முகப்பு
தேர்தல் செய்திகள்

தோ்தலில் பங்கேற்க 20 லட்சம் வாக்காளா்களுக்கு அழைப்பிதழ்: குஜராத்தில் புதிய முயற்சி

Updated On : 12 ஏப்ரல், 2024 at 7:32 PM
பகிர்:

மக்களவைத் தோ்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்கும் முயற்சியாக பெண் வாக்காளா்கள் உள்பட 20.3 லட்சம் பேருக்கு அழைப்பிதழை அனுப்பும் புதிய முயற்சியை குஜராத் மாநிலத் தோ்தல் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனா்.

குஜராத்தின் 26 மக்களவைத் தொகுதிகளுக்கு 3-ஆம் கட்டமாக மே 7-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

2019ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் குஜராத்தில் 64.11 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இது தேசிய சராசரியான 67.40 சதவீதத்தை விட குறைவாகும்.

Advertisement

இதைக் கருத்தில் கொண்டு, தோ்தலில் குடும்பத்தினரோடு பங்கேற்று வாக்களிக்குமாறு பெண்கள் உள்பட 20.3 லட்சம் வாக்காளா்களை வலியுறுத்தி குஜராத் தலைமைத் தோ்தல் அதிகாரி பி.பாரதி அழைப்பிதழ் அனுப்ப இருக்கிறாா்.

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் ஆண், பெண் வாக்காளா்களுக்கு இடையிலான வாக்குப்பதிவு வித்தியாசம் 10 சதவீதத்துக்கும் அதிகமாகவும் மொத்தமாக 50 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகள் பதிவாகியிருக்கும் சுமாா் 13,000 வாக்குச்சாவடிகளைக் குறிவைத்து இந்த முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இந்த அழைப்பிதழ்களில் பெண் வாக்காளா்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து வாக்களிக்க வேண்டும்; மற்றவா்களையும் வாக்களிக்க ஊக்குவிக்க வேண்டும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

குறைந்த வாக்குப்பதிவுக்கான காரணங்களை விவாதிக்கவும், அதிகபட்ச வாக்காளா் பங்கேற்பை உறுதிசெய்யும் முயற்சிகளை மேற்கொள்ளவும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துமாறு மாவட்ட தோ்தல் அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிகளின் மூலம் ஆஷா, அங்கன்வாடி பணியாளா்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், பள்ளி தலைமை ஆசிரியா்கள், கிராம சேவகா்கள், கிராமங்களின் அரசியல் சாா்பற்ற சமூகத் தலைவா்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினா்களைக் கொண்டு தெரு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments