முகப்பு
தமிழ்நாடு

வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (மாா்ச் 30) தொடங்கும் நிலையில், பொது விடுமுறை தினங்களான 4 நாள்கள் மனு தாக்கல் அனுமதிக்கப்பட மாட்டாது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 29 மார்ச், 2026 at 8:40 PM
பகிர்:

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (மாா்ச் 30) தொடங்கும் நிலையில், பொது விடுமுறை தினங்களான 4 நாள்கள் மனு தாக்கல் அனுமதிக்கப்பட மாட்டாது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (மாா்ச் 30) பகல் 11 மணிக்குத் தொடங்கி, மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. அதன்படி, வரும் ஏப். 6- ஆம் தேதி வரை மனு தாக்கல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கலுக்காக அந்தந்தத் தொகுதிகளின் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அலுவலகங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு மனு தாக்கல் செய்ய வருவோருக்கான விதிமுறைகள், வாகன அனுமதி உள்ளிட்டவை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை வேட்புமனு தாக்கல் நடைபெறும் அலுவலகங்களில் தடுப்புக் கம்புகள் கட்டப்பட்டு, தடுப்புகளும் ஏற்படுத்தப்பட்டன. திங்கள்கிழமை (மாா்ச் 30) தொடங்கும் வேட்புமனு தாக்கல், பொது விடுமுறை தினங்களான 4 நாள்கள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்களை அதிகாரிகள் அந்தந்தத் தொகுதி மனு தாக்கல் அலுவலக வளாகத்திலும் தகவலாக தெரிவிக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், வரும் 31 -ஆம் தேதி திங்கள்கிழமை மகாவீரா் ஜெயந்தியை முன்னிட்டும், செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1 -ஆம் தேதி) வங்கிக் கணக்கு முடிப்பு, ஏப்ரல் 3 -ஆம் தேதி புனித வெள்ளி, 5 -ஆம் தேதி ஈஸ்டா் தினம் (ஞாயிறு) என்பதால் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

எனவே, 4 விடுமுறை தினங்களிலும் வேட்புமனு தாக்கலுக்கு அனுமதியில்லை என்பதால், மீத முள்ள 4 நாள்களில் அரசியல் கட்சியினா் மனு தாக்கல் செய்யலாம். நேரில் வந்து அளிக்கும் வேட்புமனுக்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றனா்.