தேர்தல் 1984 : மூன்றாவது முறையாக முதல்வர் எம்ஜிஆர்!
1984 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நினைவுகள்... தினமணியின் கருவூலப் பக்கங்களிலிருந்து...
1980 சட்டப்பேரவைத் தேர்தலில் ‘அதிரடியாக’ வென்று முதல்வராக மீண்டும் பொறுப்பேற்ற எம்ஜிஆர், அதே வேகத்தில் 1981 ஆம் ஆண்டில் மதுரையில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டில் கலை நிகழ்ச்சியொன்றை நடத்த வந்த ஜெயலலிதா, 1983-ல் கட்சியின் கொள்கை பரப்புச் செயலரானார்; 1984-ல் மாநிலங்களவை உறுப்பினருமானார் – ஜெ. பொலிடிகல் என்ட்ரி!
இடைப்பட்ட காலத்தில் இலங்கையில் தமிழர் பிரச்சினை தலைதூக்கத் தொடங்கியது. தவிர, 1980-ல் எம்ஜிஆர் பெற்ற வெற்றியால் அதிமுகவுக்கும் காங்கிரஸுக்குமான – எம்ஜிஆருக்கும் இந்திரா காந்திக்குமான - உறவும் மீண்டும் வலுப்பெற ஆரம்பித்திருந்தது.
1984 அக். 5 ஆம் தேதி உடல் நலம் குன்றியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் எம்ஜிஆர், பின்னர் உயர் சிகிச்சைக்காக, நவ. 5 ஆம் தேதி அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்டார்.
Advertisement
இதனிடையே, அதே அக்டோபர் மாதத்தின் 31 ஆம் தேதி தனது பாதுகாவலர்களாலேயே பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். இதனால், இந்திரா காந்தியின் மகன் ராஜீவ் காந்தி பிரதமராகப் பொறுப்பேற்றார். உடனே, நேரடியாகத் தேர்தலில் வெற்றி பெற – மக்களிடம் ஆணையைப் பெற வேண்டும் என்பதற்காக மக்களவையைக் கலைத்துவிட்டுத் தேர்தல் நடத்த முடிவு செய்தார் ராஜீவ் காந்தி.
எம்ஜிஆர், அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில், இதே சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்து, தமிழக அமைச்சரவையும் பதவி விலகியது; நவ. 15-ல் சட்டப்பேரவை கலைக்கப்பட்டது. மக்களவையுடன் சேர்த்து, பேரவைக்கும் தேர்தல் நடத்துவதென முடிவு செய்தது.
1984, டிசம்பர் கடைசி வாரத்தில் மக்களவைக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்.
பேரவைக்கு அதிக தொகுதிகளில் அதிமுகவும் குறைவான தொகுதிகளில் காங்கிரஸும் நேர்மாறாக மக்களவைக்கும் தொகுதிகளைப் பகிர்ந்துகொண்டு போட்டியிட்டன.
பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலை காரணமாக நாடு முழுவதும் அனுதாப அலை வீசிக் கொண்டிருந்தது.
பக்கவாதம், தொடர்ந்து, சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்காக அமெரிக்காவில் நியூ யார்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் எம்ஜிஆர். தேர்தல் பிரசாரத்துக்கு அவர் வரவில்லை; வரக்கூடிய நிலையிலும் அவர் இல்லை. அமெரிக்காவில் இருந்தபடியேதான், கையெழுத்து பெறப்பட்டு ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார் (டிச. 19 ஆம் தேதி சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை நடைபெற்றது).
எம்ஜிஆர் உயிருடனேயே இல்லை; நினைவின்றி இருக்கிறார், இங்கிருப்பவர்கள் பொய் சொல்லி ஏமாற்றுகிறார்கள் என்றெல்லாம் ஏராளமான வதந்திகள் மக்கள் மத்தியில் பரவிக்கொண்டிருந்தன அல்லது பரப்பப்பட்டன.
