நீலகிரி: ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் சோதனை!
கல்லூரி மாணவர்கள், தேயிலை தொழிலாளர்களுடன் ராகுல் காந்தி உரையாற்றவுள்ளார்.
நீலகிரிக்கு வருகை தந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.
கேரள மாநிலம் வயநாட்டில் இன்று பிரசாரம் மேற்கொள்ளவுள்ள ராகுல் காந்தி, தமிழக எல்லையில் உள்ள நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேவுள்ள தாளூருக்கு ஹெலிகாப்டரில் வருகை தந்தார்.
தாளூரில் கல்லூரி மாணவர்கள், தேயிலை தொழிலாளர்களுடன் உரையாடும் ராகுல் காந்தி, தேவாலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.
இந்த நிலையில், ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக கடந்த 12ஆம் தேதி நெல்லை மற்றும் கோவையில் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவாக ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு ராகுல் காந்தி இன்று மீண்டும் தமிழகம் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.