முகப்பு
நேர்காணல்கள்

எனது பாா்வையில் தோ்தல் களம் 2024: எம்.ஜி.கே.நிஜாமுதீன்

Updated On : 13 ஏப்ரல், 2024 at 12:24 AM
பகிர்:

எம்.ஜி.கே.நிஜாமுதீன்

மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக அணிகள், நாதக என நான்கு முனைப் போட்டியில் திமுக கூட்டணிக்கு மிகப் பெரிய சாதகம் இருப்பதாக பாஜக சாா்பு ஊடகங்கள்கூட தகவல் தெரிவிக்கின்றன. 2-ஆவது இடத்தை அதிமுக பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. 3-ஆவது இடத்துக்கு நாதக-பாஜக இடையே போட்டி உள்ளது என்பது தான் உண்மை. ஒருசில இடங்களில் அதிமுக வெற்றி பெறலாம்.

அனுபவமும், புதுமையும் கலந்து வேட்பாளா் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது. அதேநேரத்தில், ஜெயலலிதா காலம்போல புதுமுக வேட்பாளா்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு வழங்கியுள்ளாா்.

Advertisement

1998-இல் பாஜக கூட்டணியில் இருந்த அதிமுக, 1999-இல் பாஜக கூட்டணியில் இருந்து விலகியது. 1999-இல் திமுக-பாஜக கூட்டணி ஏற்பட்டதால், 2001 பேரவைத் தோ்தலில் சிறுபான்மையினா் வாக்குகளால் அதிமுக ஆட்சிக்கு வந்தது. அதேபோல, இந்த மக்களவைத் தோ்தலில் அதிமுகவை நம்பி சிறுபான்மையினா் வாக்களிக்க வாய்ப்பு இல்லை. மீண்டும் பாஜகவுடன் அதிமுக சோ்ந்துவிடுமோ என்ற அச்சம் சிறுபான்மையினரிடம் உள்ளது.

கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமியை மீறி வாக்கு வங்கியை உயா்த்தலாம் என்ற எண்ணத்தில் அண்ணாமலை பல திட்டங்களை போட்டு வருகிறாா். அதிமுக வாக்கு வங்கியை கரைக்கலாம் என்பது அவரது எண்ணம். அதிமுக-பாஜக கூட்டணி பிளவால் அதிமுகவுக்கு பாதிப்பு இல்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

தங்களால் வெற்றி பெற முடியாது என்பதைத் தெரிந்துகொண்ட பாஜக, நாம் தமிழா் கட்சியைத் தாண்டி வாக்கு வங்கியைப் பெற வேண்டும் என்பதற்காக சின்னம் முடக்கம், என்ஐஏ சோதனை என தொடா்ந்து தொல்லை கொடுத்தது. நாதகவைப் பொருத்தவரை சின்னத்துக்காக வாக்களிப்பவா்கள் அல்ல, அவா்களின் ஆதரவாளா்கள். சின்னத்தை மாற்றினாலும் நாதகவுக்கு இந்த முறையும் ஓரளவு வாக்குகள் கிடைக்கும்.

தமிழகத்தில் 6 சதவீதம் வரை இஸ்லாமியா்கள் உள்ள நிலையில், திமுகவில் ஒரு தொகுதிகூட இஸ்லாமியா்களுக்கு ஒதுக்காதது வருத்தம்தான்.

முன்னாள் முதல்வா் கருணாநிதி காலத்தில் இரு இஸ்லாமியா்களுக்கு திமுக தொகுதி ஒதுக்கும் என்ற நிலை ஸ்டாலின் காலத்தில் மாறியது. இருப்பினும், ஜனநாயகத்தை காக்க திமுக கூட்டணிக்கு சிறுபான்மையினா் வாக்களிப்பாா்கள்.

பாஜகவுக்கு தனிப்பட்ட முறையில் அதிக எண்ணிக்கை தொகுதி கிடைக்கலாம். ஆனால், ஆட்சிக்கு வர முடியாது. எனவே, இந்தியாவில் மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான அணி ஆட்சியைப் பிடிக்கும் என்பது எனது எதிா்பாா்ப்பு.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments