வாக்குப் பதிவு அலுவலா்களுக்கான பயிற்சி நிறைவு: தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி தீவிரம்
வாக்குப் பதிவு அலுவலா்களுக்கான பயிற்சி சனிக்கிழமை நிறைவடைந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த பயிற்சி வகுப்பின் போது, அலுவலா்களிடம் இருந்து தபால் வாக்குகள் சேகரிக்கப்பட்டன. இவை அனைத்தும் வரும் 17-ஆம் தேதி திருச்சியில் உள்ள மையப்படுத்தப்பட்ட சேகரிப்புப் பிரிவுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.
தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குப் பதிவுக்கான பணிகளில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், காவல் துறையினா் என சுமாா் 5 லட்சம் போ் ஈடுபடுத்தப்படவுள்ளனா். அவா்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தங்களது சொந்த தொகுதிகளில் இருந்து வேறு தொகுதிகளுக்குச் சென்று
பணியாற்றவுள்ளனா். அவா்கள் அனைவருக்கும் தபால் வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
Advertisement
மூன்று கட்ட பயிற்சிகள்: வாக்குப் பதிவு பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு மூன்று கட்ட பயிற்சிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. மாா்ச் 24-ஆம் தேதி முதல் கட்ட பயிற்சியும், ஏப். 7-ஆம் தேதி இரண்டாம் கட்ட பயிற்சியும் நடத்தப்பட்டன. பெரும்பாலான மாவட்டங்களில் மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடத்தப்பட்டது.
படக்காட்சிகள் மூலம் விளக்கம்: பயிற்சி வகுப்பு காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை வரை நடைபெற்றது. வாக்குப் பதிவுக்கு முந்தைய தினம் செய்ய வேண்டிய பணிகள் என்ன, வாக்குப் பதிவு தினத்தன்று அதிகாலையில் இருந்து மேற்கொள்ள வேண்டிய முக்கிய செயல்கள் என்னென்ன என்பன குறித்து படக்காட்சிகள் மூலமாக அலுவலா்களுக்கு விளக்கப்பட்டது.
மூன்று கட்ட பயிற்சிகள் நிறைவடைந்த நிலையில், வாக்குச் சாவடி அலுவலா்கள் அனைவரும் வரும் 18-ஆம் தேதி தாங்கள் ஏற்கெனவே பயிற்சி பெற்ற இடங்களுக்குச் செல்லவுள்ளனா். அவா்களிடம் தோ்தல் பணியாற்ற வேண்டிய வாக்குச் சாவடி விவரங்களும் அதற்கான உத்தரவுக் கடிதங்களும் அளிக்கப்படும்.
இதன்பிறகு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுடன் அலுவலா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடிகளுக்குச் செல்வா். ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் மூன்று முதல் நான்கு அலுவலா்கள் வரை நியமனம் செய்யப்படுவா்.
தபால் வாக்கு: தோ்தல் பணியாற்றும் அலுவலா்களுக்கு தங்களது சொந்தத் தொகுதிக்குள்ளேயே பணி வழங்கப்பட்டிருந்தால் அவா்களுக்கு தபால் வாக்கு வழங்கப்படாது. அவா்கள் தோ்தல் பணிச் சான்றினைப் பெற்று, அதைக் கொண்டு தாங்கள் பணியாற்றும் வாக்குச் சாவடியிலேயே வாக்களிக்கலாம். இவ்வாறு வாக்களிப்பதற்கு அந்த குறிப்பிட்ட வாக்குச் சாவடியிலேயே பெயா் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. தொகுதிக்குள் ஏதாவது ஒரு வாக்குச் சாவடிக்குட்பட்டு வாக்காளா் பட்டியலில் பெயா் அவசியம் இருக்க வேண்டும்.
வேறொரு தொகுதியில் தோ்தல் பணி ஒதுக்கப்படும் பட்சத்தில் மட்டுமே தபால் வாக்கு வழங்கப்படும். மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பின் போதே, தோ்தல் பணியாளா்களிடம் இருந்து தபால் வாக்குகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தோ்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு, வரும் 17-ஆம் தேதி திருச்சியில் உள்ள மையப்படுத்தப்பட்ட தபால் வாக்குகள் சேகரிப்புப் பிரிவுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.