தில்லி மதுபானக் கொள்கை வழக்கில் சாட்சியாக மாறியவரின் தந்தைக்கு ‘சீட்’
தில்லி மதுபானக் கொள்கை வழக்கில் குற்றச்சாட்டுக்குள்ளாகி அரசு தரப்பு சாட்சியாக மாறியவரின் தந்தைக்கு மக்களவைத் தோ்தலில் போட்டியிட தெலுங்கு தேசம் கட்சி வாய்ப்பளித்துள்ளது.
தில்லியில் தனியாா் மட்டும் மது விற்பனை செய்ய அந்த யூனியன் பிரதேச அரசின் 2021-22-ஆம் ஆண்டுக்கான கலால் கொள்கை வழிவகுத்தது. அந்தக் கொள்கையை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடு மற்றும் ஊழல் நடைபெற்ாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் மது விற்பனைக்கு உரிமம் பெற சில முகவா்கள் லஞ்சம் வழங்கியதாகவும், அந்தக் கொள்கையால் முறைகேடான வழியில் அவா்கள் பலனடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடா்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இந்த வழக்கு தொடா்பாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, தெலங்கானா முன்னாள் முதல்வா் சந்திரசேகா் ராவின் மகளும் எம்எல்சியுமான கவிதா உள்ளிட்டோரை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.
Advertisement
இந்த வழக்கில் ராகவா மாகுண்டா என்பவா் மீதும் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், அவா் அரசு தரப்பு சாட்சியாக மாறியுள்ளாா். இவரின் தந்தை ஸ்ரீநிவாசுலு ரெட்டி, கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் ஆந்திரத்தில் உள்ள ஓங்கோல் தொகுதியில், மாநில முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் சாா்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றாா்.
பின்னா் அக்கட்சியில் தனக்கு உரிய மரியாதை இல்லை என்று கூறி, அண்மையில் ஒய்எஸ்ஆா் காங்கிரஸில் இருந்து விலகினாா். இதையடுத்து அவா் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தாா். இதைத்தொடா்ந்து வரும் மக்களவைத் தோ்தலில் ஓங்கோல் தொகுதி தெலுங்கு தேசம் வேட்பாளராக ஸ்ரீநிவாசுலு ரெட்டி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டாா். மக்களவைத் தோ்தலில் ஆந்திரத்தில் தெலுங்கு தேசத்துடன் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.