தொகுதியின் சிறப்புகள்
திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் ஒன்றான வந்தவாசி(தனி) தொகுதி கிராம பகுதிகளை உள்ளடக்கியதாகும். பல ஆண்டுகளாகவே பின்தங்கிய நிலையில் உள்ள இந்த தொகுதியில் விவசாயம், கோரைப்பாய் தயாரிப்பு ஆகியவையே பிரதான தொழிலாக உள்ளது. மேலும் நெல், கரும்பு பயிர்களே அதிகம் பயிரிடப்படுகிறது.
சுமார் 261 ஆண்டுகளுக்கு முன் வந்தவாசி கோட்டையில் ஆங்கிலேய படையினருக்கும், பிரெஞ்ச் படையினருக்கும் இடையே நடந்த போர் வரலாற்று நிகழ்வாக உள்ளது. இந்த தொகுதிக்கு உள்பட்ட வெண்குன்றம் கிராமத்தில் சுமார் 1500 அடி உயரம் கொண்ட தவளகிரி மலை மீதுள்ள ஸ்ரீதவளகிரீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா வெகு பிரசித்தம் ஆகும்.
மேலும் தென்னாங்கூரில் உள்ள ஸ்ரீபாண்டுரங்கர் கோயில், மாம்பட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் மற்றும் புகழ்பெற்ற மசூதிகள், தேவாலயங்கள் உள்ளன.
தொகுதி அமைப்பு
வந்தவாசி(தனி) தொகுதியில் வந்தவாசி நகராட்சி, தேசூர் பேரூராட்சி, பெரணமல்லூர் பேரூராட்சி மற்றும் சோழவரம், நம்பேடு, ஆணைபோகி, விளாநல்லூர், ஆயிலவாடி, கீழ்க்கொவளைவேடு, சின்ன சேத்பட், தெள்ளூர், புலிவாய், தென்னாங்கூர், காரம், கொசப்பட்டு, ஒழப்பாக்கம், ஆரியாத்தூர், விளாங்காடு, இரும்பேடு, கொவளை, கீழ்நர்மா, கீழ்ப்பாக்கம், சாத்தனூர், கோயில்குப்பம், வழூர், விழுதுப்பட்டு, தழுதாழை, சளுக்கை, தாழம்பள்ளம், வெண்குன்றம், மும்முனி, காரணை, தென்சேந்தமங்கலம், எறும்பூர், தென்ஆளப்பிறந்தான், மேல்செம்பேடு, ஊர்குடி, வல்லம், வடுகமங்கலம், செப்டாங்குளம், அரியப்பாடி, இஞ்சிமேடு, சந்திரம்பாடி, கட்டமங்கலம்,
மோசவாடி, தாடிநொளம்பை, கோதண்டபுரம், தென்கரை, வடவணக்கம்பாடி, மேல்பாதி, தக்கண்டராயபுரம், ஆராசூர், மாம்பட்டு, கீழ்சாத்தமங்கலம், பாதிரி, சென்னாவரம், பிருதூர், மங்கநல்லூர், அகரம், மேல்கொடுங்காலூர், கீழ்க்கொடுங்காலூர், காவேடு, உளுந்தை, சாலவேடு, மங்கலம், மாமண்டூர், மருதாடு, கொடநல்லூர், சேதராக்குப்பம், செம்பூர், இளங்காடு, ஆவணவாடி, வங்காரம், கீழ்வெள்ளியூர், கடம்பை, மழையூர், ஏந்தல், மாணிக்கமங்கலம், ரெட்டிக்குப்பம், ரகுநாதசமுத்திரம், கோழிப்புலியூர், கல்யாணபுரம், ஆளியூர், சோலையருகாவூர், செங்கம்பூண்டி, கண்டவரட்டி, கூத்தம்பட்டு, பொன்னூர், நல்லேரி, ஜம்மம்பட்டு, நடுக்குப்பம், ஏரிப்பட்டு, அத்திப்பாக்கம், நாவல்பாக்கம், கீழ்வில்லிவலம், மழுவங்கரணை, புன்னை, கொட்டை, வெளியம்பாக்கம், கீழ்சீசமங்கலம், கருடாபுரம், சீயாளம்,
