மாலை 6.30 மணி: பாஜக 69, காங்கிரஸ் 32 தொகுதிகளில் வெற்றி
தேர்தல் முடிவுகள் வெளியிடுவதில் மந்தமாக இருப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு.
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், மாலை 6.30 மணி நிலவரப்படி 115 தொகுதிகளில் அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சூரத் மக்களவைத் தேர்தலில் ஏற்கெனவே போட்டியின்றி பாஜக வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது பாஜக 69, காங்கிரஸ் 32 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பாஜகவை சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, கிரண் ரிஜிஜு, அனுராக் தாக்குர், பிரஹலாத் ஜோஷி, ஜோதிராதித்யா சிந்தியா, கிஷன் ரெட்டி மற்றும் கங்கனா ரணாவத், பசவராஜ் பொம்மை, சுரேஷ் கோபி, மஜத குமாரசாமி உள்ளிட்டோர் வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், சசி தரூர், சரண்ஜித் சிங் சன்னி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளார்.
கட்சிவாரியாக வெற்றி விவரம்
பாஜக - 69
காங்கிரஸ் - 32
மதசார்பற்ற ஜனதா தளம் - 2
திரிணமூல் காங்கிரஸ் - 2
தெலுங்கு தேசம் - 1
ஆம் ஆத்மி - 1
மார்க்சிய கம்யூ. - 1
சிவசேனை(உத்தவ்) - 1
தேசியவாத காங்கிரஸ்(அஜித்) - 1
ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி - 1
மதச்சார்பற்ற இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா - 1
மக்கள் குரல் கட்சி - 1
சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா - 1
கன்ஷி ராம் ஆசாத் சமாஜ் கட்சி - 1
இதற்கிடையே, பல்வேறு இடங்களில் வாக்கு எண்ணிக்கை மந்தமாக இருப்பதாகவும், முடிவுகள் வெளியிடுவதில் தாமதப்படுத்துவதாகவும் காங்கிரஸ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
அதேபோல், மேற்கு வங்கத்தில் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரியை திரிணமூல் வேட்பாளர் யூசஃப் பதான் தோற்கடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் திண்டுக்கல்லில் மார்க்சிய கம்யூனிஸ்ட்டும், தருமபுரியில் திமுகவும் வெற்றி பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் இதுவரை வெளியிடவில்லை.