முகப்பு
வணிகம்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி! ரூ. 92.35 ஆகச் சரிவு!!

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்துள்ளது பற்றி...

Updated On : 9 மார்ச், 2026 at 2:15 PM
கோப்புப் படம் - ANI
பகிர்:

இன்றைய வர்த்தக நேர முடிவில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 92.35 ஆக கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் உலக நாடுகளும் கலக்கத்தில் உள்ளன. ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுப்படைகள் தீவிரப்படுத்தியுள்ளதையடுத்து அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முக்கிய கடல் போக்குவரத்து வழித்தடமான ஹோர்முஸ் ஜலசந்தி நீரிணையை ஈரான் மூடியுள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி தடைபட்டுள்ளது.

இதனால் உலக வரலாற்றில் கச்சா எண்ணெய் விலை ஒரேநாளில் 25% உயர்ந்து ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 115 டாலராக உயர்ந்துள்ளது. இதன் விலை 150 டாலர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணிக்கின்றனர். இதனால் எண்ணெய் அதிகம் கொள்முதல் செய்யும் இந்தியா போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

Advertisement

கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ரூ. 92.22 என வர்த்தகம் தொடங்கிய நிலையில் வர்த்தக முடிவில் ரூ. 92.35 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது .

கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக நேர முடிவில் ரூபாயின் மதிப்பு ரூ. 91.82 ஆக இருந்த நிலையில் மேலும் 53 பைசா சரிந்து ரூ. 92.35ல் நிறைவு பெற்றது.

கச்சா எண்ணெய் விலை உயர்வால் உலகளவில் டாலர் மதிப்பு அதிகரித்து வருவதனால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது.

கடந்த 2010ல் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 46.67 ஆகவும் 2020ல் ரூ. 76 ஆகவும் 2025ல் ரூ. 90 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்திய பங்குச்சந்தைகளும் இன்று கடும் சரிவைச் சந்தித்துள்ளன. இன்று மட்டும் ரூ. 8.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Indian rupee hits record low against US dollar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.