பாலகாட்டில் மோடி, வயநாட்டில் ராகுல் பிரசாரம்!
கேரளத்தில் ஒரே சமயத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
பாலகாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பொதுக் கூட்டத்தில் பேசி வரும் நிலையில், வயநாட்டில் ராகுல் காந்தி சாலைப் பேரணியில் ஈடுபட்டு வருகிறார்.
மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்டத்தில் கேரள மாநிலத்துக்கு வருகின்ற 26-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி இன்று சாலைப் பேரணியில் ஈடுபட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
முன்னதாக, இன்று காலை நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டார்.
இந்த நிலையில், பாலகாடு மாவட்டத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி, பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
தொடர்ந்து, திருச்சூரில் வாக்கு சேகரிக்கும் மோடி, இன்று மாலை திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், புதன்கிழமையுடன் பிரசாரம் நிறைவடைவதால் தேசிய தலைவர்கள் இறுதி கட்ட பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர்.