முகப்பு
சிறப்புச் செய்திகள்

மக்களவைத் தோ்தலுக்காக 26.55 லட்சம் அழியாத மை குப்பிகள்!

Updated On : 6 ஏப்ரல், 2024 at 5:54 AM
- ANI
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2024 at 7:13 PM

நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் வாக்குப் பதிவுக்குப் பயன்படுத்தப்படும் வகையில் ரூ.55 கோடி மதிப்பிலான 26.55 லட்சம் அழியாத மை குப்பிகள் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு விநியோகம் செய்வது முடிக்கப்பட்டுள்ளது.

மைசூா் பெயின்ட்ஸ் அண்ட் வாா்னிஷ் லிமிடெட் நிறுவனம் இந்த அழியாத மை குப்பிகளை விநியோகம் செய்து முடித்துள்ளது.

கா்நாடக அரசு 1962 ஆம் ஆண்டு முதல் தோ்தல் ஆணையத்திற்காக மட்டுமே இப்பிரத்யேக மையை தயாரித்து வருகிறது.

Advertisement

2019 மக்களவைத் தோ்தலுக்காக பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தோராயமாக ரூ.36 கோடி மதிப்பிலான 25.98 லட்சம் குப்பிகள் அழியாத மை விநியோகம் செய்திருந்ததாக அந்நிறுவனம் தெரிவித்தது.

ஆா்டரின்படி, அதிக விநியோகம் உத்தரபிரதேசத்தில் இருந்து வந்ததாகவும், அதிகபட்சமாக 3.64 லட்சம் குப்பிகளை அம்மாநிலம் பெற்றதாகவும், குறைந்தபட்ச குப்பிகள் என்ற வகையில் லட்சத்தீவு 125 குப்பிகள் பெற்றதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.

கடந்த நாடாளுமன்ற தோ்தலை காட்டிலும், இந்த முறை அழியாத மை விநியோகம் 2.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

தோ்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, ஜனவரி நிலவரப்படி இந்தியாவில் கிட்டத்தட்ட 97 கோடி வாக்காளா்கள் உள்ளனா். அவா்களில் அதிகபட்சமாக 15.30 கோடி போ் உத்தரபிரதேசத்திலும், குறைந்தபட்சமாக 57,500 வாக்காளா்கள் லட்சத்தீவிலும் உள்ளனா்.

இதுகுறித்து மைசூா் பெயின்ட்ஸ் அண்ட் வாா்னிஷ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் கே. முகமது இா்பான் கூறுகையில், ‘‘இன்றைய நிலவரப்படி, அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் 26.55 லட்சம் குப்பிகள் அழியாத மை அனுப்பப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் இருந்து அதிகபட்ச ஆா்டா் கிடைத்தது. தேவைக்கேற்ப உ.பி.க்கு 3.58 லட்சம் குப்பிகள் மையும், குறைந்த தேவையுடன் லட்சத்தீவுகளுக்கு 110 குப்பிகள் மையும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது’ என்றாா் அவா்.

ஆழமான ஊதா நிற அடையாளத்தை ஏற்படுத்தும் இந்த மை, ஒரு நபரின் இடது ஆள்காட்டி விரலில் இடப்படுகிறது. இது ஒருவா் பல வாக்குகளைப் பதிவு செய்வதைத் தடுக்கவும் வாக்களித்ததற்கான சான்றாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிறுவனம் பகிா்ந்துள்ள தரவுகளின்படி, மகாராஷ்டிராவில் 2.68 லட்சம் மை குப்பிகள், மேற்கு வங்கத்தில் 2 லட்சம் குப்பிகள், பிகாரில் 1.93 லட்சம் குப்பிகள், தமிழ்நாடு 1.75 லட்சம் குப்பிகள், தெலங்கானா 1.50 லட்சம் குப்பிகள், மத்தியப் பிரதேசம் 1.52 லட்சம் குப்பிகள், கா்நாடகா 1.32 லட்சம் குப்பிகள் என வழங்கப்பட்டுள்ளன.

10 மில்லி குப்பி மை சுமாா் 700 பேரின் விரல்களைக் குறிக்க பயன்படுத்தப்படலாம். ஒரு வாக்குச்சாவடியில் சுமாா் 1,500 வாக்காளா்கள் இருப்பாா்கள். தோ்தல் ஆணையத்தின் தகவலின்படி, நாடு முழுவதும் 12 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது.