வானதி சீனிவாசன் வேட்புமனு! ராஜஸ்தான் முதல்வர், அண்ணாமலை பங்கேற்பு!
பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வேட்புமனு தாக்கல் செய்தது பற்றி...
கோவை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும்.
இந்த நிலையில், கோவை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை அளித்தார்.
Advertisement
இவருடன் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட அண்ணாமலை விருப்பம் தெரிவித்ததால்தான் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக தாமதம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், வானதி சீனிவாசனின் வேட்புமனு தாக்கல் நிகழ்வில் அவர் கலந்துகொண்டுள்ளார்.
இதேபோல், சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.