முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் இருப்பை வலுப்படுத்தும் பாஜக!

தமிழகத்தில் பாஜகவை காலூன்ற மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் உறுதிபடக் கூறி வருகின்றன.

Updated On : 25 மார்ச், 2026 at 10:54 PM
பாஜக - பிரதிப் படம்
பகிர்:

தமிழகத்தில் பாஜகவை காலூன்ற மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் உறுதிபடக் கூறி வருகின்றன. ஆனாலும், இதைப் பொருட்படுத்தாமல் தமிழகத்தில் தனது இருப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை பாஜக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த 1998-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்முதல் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக் களம் காண்கிறது பாஜக. இதில் 2001தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு 21 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் 2.6 சதவீத வாக்குகளைப் பெற்ற பாஜக, 2024 மக்களவைத் தேர்தலில் 11.24 சதவீத வாக்குகளைப் பெற்று தமிழகத்தில் தனது வளர்ச்சியை உறுதி செய்தது.

இந்த நிலையில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அமைந்த அதிமுக- பாஜக கூட்டணியில் பாஜகவுக்கு மிக அதிக எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்புக்கேற்ப, இதுவரை இல்லாத அளவாக அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. வழக்கமாக கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள், தங்களது கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் கட்சியின் சின்னத்தில்தான் போட்டியிட அனுமதிக்கப்படும். ஆனால், புதிய உத்தியாக அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளை பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட வைத்திருக்கும் அந்தக் கட்சியின் முயற்சி அரசியல் கவனம் பெற்றுள்ளது.

பாஜக 27 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் நிலையில், கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமாகா 5 தொகுதிகளிலும், புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை தலா ஒரு தொகுதியிலும் தாமரை சின்னத்தில் போட்டியிடும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் பாஜகவின் தாமரை சின்னம் களம் காணும் தொகுதிகளின் எண்ணிக்கை தற்போது 34-ஆக உள்ளது.

இதில், தாமரை சின்னத்தில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்ட புரட்சி பாரதம் தங்கள் முடிவை விரைவில் அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளது. இதேபோல, 2 தொகுதிகளைப் பெற்றுள்ள இந்திய ஜனநாயக கட்சியும் விரைவில் தாங்கள் போட்டியிடும் சின்னம் குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.இருப்பினும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐந்தாவது பெரிய கட்சியாக 5 தொகுதிகள் ஒதுக்கீடு பெற்ற தமாகா, தாமரை சின்னத்திலேயே போட்டியிடும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மற்ற சிறிய கட்சிகள் மாற்று சின்னத்தில் போட்டியிட அனுமதிக்கப்பட வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

மேலும், இந்தக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய நீதிக் கட்சி, தென்னிந்திய பார்வர்டு பிளாக் போன்ற கட்சிகளும் தாமரை சின்னத்திலேயே போட்டியிட அனுமதிக்கப்படும் எனத் தெரியவருகிறது. இதன்மூலம், வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் ஏறத்தாழ 39 தொகுதிகளில் பாஜகவின் தாமரை சின்னம் களம் காணும் எனத் தெரிகிறது. இந்த நகர்வுகள் தமிழகத்தில் பாஜக தனது இருப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சியே என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.