முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

தேர்தல் 1971 : மீண்டும் திமுக ஆட்சி, கருணாநிதி முதல்வர்!

1971 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நினைவுகள்... தினமணியின் கருவூலப் பக்கங்களிலிருந்து...

Updated On : 28 மார்ச், 2026 at 4:30 AM
முதல்வராகப் பதவியேற்கும் மு. கருணாநிதி... அமைச்சர்கள்... - தினமணி கருவூலத்திலிருந்து...
பகிர்:

நிறைய அரசியல் மாற்றங்கள், குழப்பங்களுக்கு / இடையே நடைபெற்றது 1971 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்.

1967 தேர்தலில் திமுகவுக்கு மக்கள் வாக்களித்ததன் மூலம் அரசியலில் நேரிட்ட தலைகீழ் மாற்றத்தின் விளைவாகத் தமிழ்நாட்டின் முதல்வராக அண்ணா பொறுப்பேற்றார். ஆனால், எதிர்பாராத உடல்நலக் குறைவால் 1969 பிப்ரவரியில் அவர் காலமானார்.

திமுகவை வழிநடத்திச் சென்றவராக இருந்த அண்ணாவின் மறைவைத் தொடர்ந்து, கட்சிக்குள் அடுத்து யார் முதல்வர்? – இரண்டாமிடத்தில் இருந்த இரா. நெடுஞ்செழியனும் மூன்றாமிடத்தில் இருந்த மு. கருணாநிதியும் - என்ற போட்டி ஏற்பட்டது. சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு விருந்தளித்து, கருணாநிதிக்கு ஆதரவான நிலையைப் பொருளாளர் எம்.ஜி.ஆர். எடுத்ததன் மூலம் கருணாநிதி எளிதில் முதல்வரானார் என்பார்கள். கருணாநிதி முதல்வர் பொறுப்பேற்றுத் திமுக ஆட்சியைத் தொடர்ந்தார்.

இடையே, குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் நிறுத்திய அதிகாரப்பூர்வ வேட்பாளர் நீலம் சஞ்சீவ ரெட்டிக்குப் பதிலாக, சுயேச்சை வேட்பாளரான வி.வி. கிரியைப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி ஆதரித்ததால் காங்கிரஸ் இரண்டாக உடைந்தது.

நிஜலிங்கப்பா – காமராஜர் தலைமையில் பழைய காங்கிரஸ், இந்திரா காந்தி தலைமையில் புதிய காங்கிரஸ்! இந்தக் காலகட்டத்தில்தான் தன்னுடைய செல்வாக்கையும் காங்கிரஸ் செல்வாக்கையும் பெருக்கிக்கொள்ளும் விதத்தில் வங்கிகள் நாட்டுடைமை, மன்னர் மானியம் ஒழிப்பு போன்ற திட்டங்களைக் கொண்டுவந்திருந்தார் இந்திரா காந்தி.

இந்தச் செல்வாக்குகளுடன் வங்க தேசப் போரில் கிடைத்த வெற்றியையும் பயன்படுத்திக்கொண்டு இந்த ஆதரவு அலையிலேயே முன்னதாகவே மக்களவைக்குத் தேர்தலை நடத்தி வெற்றிபெறத் திட்டமிட்டார் இந்திரா காந்தி. இதே வாய்ப்பைப் பயன்படுத்தி இந்திரா காந்தியுடன் கூட்டணி அமைத்துக்  கொண்டு, தமிழ்நாட்டிலும் பேரவையைக் கலைத்துத் தாமும் மக்களிடம் நேரடியாக வாக்குகளைப் பெற்ற முதல்வராக நினைத்தார் கருணாநிதி (திமுகவின்  வெற்றி தன்னால் வந்ததாக எம்ஜிஆர் குறிப்பிட்டு வந்ததும், அண்ணாவின் தலைமைக்குக் கிடைத்த வாக்குகளால்தான் இந்த ஆட்சி என்றொரு கருத்து நிலவியதும்கூட காரணங்களாக இருக்கலாம்).

பதவிக்காலம் முடிய ஓராண்டுக்கு முன்னரே மக்களவை கலைக்கப்பட்டது;  தமிழ்நாட்டிலும் சட்டப்பேரவை கலைக்கப்பட்டது, இரண்டுக்குமே தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸும் திமுகவும் கூட்டணி.  வினோதமான இந்தத் தேர்தல் கூட்டணி உடன்பாட்டின்படி, தமிழ்நாட்டில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில்கூட இந்திரா காங்கிரஸ் போட்டியிடவில்லை (காமராஜர் இருந்த காலம் என்பதால் அப்போது தமிழ்நாட்டில் இந்திரா காங்கிரஸுக்குக் குறிப்பிடும்படியான செல்வாக்கும் இல்லை); பதிலாக, 9 மக்களவைத் தொகுதிகளைப் பெற்றுப் போட்டியிட்டு அத்தனையிலும் வென்றது! இந்திரா காந்தி, கருணாநிதி ஆகிய இருவருக்குமே வலுவான எதிரியான காமராஜரைத் தோற்கடிக்க வேண்டிய கட்டாயமும் இருந்தது.

தேர்தல் பிரசாரங்கள் மிகத் தீவிரமாக நடைபெற்றன. சென்னை கடற்கரையில் நடந்த பிரமாண்டமான பிரசாரக் கூட்டத்தில் – 15 ஆண்டுகளுக்குப் பின் இருவருமாக ஒரே மேடையில் தோன்ற - காமராஜருக்கு நெற்றியில் திலகமிட்டு வெற்றி பெற ஆசி கூறினார் ராஜாஜி (வரலாற்றுப் புகைப்படம் இது!).

பிரசாரத்தில், ‘இந்தத் தேர்தலில் யோக்கியர்களையும் பண்புள்ளவர்களையும் தேர்ந்தெடுத்து அனுப்புங்கள். அது யார் என்று நான் அடையாளம் சொல்கிறேன். அவர்தான் காமராஜ் …

… காமராஜுக்கும் எனக்கும் நீண்ட நாள் விரோதம் என்று சொல்வார்கள். அதெல்லாம் ஒன்றுமில்லை. அவரிடம் உள்ள நற்குணம், தைரியம், உறுதியுடன் செயலாற்றும் தன்மை ஆகியவை கண்டு நான் பெரிதும் அவரைப் போற்றுகிறேன்.

… இந்தத் தேர்தல், ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக நடத்தப்படும் புனிதப் போர். இந்தப் புனிதப் போரை நடத்தும் தளபதியாக காமராஜ் வந்துள்ளார். அவருக்கு உதவி செய்வதைத் தவிர எனக்கு வேறு வேலையில்லை.

… இந்தப் போரில் காமராஜின் வெற்றி எனது வெற்றியாகும்... ...வாக்காளர் ஒவ்வொருவரும் யுத்த வீரராகப் பணியாற்றி அதர்மத்துக்குத் தோல்வி தேடித் தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்’ என்றார் ராஜாஜி.

‘இந்தத் தேர்தல் நல்ல சக்திகளுக்கும் தீய சக்திகளுக்கும் இடையேயான போராட்டம். நல்லவர்களாகிய உங்கள் ஓட்டுகளினால் தீய சக்திகள் முற்றிலும் மறையட்டும். நல்லன விளையட்டும். நல்லாட்சி மலரட்டும். ஜனநாயகம் செழிக்கட்டும். உலகத்துக்கே நல்வழி காட்ட பாரத தேசம் காப்பாற்றப்படட்டும்’ என்றார் காமராஜர்.

திமுகவும் அதன் தலைவர்களும் வழக்கமான உத்திகளுடன், இந்திரா காந்தியின் புகழையும் பிரசாரத்தில் பயன்படுத்திக் கொண்டனர்.

சென்னையில் 85 சதவிகிதம், பிற பகுதிகளில் 70 முதல் 80 சதவிகிதம் வரையிலும் வாக்குகள் பதிவாகின. தேர்தல் முடிவுகள் வெளியானபோது திமுக மாபெரும் வெற்றியைப் பெற்றது. முதல்வர் மு. கருணாநிதியும் 9 அமைச்சர்களும் வெற்றி பெற்றனர்.

தேர்தலில் 203 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 184 தொகுதிகளிலும், திமுக கூட்டணியில் 10 இடங்களில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 8 இடங்களிலும், 9 இடங்களில் போட்டியிட்ட அ.இ. பார்வர்ட் பிளாக் 7 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிட்ட இரு இடங்களிலும் வெற்றி பெற்றன.  திமுக ஆட்சி அமைத்தது.

காமராஜர் தலைமையிலிருந்த பிரதான எதிர்க்கட்சியான ஸ்தாபன (பழைய) காங்கிரஸ், 201 தொகுதிகளில் போட்டியிட்டு 15 தொகுதிகளில் மட்டுமே வென்றது. 1962-ல் ஆதரித்தும், 1967-ல் கூட்டணி அமைத்தும் திமுகவுடன் இணக்கமாகத் தேர்தல்களில் போட்டியிட்ட ராஜாஜியின் சுதந்திர கட்சி, இந்தத் தேர்தலில் பழைய காங்கிரஸுடன் இணைந்து நின்று, 19 தொகுதிகளில் போட்டியிட்டு, 6 தொகுதிகளில் வென்றது.

