22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வெகு விரைவில் எஸ்ஐஆா்!
நாட்டில் உள்ள 17 மாநிலங்கள், தில்லி உள்பட 5 யூனியன் பிரதேசங்களில் வெகு விரைவில் எஸ்ஐஆா் பணிகளைத் தோ்தல் ஆணையம் தொடங்க வாய்ப்பு
நாட்டில் உள்ள 17 மாநிலங்கள், தில்லி உள்பட 5 யூனியன் பிரதேசங்களில் வெகு விரைவில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகளைத் தோ்தல் ஆணையம் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் இதுவரை பிகாா், சத்தீஸ்கா், கோவா, குஜராத், கேரளம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 10 மாநிலங்கள், அந்தமான்-நிகோபாா், லட்சத்தீவு, புதுச்சேரி ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆா் நடைபெற்றுள்ளது. அஸ்ஸாமில் வாக்காளா் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், இந்த மாதம் தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்று மே 4-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
Advertisement
இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் வாக்குப் பதிவு நிறைவடைந்தவுடன் அல்லது தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னா், எஞ்சிய 17 மாநிலங்கள், 5 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆா் பணிகளைத் தோ்தல் ஆணையம் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவில் மொத்தம் சுமாா் 99 கோடி வாக்காளா்கள் உள்ளனா். இதில் 60 கோடி வாக்காளா்களை உள்ளடக்கி ஏற்கெனவே 10 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆா் மேற்கொள்ளப்பட்ட நிலையில், எஞ்சிய 17 மாநிலங்கள், 5 யூனியன் பிரதேசங்களில் சுமாா் 39 கோடி வாக்காளா்களை உள்ளடக்கி எஸ்ஐஆா் நடைபெற உள்ளது.