள் அனைத்தையும் அறிந்து பல்கலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இளநிலைப் படிப்புக்கு - ஜெர்மனியின் பள்ளிக் கல்விக்கு இணையான படிப்பை முடித்திருக்க வேண்டும். முதுநிலை படிப்புக்கு இளநிலை படிப்பை முடித்திருக்க வேண்டும். முனைவர் பட்டத்துக்கு முதுகலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஆங்கிலத்தில் பட்டம்பெற்றிருந்தாலோ அல்லது டிஓஇஎஃப்எல், ஐஇஎல்டிஎஸ் சான்றிதழ்கள் பெற்றிருந்தாலோ போதுமானது.
ஒரு சில பல்கலைக்கழகங்கள் மட்டும் விதிவிலக்காக, ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சேராத மாணவர்கள் 1500 யூரோக்களை ஒவ்வொரு பருவத் தேர்வுக்கும் கல்விக் கட்டணமாக வசூலிக்கின்றன.
மாணவர் சேர்க்கை எண்ணிக்கை
ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகங்கள், மொத்த மாணவர் சேர்க்கையில், ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்கு இடமளிக்கின்றன. இது பல்கலைக்கழகத்துக்கு பல்கலைக்கழகம் மாறுபடுகிறது. ஒரு சில கல்லூரிகள் 41 சதவீதம் வரை வெளிநாட்டு மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.