வங்கிகள் நாட்டுடைமை, மன்னர் மானியம் ஒழிப்பு போன்ற இந்திரா காந்தியின் நடவடிக்கைகள் பிடிக்காததாலும் திமுகவையும் பிடிக்காமல் போனதாலும் ராஜாஜி அணி மாறியதாகக் கூறுவார்கள்.

‘சென்ற தேர்தலில் காங்கிரசைத் தோற்கடிக்க திமுகவுக்குப் போடும்படி சொன்னீர்களே, இப்போது மாறலாமா? என்ற சந்தேகம் நல்லவர்களுக்கு வரலாம். அகங்காரத்தால் காங்கிரஸ் கெட்டதைப் போல நீங்களும் கெடுகிறீர்கள்.. வேண்டாம் அகங்காரம் என்று நான் அவர்களுக்கு (திமுகவுக்கு) சொன்னேன். பதவிக்கு வந்தால் அகங்காரம்தானே வளருகிறது’ என்று கடற்கரை பிரசாரக்  கூட்டத்தில் குறிப்பிட்டு, தன்னுடைய இந்திரா காங்கிரஸ் – திமுக எதிர்ப்புக்கான விரிவான காரணங்களை அப்போது பட்டியிலிட்டார் ராஜாஜி.

இந்தத் தேர்தலில் காமராஜர் தலைமையிலான பழைய காங்கிரஸ்தான் வெற்றி பெறும்; ஆட்சியமைக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. புறச் சூழலும்  அவ்வாறே தோன்றியது (வெற்றி பெறப் போவதாகக் கருதி காமராஜரைப் பூக்கொத்துகளுடன் அரசு உயர் அலுவலர்கள் சென்று பார்த்ததெல்லாமும் நடந்தது).

திமுக – ஸ்தாபன காங்கிரஸ் கூட்டணிகள் இடையே போட்டி மிகக் கடுமையாக இருந்ததென்னவோ உண்மைதான். ஏறத்தாழ 40 தொகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில்தான் திமுக அணியிடம் ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர்கள் தோற்றனர். சென்னைத் துறைமுகம் (486), சங்கராபுரம் (72), உத்தனப்பள்ளி (470), மேலூர் வடக்கு (127), முதுகுளத்தூர் (735), ராஜபாளையம் (664) போன்ற தொகுதிகளில் ஆயிரத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் பழைய காங்கிரஸ் தோற்றது (திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியில் வெறும் 26 வாக்குகளில் திமுக வேட்பாளர் எம்.எஸ். சிவசாமியிடம் சுதந்திரா வேட்பாளர் எம். மத்தியாஸ் தோற்றார்!).  திமுகவினரும் சில தொகுதிகளில் இவ்வாறு குறைந்த வித்தியாசத்தில் தோற்றனர். வாக்கு சதவிகிதம் திமுக – 48.58, ஸ்தாபன காங்கிரஸ் 34.99!

தேர்தலில் வெற்றி பெற்ற மு. கருணாநிதி, ‘எங்கள் கடமையைத் தொடர்ந்து செய்திட தமிழ் மக்கள் அளித்துள்ள ஆணையை ஏற்றுக்கொண்டு, ஏற்றத்தாழ்வு அற்றதும் விஞ்ஞான யுகத்துக்கு ஏற்றதுமான சமதர்ம சமுதாயத்தை உருவாக்குவதற்குப் பாடுபடுவோம்...

‘அமைதியான ஆட்சி, மக்களுக்கு நிம்மதியான வாழ்வு இதற்கேற்ற தீவிர நடவடிக்கைகள் எடுப்பதையே மீண்டும் உருவாகிற தமிழகத்தின் நிலையான அரசு தனது கடமையாகக் கருதும்.

‘...தமிழ்நாடு அசெம்பிளியில் எதிர்க்கட்சிகளின் பலம் மிகவும் குறைந்துவிட்ட போதிலும், திமுக சர்க்கார் எதிர்க்கட்சிக்கு உரிய மதிப்பை எப்போதும் அளிக்கும்’  என்று குறிப்பிட்டார்.

திமுக சார்பில் சட்டப்பேரவைக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் கூட்டத்தில் தலைவர் (முதல்வர்) பதவிக்கு கருணாநிதியின் பெயரைப் பொதுச் செயலர் நெடுஞ்செழியன் முன்மொழிந்தார். க. அன்பழகன், எம்.ஜி. ராமச்சந்திரன், மதுரை முத்து ஆகியோர் வழிமொழிந்தனர்; ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னதாகப் பாராட்டிப் பேசிய எம்.ஜி.ஆர். ‘திமுகவிடம் நிரம்ப எதிர்பார்த்துதான்   மக்கள் நமக்கு வோட்டளித்திருக்கிறார்கள். அவர்களை வாழ்விப்போம். ஏழை மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எந்தவிதமான நிபந்தனை, வற்புறுத்தல் எதுவும் இல்லாமல் தலைவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்போம்’ என்று குறிப்பிட்டார்.

தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மார்ச் 14, ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறேகால் மணிக்கு (நாலரை- ஆறு ராகுகாலம்!?) ஆளுநராக இருந்த உஜ்ஜல்சிங்கைச் சந்தித்து அமைச்சர்கள் பட்டியலைக் கொடுத்தார் கருணாநிதி.

மறுநாள் மாலையில் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் முதல்வர் மு. கருணாநிதி தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது. அமைச்சர்கள் உளமார உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, மார்ச் 16, செய்தியாளர்களுடன் கருணாநிதி பேசினார்.

‘நாடாளுமன்றத்தைக் கலைத்ததற்கு பிரதம மந்திரி கூறிய காரணமே சமதர்ம சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்ற உறுதியின் அடிப்படையில் என்றுதான். அதை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசின் சார்பில் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமோ அவைகளை எல்லாம் இங்கு ஆளுங்கட்சியாக உள்ள திமுக வலியுறுத்தும். இந்த அடிப்படையில் எடுக்கப்படுகின்ற முற்போக்கு நடவடிக்கைகள் அனைத்துக்கும் திமுக சார்பில் நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ள எங்கள் கட்சியினரின் எல்லாவகையான ஆதரவும் தரப்படும்.

‘நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே திராவிட முன்னேற்றக் கழகம் எந்த நிபந்தனையோடு இந்திரா அரசுக்கு ஆதரவு அளித்ததோ அதே அடிப்படையில்தான் இனியும் இந்திரா அரசாங்கத்திற்கு ஆதரவு தரும். ‘உறவுக்குக் கை கொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம்’ என்ற எங்களுடைய அறிவிக்கப்பட்ட கொள்கையில் சிறிதளவும் பின்வாங்குவதாக இல்லை. எங்கள் இரு கட்சிகளுக்குமிடையே முன்பு இருந்த உறவு அனைவரும் அறிந்ததே.

‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்று நாங்கள் வகுத்துள்ள கொள்கையில் எவ்வித மாற்றமுமில்லை.

‘ஹிந்தி பேசாத பகுதி மக்கள் தாங்களாகவே விரும்பி ஏற்றுக்கொள்கிற வரையில் ஆங்கிலமே மத்திய ஆட்சி மொழியாக நீடிக்கும் என்று மறைந்த பிரதமர் நேரு கொடுத்த உறுதிமொழிக்கு சட்ட வடிவம் கொடுக்க அரசியல் சட்டத்தைத் திருத்தும்படி மத்திய அரசை வற்புறுத்துவதற்காக திமுக செயற்குழுவும் பொதுக்குழுவும் விரைவில் கூடும்’ என்றார் மு. கருணாநிதி.

‘திரு. கருணாநிதியின் இரண்டாவது அமைச்சரவை பதவிப் பொறுப்பை ஏற்றுள்ளது. அதற்கு நல்வரவு கூறுகிறோம். நமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்த தினமணி தலையங்கம், மக்களின் வாழ்வு எல்லா வகைகளிலும் மலரக் கூடிய வகையில் நல்லாட்சியை நடத்திச்  செல்வார் என்று நம்புகிறோம்’ என்றும் குறிப்பிட்டிருந்தது.

‘தமிழ்நாட்டில் திமுக பெற்ற பெரு வெற்றிக்காக என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திமுக வெற்றி பெறும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் இவ்வளவு பெரிய மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றதற்காக என் ஆசியும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று சிறப்பாக வாழ்த்தியிருந்தார் கூட்டணிக் கட்சித் தலைவரும் பிரதமருமான இந்திரா காந்தி.

ஆனால், அதே அரசின் பதவிக்காலம் முடியுமுன்னரே, நெருக்கடி நிலைப் பிரகடனத்தைத் தொடர்ந்து, 1976, ஜன. 31-ல், முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசை – லஞ்ச ஊழல், அதிகார துஷ்பிரயோகம் எனக் கூறி - டிஸ்மிஸ் செய்து, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியதும் அதே இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசுதான்.

பிறகு, ஓராண்டு தள்ளிப்போய் 1977, ஜூன் மாதத்தில் – இடையில் மத்தியிலும் மாநிலத்திலும் ஏராளமான அரசியல் அதிரடிகள் – நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் நடந்த மற்றொரு மாபெரும் மாற்றம் என்ன? பார்க்கலாம்...

[தினமணி கருவூலத்தின் பக்கங்களிலிருந்து]

summary

Memories of the 1971 Tamil Nadu Legislative Assembly Elections... From Dinamani Archives...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.