கவனம் ஈர்த்த திருப்பூர் வடக்கு!
தேர்தல்களின்போது வேட்புமனு தாக்கல் என்பது எப்போதுமே ஒரு தனி சுவாரஸ்யம்தான்.
தேர்தல்களின்போது வேட்புமனு தாக்கல் என்பது எப்போதுமே ஒரு தனி சுவாரஸ்யம்தான். அந்த வகையில், 2011 பேரவைத் தேர்தலின்போது திருப்பூர் வடக்கு தொகுதியில் அரங்கேறிய நிகழ்வு தமிழக அரசியல் வரலாற்றில் மறக்க முடியாததாக அமைந்தது.
2011-ஆம் ஆண்டு திருப்பூர் மக்களுக்கு ஒரு பெரும் நெருக்கடியான காலகட்டமாக அமைந்திருந்தது. சாயக்கழிவுகளைச் சுத்திகரிக்காமல் வெளியேற்றுவதைத் தடுக்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவால் திருப்பூரைச் சுற்றியுள்ள அனைத்து சாய ஆலைகளும் ஒட்டுமொத்தமாக மூடப்பட்டன. இதனால் திருப்பூரின் ஆணிவேரான பின்னலாடைத் தொழிலும் முடங்கியதுடன், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து, நகரின் பொருளாதாரமே ஸ்தம்பித்தது. இத்தகைய கொந்தளிப்பான சூழ்நிலையில்தான் 2011 சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
தங்கள் வாழ்வாதாரப் பிரச்னையை அரசு மற்றும் தமிழக மக்களின் கவனத்துக்கு கொண்டுசெல்லும் வகையில், திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு என்ற அமைப்பு 2011 தேர்தலை பெரிய ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டது. அதன்படி, அந்த அமைப்பினர் திருப்பூர் வடக்குத் தொகுதியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை சுயேச்சையாகக் களமிறக்கத் திட்டமிட்டனர். இதன் விளைவாக, ஒரே தொகுதியில், ஒரே காரணத்துக்காக அடுத்தடுத்து சுமார் 140 பேர் சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். தேர்தல் வைப்புத்தொகையை, வேலையிழந்த தொழிலாளர்களிடம் தலா ஒரு ரூபாயாகப் பெற்ற சில்லறைக் காசுகளை மூட்டையில் கட்டி வந்து செலுத்தியது ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்தது.
140 பேரின் வேட்புமனு தாக்கலால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியைச் சமாளிக்க, அப்போதைய பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தங்களது கூட்டணிக் கட்சிகளுடன் அவசரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. தேர்தலுக்குப் பிறகு சாயக்கழிவு பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காணப்படும் என்றும், அரசே கழிவுநீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தைப் பரிசீலிக்கும் என்றும் இரு பிரதான கட்சிகளும் ஆணித்தரமான வாக்குறுதியை அளித்தன. தங்களின் கோரிக்கை பிரதான கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் எதிரொலித்ததை அடுத்து, அந்த 140 வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றனர்.
வேட்புமனுக்கள் வாபஸ் பெறப்பட்டாலும், அப்போதைய ஆளுங்கட்சியான திமுக, இந்த பிரச்னையை முன்கூட்டியே கையாளத் தவறிவிட்டது என்ற எண்ணம் மக்களிடையே மேலோங்கியிருந்தது. இதன் விளைவு, திருப்பூர் வடக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் சுமார் 73,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தார். அந்த தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட சி.கோவிந்தசாமி தோல்வியடைந்தார். சி.கோவிந்தசாமி தான் நீண்டநெடுங்காலம் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து திமுகவுக்கு மாறியதால் தொழிலாளர்களிடையே ஏற்பட்ட அதிருப்தியும் அவரது தோல்விக்கு மற்றுமொரு காரணமாகும்.
- ந.தமிழ்ச்செல்வன்