பென்னாகரம் பேருந்து நிலையம் 
தொகுதிகள்

பென்னாகரம்: பாமகவால் வலுவடையும் அதிமுக கூட்டணி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் தொகுதியானது இதுவரை 14 சட்டப்பேரவைத் தேர்தல்களையும், ஒரு இடைத் தேர்தலையும்  எதிர்கொண்டுள்ளது.

த. சுரேஷ்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்று பென்னாகரம். கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்தில் காவிரி ஆறு நுழையும் இடமான ஒகேனக்கல் பகுதி இந்தத் தொகுதியில்தான் அமைந்துள்ளது.

வாக்காளர்கள் விவரம்:

ஆண்கள்: 1,26,960 
பெண்கள்:  1,18,368
மூன்றாம் பாலினத்தவர்: 10  
மொத்தம்:  2,45,338 

மலைக் கிராமமான கோட்டூர் மலைக்கு குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்களைச் சுமந்துசெல்லும் கழுதைகள் 

நில அமைப்பு:

பென்னாகரம் தொகுதி அடர்ந்த மலைகள் சூழ்ந்து, கரடுமுரடான பகுதிகளைக் கொண்டது. இதில் பென்னாகரம், ஒகேனக்கல், பெரும்பாலை உள்ளிட்ட வனச்சரகங்களை கொண்டமையால் 60 % மலைப்பகுதிகளில் சார்ந்தது.

தொகுதியின் பகுதிகள்:

பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதி 1952-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இத் தொகுதியில் பாப்பாரப்பட்டி, பென்னாகரம் ஆகிய பேரூராட்சிகளும், பென்னாகரம் ஒன்றியத்தில் உள்ள 33 கிராம ஊராட்சிகளும் இருந்தன. பென்னாகரம் ஒன்றியத்திலிருந்து நிர்வாகக் காரணத்துக்காக ஏரியூர் ஒன்றியம் அண்மையில் பிரிக்கப்பட்டு 12 கிராம ஊராட்சிகள் ஒதுக்கப்பட்டன.

2011 தொகுதி சீரமைப்பின்போது, பாலக்கோடு பகுதியில் இருந்து 10 கிராம ஊராட்சிகளும், புலிக்கரை பகுதியில் இருந்து 4 கிராம ஊராட்சிகளும் பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் இணைக்கப்பட்டன. 

சமூக நிலவரம்:

இத்தொகுதியில் வன்னியர்கள் அதிகம். ஆதிதிராவிடர், நாடார், செட்டியார், சிறுபான்மையினர், பழங்குடியின மலைவாழ் மக்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்தத் தொகுதி மக்கள் பெரும்பாலோர் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்கின்றனர். மேலும் மீன் பிடித்தல், புளி பதம் செய்தல், நெசவு செய்தல், ஆடு மற்றும் மாடுகள் வளர்த்தல் ஆகிய தொழில்களை பென்னாகரம் தொகுதி மக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

பென்னாகரம் பகுதியில் போதுமான வேலைவாய்ப்பு இல்லாததால் அதிக அளவில் வெளி மாநிலம், வெளி மாவட்டங்களுக்கு வேலை தேடிச் செல்லும் இளைஞர்கள் அதிகளவில் உள்ளனர். 

மழைக் காலத்தில் வெள்ளப்பெருக்கு

இதுவரை நடைபெற்ற தேர்தல்கள்:

இதுவரை பென்னாகரம் தொகுதி, 14 சட்டப்பேரவைத் தேர்தல்களையும், ஒரு இடைத் தேர்தலையும் எதிர்கொண்டுள்ளது. முதல் தேர்தலில் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி சார்பில் கந்தசாமி வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களில் திமுக 4 முறையும், அதிமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகள் தலா 2 முறையும், ஜனதா கட்சி, காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டவை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. 1989-இல் நடைபெற்ற தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட ந.நஞ்சப்பன் வெற்றி பெற்றார்.

2006 ஆம் ஆண்டில் திமுக சார்பில் வெற்றி பெற்ற பி.என். பெரியண்ணன் உடல்நலக் குறைவால் உயிரிழந்ததால், பென்னாகரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் அவரது மகன் பி.என்.பி.இன்பசேகரன் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2016 ஆம் ஆண்டு தேர்தல்:

பி.என்.பி. இன்பசேகரன் (திமுக) 76,848 வெற்றி
அன்புமணி ராமதாஸ்  (பாமக) 58,402
கே.பி. முனுசாமி (அதிமுக) 51,687
நஞ்சப்பன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) 5,624                        

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்:

இந்தத் தொகுதி திமுக வசம் உள்ளதால், மாவட்டத்தின் பிற தொகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளைக் காட்டிலும் பென்னாகரம் தொகுதியில் குறைந்த அளவில் மட்டுமே திட்டப்பணிகள் நடைபெற்றுள்ளன.

பென்னாகரம் பகுதியில் சாலைப் பணிகள், சாக்கடை கால்வாய் வசதிகள் ஆகிய பணிகள் இன்றளவும் முழுமையடையாமல் உள்ளன. வழக்கமான நலத்திட்டங்கள் மட்டும் இத்தொகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

நிறைவேற்றப்படாத திட்டங்கள்:

காவிரியின் மிகை நீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் நிரப்ப வேண்டும் என்பது மாவட்ட மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கை. காவிரி உபரி நீர் திட்டத்தைச் செயல்படுத்துவதாக தேர்தலின்போது மட்டுமே கட்சிகள் வாக்குறுதி அளிக்கின்றன. ஆனால் தற்போது வரை இத்திட்டம் கானல் நீராகவே உள்ளது.

பென்னாகரம் தொகுதியில் பாப்பாரப்பட்டி, ஏரியூர், பெரும்பாலை, ஒகேனக்கல் உள்ளிட்ட  பகுதிகளில் பட்டதாரி இளைஞர்கள் அதிக அளவில் உள்ளனர். பென்னாகரம் பகுதி இளைஞர்களின் நலன் கருதி திமுக ஆட்சியின்போது பருவதனஅள்ளி பகுதியில் சிட்கோ தொழிற்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டது. 2011 தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், சிட்கோ தொழிற்சாலை முழுமை பெறாமல் உள்ளது.

தமிழகத்தின் முதன்மை சுற்றுலாத் தலமும், தென்னகத்தின் நயாகரா என்று அனைவராலும் வர்ணிக்கப்படும் ஒகேனக்கல் அருவி பகுதி உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதற்கான தொடக்கப் பணிகள் கூட நடைபெறவில்லை. 

தொகுதி மக்களின் முக்கிய பிரச்னைகள்:

பென்னாகரம் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகள் மலைகள் சார்ந்த கிராமப் பகுதிகளாக உள்ளன. இந்த கிராமப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் சாலை வசதி, குடிநீர், மற்றும் மருத்துவ வசதி உள்ளிட்டவை கிடைப்பதில்லை.

பென்னாகரம் அரசு மருத்துவமனை 10 ஆண்டுகளுக்கு முன்னர் மாவட்டத் தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு,  பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டது. இருந்தபோதிலும் போதுமான மருத்துவர்களை நியமிக்கப்படாததால்,  இந்த மருத்துவமனைக்கு வரும் உள்நோயாளிகளை 30 கி.மீ. தொலைவில் உள்ள தருமபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கே அனுப்புகின்றனர்.

பென்னாகரம் தொகுதிக்கு உள்பட்ட வட்டுவன அள்ளி ஊராட்சியில் அமைந்துள்ள கோட்டூர் மலை, அலங்கட்டு, ஏரிமலை உள்ளிட்ட மலைக் கிராமத்துக்கு இன்றுவரை சாலை வசதி ஏற்படுத்தாததால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

பென்னாகரம் பகுதிகளில் கம்பு, ராகி, சோளம், நிலக்கடலை, கேழ்வரகு உள்ளிட்ட சிறு தானிய வகைகளை பெருமளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.  இவற்றுக்கு வெளிமாநிலங்களில் அதிக வரவேற்பு உள்ளதால், இதற்கென பென்னாகரம் அல்லது சின்னம்பள்ளி பகுதியில் உணவுப் பூங்கா அமைக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

பாப்பாரப்பட்டி, ஏரியூர், நாகமரை, பெரும்பாலை பகுதிகளில் அதிக அளவில் சாமந்தி, சம்பங்கி, செவ்வரளி, மல்லிகை மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இதற்கென அரசின் சார்பில் விற்பனை நிலையமும் மலர்களை பதப்படுத்தி வைக்கும் கிடங்குகளும் அமைக்க வேண்டும் என்பதும் நீண்டநாள் கோரிக்கை.

தருமபுரி - சேலம் மாவட்டத்தை இணைக்கும் வகையில் ஒட்டனூர் பகுதியிலிருந்து பண்ணவாடி பகுதிக்கு காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் அமைக்க வேண்டும்.

ஏரியூர் பகுதியில் இருந்து சுமார் 70 கி.மீ. தொலைவில் உள்ள தருமபுரி பகுதிக்கும், 40 கி.மீ. தொலைவில் உள்ள சேலம் மாவட்டத்திற்கும் உயர்கல்வி பயில மாணவர்கள் நீண்ட நெடிய பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதைத் தவிர்க்கும் வகையில் ஏரியூர் பகுதியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும்.

கோடைக் காலங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை பென்னாகரம் தொகுதியில் உள்ள அனைத்து கிராம பகுதிகளுக்கும் விநியோகிக்கும் வகையில் முழுமையான வசதி ஏற்படுத்த வேண்டும் என்பதும் மக்களின் எதிர்பார்ப்பு.

அரசியல் நிலவரம்:

பென்னாகரம் தொகுதியில் வன்னியர்கள் 45 சதவீதம் பேர் உள்ளனர். இதனால் பென்னாகரம் தொகுதி பாமக செல்வாக்கு மிகுந்த பகுதியானது. ஆனால் கடந்த 2016 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் பென்னாகரம் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்ட அந்த கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக சார்பில் போட்டியிட்ட பிஎன்பி இன்பசேகரன் வென்றார்.

பென்னாகரம் பகுதிகளில் திமுகவும், பாப்பாரப்பட்டி பகுதிகளில் அதிமுகவும், ஏரியூர் பகுதியில் பாமகவும் செல்வாக்குடன் உள்ளன.

கடந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலின் போது திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இன்பசேகரன் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளது.

அதிமுக கூட்டணியில் பாமக இத்தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்புகள் உள்ளன. ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமகவைச் சேர்ந்த கவிதா பென்னாகரம் ஒன்றிய குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பாமக சார்பில் மீண்டும் அன்புமணி ராமதாஸ் அல்லது  பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி போட்டியிட அதிக வாய்ப்புகள் உள்ளன.

தற்போதைய தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக சேர்ந்துள்ளதால் அதிமுக அணி வலுவாகக் காணப்படுகிறது.            

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளமை வானிலே... பார்த்திபா!

அன்பின் நிமித்தம்... ராஷி சிங்!

அழகும் அமுதும்! - ஜெனிலியா

அழகிய நதி... மாளவிகா மோகனன்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சுதர்ஷன் ரெட்டிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் முழு ஆதரவு!

SCROLL FOR NEXT