இவ்வாறிருக்கையில் இவை எல்லாவற்றையும் தங்களுக்கு சாதகமாக மாற்ற நினைத்த அதிமுக உயர் தலைவர்கள், திடீரென ஒரு நாள் தேர்தல் பிரசாரத்தில், அமெரிக்காவில் எம்ஜிஆர் உடல் நலம் தேறிவருகிற – இறைச்சி சாப்பிடுகிற – இரட்டை இலை போல கைகாட்டுகிற காட்சிகளைக் கொண்ட விடியோவை வெளியிடவும் பெரும் பரபரப்பேற்பட்டது. இந்த விடியோ பிரசாரம், மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது – பெரும் அனுதாப அலையை பரவச் செய்தது.
எம்ஜிஆர் பிரசாரம் செய்யாத இந்தத் தேர்தலில் கொள்கை பரப்புச் செயலராக இருந்த ஜெயலலிதா, தீவிர பிரசாரத்தை மேற்கொண்டார். செய்வீர்களா? செய்வீர்களா? என்று கேள்விகளை எழுப்பி பிரசாரம் செய்த அவருடைய பாணி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
எம்ஜிஆர் இல்லாமல் கோவையில் தமிழகத் தேர்தல் பிரசாரத்தைத் தொடக்கிப் பேசிய பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கைத் தமிழர் பிரச்சினையை இந்தியா புறக்கணிக்க முடியாது. கைகள் பின்னுக்குக் கட்டப்பட்ட நிலையில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் புகைப்படத்தை நான் பார்த்தேன். இந்த மாதிரி நிலைமை நீண்ட நாள் நீடிக்க முடியாது என்பதை இலங்கை அரசு உணர வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இந்த காலகட்டத்தில், அதிமுக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெறாது என்று தெரிவித்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலர் ஜி. கருப்பையா மூப்பனார், அதிமுக – காங்கிரஸ் கூட்டணி பற்றியொரு விளக்கத்தையும் அளித்தார்.
அதிமுகவுடன் காங்கிரஸ் செய்துகொண்ட தேர்தல் உடன்பாடு ஆட்சியில் இடம் பெறுவதற்காக அல்லது அமைச்சர் பதவியைப் பங்கு போட்டுக் கொள்வதற்காக அல்ல. பிரிவினை சக்திகளை எதிர்த்தும் நாட்டைத் துண்டுபோட முற்படும் சக்திகளையும் இயக்கங்களையும் எதிர்த்தும் இத்தேர்தலில் மக்களின் கட்டளையைப் பெற அதிமுக ஒத்துழைக்கும் என்று அக்கட்சியின் ஸ்தாபகத் தலைவரான முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் அளித்த உறுதிமொழிக்குப் பிறகுதான் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி இவ்விரு கட்சிகளிடையே தேர்தல் உடன்பாட்டுக்கு ஒப்புக்கொண்டார் என்று குறிப்பிட்ட மூப்பனார், மாநில கட்சியாக இருந்தபோதிலும் முக்கியமான பிரச்சினைகளைப் பரந்த அளவில் தேசிய கண்ணோட்டத்துடன் அதிமுக அணுகுகிறது என்று மறைந்த பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்தபோது முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் கூறியிருந்தார் என்றார்.
ஆனால், அதிமுகவின் ஏழாண்டு கால ஆட்சியில் ஏழ்மையும் வேலையில்லா திண்டாட்டமும் வெகுவாகப் பெருகிவிட்டது. மதிய சத்துணவுத் திட்டம்கூட எம்ஜிஆரின் சொந்தப் படைப்பு அல்ல. காமராஜர் ஆரம்பித்துவைத்த திட்டத்தின் விஸ்தரிப்பே. வரும் தேர்தலில் தமிழ்நாட்டின் புதிய அத்தியாயம் தொடங்கும் என்று திமுக தலைவர் மு. கருணாநிதி பிரசாரம் செய்தார்.
[1983-ல் இலங்கைப் பிரச்சினையில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக திமுக தலைவர் மு. கருணாநிதியும் பொதுச்செயலர் க. அன்பழகனும் எம்எல்ஏ பதவிகளை ராஜிநாமா செய்திருந்தனர். தொடர்ந்து, 1984, ஏப்ரலில்தான் மேலவை உறுப்பினராகியிருந்தார் கருணாநிதி (பின்னர், 1986-ல் ஒரு சட்டத்தை நிறைவேற்றித் தமிழ்நாட்டிலிருந்து மேலவையையே ஒழித்துவிட்டார் எம்ஜிஆர்!).
