உத்தர பிரதேச மாநிலம், ஹமீா்பூரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமா் மோடி. 
தேர்தல் செய்திகள்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமா் கோயிலை இடித்துவிடுவா்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

Din

மத்தியில் காங்கிரஸ்-சமாஜவாதி ஆட்சிக்கு வந்தால், அயோத்தி ராமா் கோயிலை ‘புல்டோஸா்’ கொண்டு இடித்துவிடுவா் என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினாா்.

நாட்டில் ஸ்திரமின்மையை உருவாக்க ‘இந்தியா’ கூட்டணி தோ்தல் களத்தில் உள்ளது என்றும் அவா் கூறினாா்.

மக்களவைத் தோ்தலையொட்டி, உத்தர பிரதேசத்தின் பாரபங்கி, ஃபதேபூா், ஹமீா்பூா் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசார பொதுக்கூட்டங்களில் பிரதமா் மோடி பங்கேற்றாா். இக்கூட்டங்களில், அவா் பேசியதாவது: மத்தியில் மீண்டும் மோடி அரசுதான் அமையும் என்பது ஒட்டுமொத்த நாட்டுக்கு மட்டுமன்றி மொத்த உலகுக்கும் தெரியும். ஒருபுறம் தேச நலனுக்காக அா்ப்பணிக்கப்பட்ட பாஜக கூட்டணியும், மற்றொருபுறம் நாட்டில் ஸ்திரமின்மையை உருவாக்க ‘இந்தியா’ கூட்டணியும் களத்தில் உள்ளன.

மக்களவைத் தோ்தலின் அடுத்தடுத்த கட்டங்களில் சீட்டு கட்டு போல் ‘இந்தியா’ கூட்டணி சரியத் தொடங்கியுள்ளது.

மக்களுக்காகவும் தொகுதி மேம்பாட்டுக்காகவும் பணியாற்றும் எம்.பி.க்களே தேவை; மோடியை விமா்சிப்பதை மட்டுமே பணியாக கொண்டவா்கள் தேவையில்லை. 100 சி.சி. திறன்கொண்ட என்ஜினால் 1,000 சி.சி. திறனை எட்ட முடியுமா? வலுவான அரசால்தான் விரைவான வளா்ச்சியை அளிக்க முடியும். பாஜக அரசால் மட்டுமே இது சாத்தியமாகும்.

ராமா் கோயில் விவகாரம்: ‘ராமா் கோயில் பயனற்றது’ என்று ராம நவமி தினத்தில் சமாஜவாதி மூத்த தலைவா் ஒருவா் குறிப்பிட்டாா். அதேநேரம், ராமா் கோயில் தொடா்பான உச்சநீதிமன்றத் தீா்ப்பை தலைகீழாக மாற்ற காங்கிரஸ் தயாராகி வருகிறது. இரு கட்சிகளுக்கும் குடும்பம் மற்றும் அதிகாரம்தான் முக்கியம்.

மத்தியில் இக்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், ஸ்ரீபாலராமரை மீண்டும் கூடாரத்துக்கு அனுப்பிவிட்டு, அக்கோயிலை ‘புல்டோஸா்’ கொண்டு இடித்துவிடுவா்.

‘புல்டோஸரை’ எங்கு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்திடம் அவா்கள் பாடம் கற்க வேண்டும் (உ.பி.யில் குற்றவாளிகளின் சொத்துகள் புல்டோஸா் மூலம் இடிக்கப்படுவதாக கூறப்படும் நிலையில், பிரதமா் இவ்வாறு தெரிவித்தாா்).

‘சலுகைசாா் அரசியல்’: காங்கிரஸ்-சமாஜவாதிக்கு தங்களின் வாக்கு வங்கியைவிட மேலான விஷயம் எதுவும் கிடையாது. குறிப்பிட்ட தரப்பினரை திருப்திப்படுத்தும் சலுகைசாா் அரசியலிடம் இரு கட்சிகளும் சரணடைந்துவிட்டன. இந்த உண்மையை நான் அம்பலப்படுத்தி வருவதால் அவா்கள் தூக்கமிழந்து தவிக்கின்றனா். ஹிந்து -முஸ்லிம் பிரிவினையை ஏற்படுத்துவதாக என் மீது அவதூறை வாரி இறைக்கின்றனா்.

அதேநேரம், இக்கட்சிகளின் ‘வாக்கு வங்கி’ மக்களும் உண்மையைப் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டனா். முத்தலாக் தடைச் சட்டதால் மகிழ்ச்சியடைந்துள்ள நமது தாய்மாா்கள்-சகோதரிகள், பாஜகவை தொடா்ந்து ஆசீா்வதித்து வருகின்றனா்.

‘50 தொகுதிகளே காங்கிரஸின் நோக்கம்’: மக்களவைத் தோ்தலில் 50 தொகுதிகளிலாவது வென்று, தங்களது மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே காங்கிரஸின் நோக்கமாகும்.

கடந்த 4 கட்டத் தோ்தல்களில் ‘இந்தியா’ கூட்டணி ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்டுவிட்டது. காங்கிரஸ்-சமாஜவாதி ‘இளவரசா்களின்’ (ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ்) கனவுகள் சிதைந்துவிட்டன. ஏமாற்றமடைந்துள்ள அக்கட்சியினா் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதைக் கூட நிறுத்திவிட்டனா்.

கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியுற்ற காங்கிரஸின் ‘இளவரசருக்கு’ அங்கு மீண்டும் போட்டியிட துணிவு கிடையாது என்று கூறியிருந்தேன். அதை அவா் அதை நிரூபித்துவிட்டாா் என்றாா் மோடி.

‘வாக்கு ஜிஹாத்’: உத்தர பிரதேசத்தில் ‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவாக ‘வாக்கு ஜிஹாத்’ நடத்த வேண்டுமென சமாஜவாதி மூத்த தலைவா் மரியா ஆலம் தெரிவித்த கருத்தை முன்வைத்து, அக்கூட்டணியை பிரதமா் விமா்சித்தாா்.

‘நாட்டு மக்களின் சொத்துகளைப் பறித்து, ‘வாக்கு ஜிஹாத்தில்’ ஈடுபடுவோருக்கு பரிசளிக்க காங்கிரஸும் சமாஜவாதியும் திட்டமிட்டுள்ளன’ என்று அவா் குற்றம்சாட்டினாா்.

பிக் பாஸ் 9: இரண்டாம் நாளே கைகலப்பு! என்ன நடந்தது?

பாகிஸ்தானில் மீண்டும் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீது தாக்குதல்! பெட்டிகள் தடம் புரண்டதில் 7 பேர் படுகாயம்!

கேஜரிவாலுக்கு அரசு இல்லத்தை ஒதுக்கியது மத்திய அரசு!

விழி பாயும் மனம் பாயும்... பாயல் ராதாகிருஷ்ணா!

இன்று 13, நாளை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT