தேர்தல் செய்திகள்

கருத்துக் கணிப்புகளால் நேரிட்ட ரூ.31 லட்சம் கோடி இழப்பு! பங்குச்சந்தையில் நடந்தது என்ன?

தேர்தல் முடிவுகளையொட்டி பங்குச்சந்தை வர்த்தகம் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

DIN

நாடே தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கிக் காத்திருந்தபோது, பல செய்தி நிறுவனங்களும் காரசாரமான விவாதங்களை நடத்தினர். அப்படி, பிரபல செய்தி சேனலில் ஒரு விவாதம் நிகழ்கிறது. அதில் கலந்துகொண்டவர்கள், வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளுக்கும் தேர்தல் முடிவுகளுக்கும் இடையேயான வித்தியாசங்கள் குறித்து தங்கள் கருத்துகளைக் கூறுகின்றனர். அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக ஒருவர் மட்டும் நேரலையிலேயே அழுகிறார். அவர் ஆக்சிஸ் மை இந்தியா (Axis my india) என்கிற தரவு பகுப்பாய்வு (data analyst) நிறுவனத்தின் தலைவர் பிரதீப் குப்தா. ஏன் அவர் அழுதார்?

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுகள் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்ததும், கடந்த சனிக்கிழமை மாலை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின.

இக்கணிப்புகளில், ‘பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி, மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்கும்’ என பல செய்தி நிறுவனங்களும் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டன. மேலும், கருத்துக் கணிப்புகளில் கவனமாக கவனிக்கப்படும் ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி 361 - 401 இடங்களையும் இந்தியா கூட்டணி 133 - 166 இடங்களையும் பெறும் என தன் கணிப்புகளையும் வெளியிட்டது. தேர்தல் முடிவில், தன் நிறுவனத்தின் தவறான கணிப்பை நினைத்துதான் பிரதீப் குப்தா கண்ணீர்விட்டார்.

சரி இதற்கும் பங்குச்சந்தை தொடர்பான ஊழலுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? தொடர்பு இருப்பதாக அழுத்தமாகக் கூறுகிறார் திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் சாகேத் கோகலே. மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது எப்போதும் பங்குச்சந்தை சரிவைச் சந்திப்பது வழக்கம். ஆனால், இம்முறை பங்குச்சந்தை நிபுணர்களே கணிக்க முடியாத வீழ்ச்சியை தேசிய பங்குச்சந்தை கண்டது. குறிப்பாக, கருத்துக் கணிப்புகளில் பல நிறுவனங்களும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 350 தொகுதிகளுக்கும் மேல் வெல்லும் என்றே தெரிவித்தன.

இதனைத் தொடர்ந்து, திங்கள்கிழமை பங்குச்சந்தை வர்த்தகத்தில் பாஜகவின் வெற்றியைக் கணக்கில்கொண்டு ஆரம்பம் முதலே பலரும் வங்கிகள், பொதுத்துறை, ஐடி நிறுவனங்கள் மீது முதலீடு செய்ய துவங்கினர். வர்த்தக இறுதியில் பங்குச்சந்தை உச்சத்தைத் தொட்டது. அதாவது, பாஜகவின் அபாரமான வெற்றியைக் கருத்தில்கொண்டே இந்த முதலீடுகள் நிகழ்ந்தன.

ஆனால், நேற்று (ஜூன் 4) வாக்கு எண்ணிக்கையின்போது பாஜக தடுமாறுவதைக் கண்ட முதலீட்டாளர்கள் அவசரவசரமாக பங்குகளை விற்கத் துவங்கினர். இதனால், வல்லுநர்களின் கணிப்பையும் மீறி 6000 புள்ளிகள் வரை சென்செக்ஸ் வீழ்ச்சியை சந்தித்து ரூ.31 லட்சம் கோடி வரை பங்குச்சந்தை இழப்பும் ஏற்பட்டது.

பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் கருத்து கணிப்புகளை வெளியிட்ட நிறுவனங்களே இந்த இழப்பிற்குக் காரணம் எனக் கூறுகிறார் சாகேத் கோகலே. குறிப்பாக, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பாஜக 350 - 400 இடங்களை வெல்லும் என்றனர். ஆனால், முடிவுகளில் என்ன ஆனது? மொத்தம் 293 இடங்களை மட்டும் தேசிய ஜனநாயக்கக் கூட்டணி வென்றுள்ளது. இந்தப் போலி கருத்துக் கணிப்புகள் பங்குச்சந்தையில் திட்டமிட்டு ஊழலை ஏற்படுத்தவே உருவாக்கப்பட்டவை என குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து கோகலே வெளியிட்ட பதிவில், “பாஜகவின் (தேசிய ஜனநாயகக் கூட்டணி) எண்ணிக்கையை பெருமளவில் உயர்த்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் (குறிப்பாக ஆக்சிஸ் மை இந்தியா) குறித்து விசாரணை நடத்தக் கோரி செபிக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்.

வங்காளத்தில், பாஜகவுக்கு 26 - 31 இடங்கள் கிடைக்கும் என்று கணித்துள்ளனர். ஆனால், அங்கு வெறும் 12 இடங்களையே பெற்றது. இது 116 - 158% என்ற மிகைப்படுத்தல்.

கருத்துக்கணிப்புகளின் பின்னணியில், திங்கள்கிழமை பங்குச் சந்தைகள் பெருமளவில் உயர்ந்தன. நேற்றைய முடிவுகளுக்குப் பிறகு, சந்தைகள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்தன.

ஜூன் 3 ஆம் தேதி விற்பனையின் மூலம் லாபத்தை பதிவு செய்து, ஜூன் 4 ஆம் தேதி ஷார்ட் விற்பனை மூலம் இன்னும் அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்கள் உள்ளனவா என்பதை விசாரிக்குமாறு செபியிடம் கேட்டுள்ளேன். மேலும், இந்த நிறுவனங்களுக்கு பாஜகவுடனோ அல்லது ஆக்சிஸ் மை இந்தியா போன்ற கருத்துக்கணிப்பு அமைப்புகளுடனோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு உள்ளதா என்பதை விசாரிக்கவும் கேட்டிருக்கிறேன்.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பங்குச்சந்தையைக் கூட்டுவதற்கு தெளிவாக கையாளப்பட்டுள்ளன. இதனால், சந்தைகள் சரிவைச் சந்தித்த பின்னர் நேற்று பல லட்சம் கோடி முதலீட்டாளர்களின் பணம் அழிக்கப்பட்டது.

ஆக்சிஸ் மை இந்தியா போன்ற கருத்துக் கணிப்புகள் வேண்டுமென்றே பாஜகவின் கருத்துக் கணிப்புகளை ஊதிப் பெரிதாக்கினதா என்பதை அறிய விசாரணை நடத்தப்பட வேண்டும். ஏனென்றால், ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனத்தின் வாடிக்கையாளராக பாஜக உள்ளது.

இந்த கருத்துக் கணிப்புகளின் மூலம் பங்குச்சந்தைகளில் பாஜகவும், ஏதேனும் கருத்துக் கணிப்பு அமைப்புகளும் கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளனவா என்பதையும் விசாரணையில் உறுதிப்படுத்த வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பங்குச்சந்தையில் பெரிய ஆதிக்கம் செலுத்தியதையே ஜூன் 3 ஆம் தேதி காண முடிந்தது என்பதால், இக்கணிப்புகள் பங்குச்சந்தையில் இழப்பை ஏற்படுத்தி லாபம் பார்க்க உருவாக்கப்பட்டவையா என்கிற சந்தேகங்கள் பலருக்கும் எழுந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்திக்கு 7 நாள் அவகாசம்! அதற்குள்... -தேர்தல் ஆணையத்தின் காலக்கெடு!

அழகிய கண்ணே... ராஷா ததானி!

அரசியலமைப்பை நசுக்கியவர்களே, பாதுகாப்பதைப் போன்று நடிக்கின்றனர்: மோடி

பாகிஸ்தானில் மழைவெள்ள இடா்பாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 650-ஆக உயர்வு

பூங்காற்று... ஸ்ரேயா கோஷல்!

SCROLL FOR NEXT