இந்திரா கொலை, எம்ஜிஆர் சிகிச்சையில் என்ற சூழ்நிலையில் நடந்த இந்தத் தேர்தலில் போட்டியிடுவதைக் கருணாநிதி தவிர்த்துவிட்டார். 1957 தொடக்கம் போட்டியிட்ட அனைத்து சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றவரான கருணாநிதி போட்டியிடாத ஒரே தேர்தல் இதுதான்].
டிச. 19 அமெரிக்காவில் நியூ யார்க் நகரில் புரூக்ளின் டவுன்ஸ்டேட் மருத்துவமனையில் எம்ஜிஆருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டது.
டிசம்பர் இறுதியில் இரு நாள்கள் தேர்தல் வாக்குப் பதிவு. தேர்தல் முடிவுகள் வெளியானபோது, அதிமுக – காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. எதிர்த்துப் போட்டியிட்ட திமுக – ஜனதா – இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் – காமராஜர் காங்கிரஸ் கூட்டணி தோற்றது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், பிரசாரத்துக்கே வராமல் ஆண்டிபட்டி தொகுதியில் 32 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றார்.
மருத்துவமனையில் இருந்தவாறு எம்ஜிஆர் வெற்றி பெறுவது இது முதல் முறை அல்ல; இரண்டாவது முறை. ஏற்கெனவே, 1967 பேரவைத் தேர்தலின்போது, துப்பாக்கியால் சுடப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்தத் தேர்தலில் அதிமுக அமைச்சர்களில் ஹரிஜன நலத் துறையின் விஜயசாரதி தவிர அனைவரும் வெற்றி பெற்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் கே.டி.கே. தங்கமணி, ஜனதா செயலர் கலிவரதன், திமுக தலைவர்கள் துரைமுருகன், ஆர்க்காடு வீராசாமி, அன்பில் தர்மலிங்கம், மார்க்சிய கம்யூ. தலைவர் ஏ. நல்லசிவம், காமராஜர் காங்கிரஸ் தலைவர் பழ. நெடுமாறன் போன்றோர் தோல்வியுற்றனர். பட்டுக்கோட்டையில் நமது கழக ஸ்தாபகத் தலைவர் எஸ்.டி. சோமசுந்தரம் தோற்றார்.
சட்டப்பேரவைக்கான தேர்தலில் 234 தொகுதிகளில் 132-ல் அதிமுக, 61-ல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 24-ல் திமுக, 2-ல் இந்திய கம்யூ, 6-ல் மார்க்சிய கம்யூ, ஜனதா கட்சி 3, காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றி பெற்றன.
1980-ல் 32 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த திமுக, இந்தத் தேர்தலில் மேலும் குறைந்து இரு முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் நீங்கலாக 20 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
1967 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சிப் பொறுப்பை இழந்ததுடன், பிரதான எதிர்க்கட்சியாகவும் பின்னர் இரண்டாம் வரிசைக்கும் தள்ளப்பட்டிருந்த காங்கிரஸ் இந்த முறை 61 தொகுதிகளில் வெற்றி பெற்று பிரதான எதிர்க்கட்சியானது.
மக்களவைத் தேர்தலில் மொத்தம் 39-ல், காங்கிரஸ் – 25, அதிமுக – 12, திமுக – 2; தென் சென்னை மக்களவைத் தொகுதியில் நடிகை வைஜெயந்தி மாலாவிடம் ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு இரா. செழியன் தோற்றது இந்தத் தேர்தலில்தான்.
தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, பின் டிச. 28 ஆம் தேதி, நியூ யார்க்கில் செய்தியாளர்கள் முன் வந்து, வெற்றியைக் குறிக்கும் விதத்தில் இரு விரல்களைக் காட்டினார் எம்ஜிஆர். புகைப்படங்கள் எடுக்கப்பட்டபோதிலும் அவரிடம் கேள்விகள் எதுவும் கேட்க அனுமதிக்கப்படவில்லை (பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டது பற்றி எம்ஜிஆரிடம் இன்னமும் தெரிவிக்கப்படவில்லை என்றொரு டாக்டர் தெரிவித்தார்). எம்ஜிஆர் சார்பில் நன்றியறிக்கையொன்றை அவருடைய மனைவி வி.என். ஜானகி வெளியிட்டார்.
அமெரிக்காவிலிருந்த முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனை மீண்டும் ஒருமனதாக சட்டப்பேரவை அதிமுக தலைவராக (முதல்வராக) சென்னையில் நிதி அமைச்சர் நெடுஞ்செழியன் தலைமையில் டிச. 31-ல் நடைபெற்ற பேரவைக் கட்சிக் கூட்டம் தேர்ந்தெடுத்தது. பின்னர் இந்தத் தீர்மானத்தை மாநில ஆளுநர் எஸ்.எல். குரானாவைச் சந்தித்து, அதிமுக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் அமைச்சர்கள் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், கே.ஏ. கிருஷ்ணசாமி, ஆர்.எம். வீரப்பன், அரங்கநாயகம், காளிமுத்து மற்றும் கட்சியின் பொதுச் செயலர் ப.உ. சண்முகம், பொருளாளர் மாதவன் ஆகியோர் அளித்தனர்.
பின்னர், எம்ஜிஆரைச் சந்திப்பதற்காக ஜனவரி 4 ஆம் தேதி நிதியமைச்சர் நெடுஞ்செழியனும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் கே. சொக்கலிங்கமும் நியூ யார்க் புறப்பட்டுச் சென்றனர்.
எம்ஜிஆர் உடல்நலம் தேறிவந்து முதல்வர் பொறுப்பேற்கும் வரையில் என்ன செய்வது என்பது பற்றிப் பரவலாக அரசியல் வட்டாரங்களிலும் அதிமுக வட்டாரங்களிலும் குழப்பம் நிலவியது. எம்ஜிஆர் எந்த அளவுக்குச் செயல்படக் கூடிய நிலையில் இருக்கிறார் என்றெல்லாம் அச்சம் தெரிவிக்கப்பட்டது. துணை முதல்வர் பதவி உருவாக்கப்பட்டு நெடுஞ்செழியன் பொறுப்பேற்கலாம் என்றெல்லாமும் பேசப்பட்டது.
ஆனால், அமெரிக்காவில் மூன்று மாத காலமாக சிகிச்சை பெற்ற பிறகு, 1985 பிப். 4 ஆம் தேதி காலையில் எம்ஜிஆர் சென்னை திரும்பினார்.
எம்ஜிஆரை வரவேற்கத் தமிழ்நாடு முழுவதுமிருந்து லட்சக்கணக்கில் தொண்டர்கள் திரண்டிருந்தனர். விமான நிலையத்துக்கு வெளியே வந்ததும் பரங்கிமலை அருகே ராணுவத் திடலில் வரவேற்பு. மேடை வரையில் காரில் வந்த எம்ஜிஆர், எவரும் எதிர்பாராத வகையில், அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியளிக்கும் விதத்தில், காரிலிருந்து இறங்கி, யாருடைய உதவியுமின்றி தாமாகவே நடந்துசென்று, விறுவிறுவென அவரே படிகளின்வழி மேடையேறி திரண்டிருந்த மக்களை நோக்கிக் கையசைத்து வரவேற்பை ஏற்றுக்கொண்டார்!
மேடையின் எல்லா புறங்களுக்கும் சென்று அனைத்து பகுதிகளிலும் அமர்ந்திருந்த மக்களை நோக்கிக் கையசைத்தார். வலது கையை உயர்த்தி இரட்டை விரல்களைக் காட்டினார். பேரவைத் தலைவர் க. ராஜாராம், மேலவைத் தலைவர் ம.பொ. சிவஞானம் ஆகியோரை மேடைக்கு அழைத்துக் கட்டித் தழுவினார். அமைச்சர்களுடன் கைகுலுக்கினார். சுருக்கமாக, உடல்நலம் பாதிப்பதற்கு முன்பிருந்ததைப் போலவே காணப்பட்டார் எம்ஜிஆர் (இந்த வரவேற்பின்போது, விமான நிலையத்தில் எம்ஜிஆரைக் காண ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை; அனுமதி மறுக்கப்பட்டது).
