முகப்பு
தேர்தல் செய்திகள்

கர்நாடகம்: முஸ்லிம்களுக்கு மறுக்கப்படும் மக்களவை பிரதிநிதித்துவம்

Updated On : 10 ஏப்ரல், 2024 at 2:18 AM
மத்திய பெங்களூரு தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் மன்சூா் அலி கான்
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2024 at 2:18 AM

குஜராத்தில் கடந்த 35 ஆண்டுகளிலும் கர்நாடகத்தில் கடந்த 15 ஆண்டுகளிலும் தலா ஒரே ஒரு முஸ்லிம் எம்.பி. மட்டுமே மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவ்விரு மாநிலங்களிலும் தேசிய கட்சிகள் செல்வாக்கு செலுத்துவது குறிப்பிடத்தக்கது.

குறைந்தபட்சம் 12% முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட மாநிலமான கர்நாடகத்தில் கடைசியாக 2004 மக்களவைத் தேர்தலில் குல்பர்கா தொகுதியிலிருந்து இக்பால் அகமது சரத்கி வெற்றி பெற்றார்.

Advertisement

மாநிலத்தின் பிரதான கட்சிகளாகத் திகழும் காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) ஆகிய 3 பெரிய கட்சிகளும் முஸ்லிம் சமூக வேட்பாளர்களை அதிகம் நிறுத்துவதில்லை என்பது தெரிகிறது. சுயேச்சைகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத சிறிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பு அரிதாகவே உள்ளது.

இதன் காரணமாக, 2004 தேர்தலுக்கு பிறகு நடந்த 3 மக்களவைத் தேர்தலிலும் முஸ்லிம் வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெறவில்லை.

11 பேர் போட்டி; ஒருவர் வெற்றி: 2004 தொடங்கி கடந்த 4 மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ், பாஜக மற்றும் மஜத இணைந்து 11 முஸ்லிம் வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தியுள்ளது. அதாவது, 4 தேர்தலில் கட்சிகள் களமிறக்கிய 112 வேட்பாளர்களில் 10 சதவீதத்துக்கும் குறைவாகவே முஸ்லிம் சமூகத்தினர் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

2004 மக்களவைத் தேர்தலில் 4 முஸ்லிம் வேட்பாளர்களும், 2009 மற்றும் 2014 தேர்தல்களில் தலா 3 பேரும், 2019 தேர்தலில் ஒருவர் மட்டுமே பிரதான கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டனர். இவர்களில் பாஜக சார்பில் யாரும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறையும் மத்திய பெங்களூரு தொகுதியில் காங்கிரஸின் வேட்பாளராக மன்சூர் அலி கான் எனும் ஒரு முஸ்லிம் வேட்பாளர் மட்டுமே போட்டியிடுகிறார். அவரும் மூன்று முறை பாஜக எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பி.சி.மோகனை எதிர்த்து பலப்பரீட்சை நடத்துகிறார்.

தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் மாறிய களம்: 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புப் பிறகு கர்நாடகத்தில் முஸ்லிம் வேட்பாளர்களின் வெற்றி வெகுவாக குறைந்தது. மறுசீரமைக்கப்பட்ட மக்களவைத் தொகுதிகளில் முஸ்லிம் சமூகத்தினருக்கு வலுவான வாக்கு வங்கி இல்லாததும், முஸ்லிம் தலைவர்களை கட்சிகள் வளர்த்தெடுக்காததும் இதற்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

அதற்கு முன்பும், கர்நாடகத்தில் இருந்து அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம் எம்.பி.க்கள் மக்களவைக்குத் தேர்வானதில்லை. 1989 தேர்தலில் தெற்கு தார்வாட் தொகுதியிலிருந்து பி.எம்.முஜாஹித் மற்றும் வடக்கு பெங்களூரிலிருந்து சி.கே.ஜாஃபர் ஷெரீப் ஆகிய இருவர் தேர்வாகினர்.

1991 முதல் 2004 வரையிலான 5 தேர்தல்களில், ஷெரீப் மூன்று முறை (1991, 1998 மற்றும் 1999) வெற்றி பெற்றார். கமாருல் இஸ்லாம் 1996-இல் வெற்றி பெற்றார்.

கடைசியாக 2004-இல் இக்பால் அகமது சரத்கி வெற்றி பெற்றார். இத்தேர்தல்களில்கூட காங்கிரஸ் மற்றும் மஜத இணைந்து 5 இடங்களுக்கு மேல் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை.

வாய்ப்பளிக்கும் கட்சி-காங்கிரஸ்: 2024 மக்களவைத் தேர்தலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் முஸ்லிம் வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள் என காங்கிரஸைச் சேர்ந்த அச்சமூக தலைவர்கள் நம்பிக்கையில் இருந்தனர். ஆனால், ஒரு இடம் மட்டுமே ஒதுக்கப்பட்டது.

மஜத கட்சியைப் போன்று காங்கிரஸிலும் லிங்காயத் மற்றும் ஒக்கலிக சமூகத்தினருக்கு அதிக எண்ணிக்கையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜாதி அடிப்படையிலான வாக்குவங்கி தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவதன் காரணமாக அதனடிப்படையில் வேட்பாளர்களை கட்சிகள் தேர்வு செய்கின்றன. அதனால், கர்நாடக முஸ்லிம் சமூக மக்களின் மக்களவைப் பிரதிநிதித்துவம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இத்தேர்தலில் இஸ்லாமியருக்கு வாய்ப்பளித்த ஒரே கட்சியாக காங்கிரஸ் உள்ளது.

சூழல் மாறும்...: மத்திய பெங்களூரு தொகுதியில் பிரசாரத்தை தொடங்கிய மன்சூர் அலி கான் கூறுகையில், "நாடு முழுவதும் முஸ்லிம்கள் குறைந்த பிரதிநிதித்துவம் கொண்டுள்ளனர்.

யாரையும் குற்றஞ்சாட்டும் அரசியலில் நான் ஈடுபட மாட்டேன். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் நடந்த தவறான ஆட்சியையும் ஆட்சிக்கு எதிரான மக்களின் கோபத்தையும் எனது தொகுதி மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்.

மக்களவைத் தொகுதியின் மக்கள்தொகை விகிதம் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து முற்றிலுமாக வேறுபட்டது.

ஒரு வேட்பாளரின் ஜாதி மற்றும் மத அடிப்படையில் அல்லாமல் அவரின் தகுதியை அறிந்து, அதன் அடிப்படையில் வாக்களிக்கும் காலம் வரும் என்று நான் நம்புகிறேன்.

அப்போதுதான், அனைத்து சமூகத்தினருக்கும் நியாயமான பிரதிநிதித்துவம் கிடைக்கும்' என்றார்.

குஜராத்தில்...

குஜராத் மாநில மக்கள்தொகையில் 9.5 சதவீத முஸ்லிம்கள் உள்ள நிலையில், இங்கிருந்து மக்களவைக்கு கடைசியாக 1984 தேர்தலில் இஸ்லாமியரான அகமது படேல் காங்கிரஸ் சார்பில் வென்றார்.

1989 தேர்தல் முதல் மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் 7 முஸ்லிம் வேட்பாளர்கள் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளனர்.