பின்னர், ராமாவரம் தோட்டத்திற்குச் சென்று எம்ஜிஆரை ஆளுநர் எஸ்.எல். குரானா சந்தித்துப் பேசினார். அவரை வாசல் வரை வந்து வரவேற்றார் - வழியனுப்பினார் எம்ஜிஆர்.
ஒரு வாரம் கழித்து, பிப். 10 ஆம் தேதி கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எளிய விழாவில் தமிழ்நாட்டின் முதல்வராக மூன்றாவது முறையாகப் பதவியேற்றார் எம்ஜிஆர். உளமார உறுதி கூறுகிறேன் என்று தெளிவாக இருமுறையும் எம்ஜிஆர் கூறியபோது, வந்திருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். விழாவுக்கு 20 பேர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.
பின்னர், 14 ஆம் தேதி நெடுஞ்செழியனும் பண்ருட்டி ராமச்சந்திரனும் 15 ஆம் தேதி, கே.ஏ. கிருஷ்ணசாமி, ஆர்.எம். வீரப்பன், செ. அரங்நாயகம், கா. காளிமுத்து, சி. பொன்னையன், எச்.வி. ஹண்டே, சு. முத்துசாமி, எஸ். திருநாவுக்கரசு, திருச்சி ஆர். சௌந்திரராசன், எம்.ஆர். கோவேந்தன், கோமதி சீனிவாசன், விஜயலட்சுமி பழனிசாமி, ஒய்எஸ்எம் யூசுப், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோரும் அமைச்சர்களாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.
பதவியேற்றவுடன் அறிக்கையொன்றை வெளியிட்டார் முதல்வர் எம்ஜிஆர்.
மறைந்த பிரதமர் இந்திரா காந்திக்கும் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் நன்றி தெரிவித்துக் கொண்ட அவர், மக்களைக் கண்டதும் உடல் வேதனைகளும் மன உளைச்சல்களும் பறந்துவிட்டதையும் தம் உடலில், மனதில் புதியதோர் சக்தி பிறந்திருப்பதையும் தாம் நன்கு உணர்வதாகக் குறிப்பிட்டார்.
அறிக்கையின் நிறைவில், “என் நலனுக்காக அவரவர் நம்பிக்கைக்கு ஏற்பட வழிபாடுகள் செய்து கண்ணீருடன் முறையிட்டு மன்றாடிய தமிழகத்தின் மனித தெய்வங்களை எப்படிப் பாராட்டுவது என்றெல்லாம் எண்ணித் தாம் திகைத்து நிற்கிறேன்.
“பாராட்டு, புகழ்ச்சி, நன்றி, வணக்கம் என்ற சொற்களெல்லாம் என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தப் போதுமானதாக இல்லையென்பதால், எஞ்சிய என் வாழ்நாளை மக்கள் நலனுக்காக உழைக்கக் காணிக்கையாக்குகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார் எம்ஜிஆர்.
உடல்நலம் குன்றியிருந்தபோதிலும் தேர்தலில் போட்டியிட்டுப் பெரும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக முதல்வராகவும் பதவியேற்ற எம்ஜிஆர், தாம் சொன்னபடியே எஞ்சிய தன் வாழ்நாளை மக்களுக்குக் காணிக்கையாக்கிவிட்டு, 1987, டிச. 24-லேயே மறைந்தார்.
1989-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வென்று முதல்வரானார் மு. கருணாநிதி. 1977-ல் ஆட்சியை இழந்து, 12 ஆண்டுகளுக்குப் பின், திமுகவுக்கு இது எவ்வாறு சாத்தியமானது? இடைப்பட்ட காலத்தில் என்னவெல்லாம் நடந்தன?