அம்மணம்பாக்கம், பாதூர், அதியனூர், அதியங்குப்பம், ஓசூர், நெல்லியாங்குளம், ஸ்ரீரங்கராஜபுரம், கண்டியநல்லூர், ராமசமுத்திரம், சோகத்தூர், ஏம்பலம், தென்வணக்கம்பாடி, ஜப்திகாரணி, சோரப்புத்தூர், கீழ்புத்தூர், திரக்கோயில்,தேத்துரை, சாத்தம்பூண்டி, பெருங்கடபுத்தூர், அரியம்பூண்டி, மடம், இசாகொளத்தூர், கோட்டுப்பாக்கம், மேலச்சேரி, நல்லடிசேனை, தென்னாத்தூர், சீயமங்கலம், தென்தின்னலூர், சிவனம், பாப்பநல்லூர், தெள்ளார், மீசநல்லூர், எரமலூர், மூடூர், காவணியாத்தூர், கல்பட்டுநைனாங்குப்பம், எய்ப்பாக்கம், வெண்மந்தை, கீழ்செம்பேடு, அமுடூர், பாதூர், தெய்யார், கொடியாலம், கூடலூர், கூத்தவேடு, அகரகொரக்கோட்டை, கூனம்பாடி, பாஞ்சரை, ஆச்சமங்கலம், சித்தருகாவூர், கீழங்குணம், கெங்கம்பூண்டி, அருந்தோடு, வயலூர், பூங்குணம், வடக்குப்பட்டு, மகமாயிதிருமணி, வெடால், குண்ணகம்பூண்டி, நெற்குணம், கீழ்நமண்டி, கொரக்கோட்டை, சேனல், பென்னாட்டகரம், இரும்பிலி, பழவேரி, சு.காட்டேரி, அருங்குணம், மாவளவாடி, டி.தாங்கல், சத்தியவாடி ஆகிய கிராமங்கள் உள்ளன.
சமூக நிலவரம்
இந்த தொகுதியில் வன்னியர், தாழ்த்தப்பட்டோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் உள்ளனர். அடுத்தபடியாக முதலியார், யாதவர், இஸ்லாமியர் சமூகத்தினரும், அதற்கடுத்தபடியாக பிற சமூகத்தினரும் உள்ளனர்.
வாக்காளர் விவரம்
வந்தவாசி(தனி) சட்டப்பேரவை தொகுதியில் 1,18,230 ஆண் வாக்காளர்கள், 1,21,439 பெண் வாக்காளர்கள், ஒரு இதர வாக்காளர், 116 சர்வீஸ் வோட்டர்ஸ் என மொத்தம் 2,39,786 வாக்காளர்கள் உள்ளனர்.
இதுவரை வெற்றி பெற்றவர்கள்
1952 சோமசுந்தர கவுண்டர், டி.தசரதன்.
1957 எம்.ராமச்சந்திர ரெட்டியார், டி.தசரதன்.
1962 எஸ்.முத்துலிங்கம் (திமுக).
1967 எஸ்.முத்துலிங்கம் (திமுக).
1971 வி.ராஜகோபால் (திமுக).
1977 பி.முனுசாமி (அதிமுக).
1980 சி.குப்புசாமி (அதிமுக).
1984 எ.ஆறுமுகம் (காங்கிரஸ்).
1989 வி.தன்ராஜ் (திமுக).
1991 செ.கு.தமிரழசன் (அதிமுக).
1996 பால ஆனந்தன் (திமுக).
2001 கே.முருகவேல்ராஜன் (பாமக).
2006 எஸ்.பி.ஜெயராமன் (திமுக).
2009 ஜெ.கமலக்கண்ணன் (திமுக)(இடைத்தேர்தல்).
2011 வி.குணசீலன் (அதிமுக).
2016 எஸ்.அம்பேத்குமார் (திமுக).
கடந்த தேர்தலில் பிரதான கட்சிகள் பெற்ற வாக்குகள்
எஸ்.அம்பேத்குமார் (திமுக): 80,206.
வி.மேகநாதன் (அதிமுக): 62138.
வடிவேல்ராவணன் (பாமக): 24,277.
எம்.கே.மேத்தாரமேஷ் (விசிக): 7,745.
நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள்
இந்த தொகுதியில் பெரிய தொழிற்சாலை எதுவும் இல்லாததால் தொழில் வாய்ப்புகள் கிடையாது. இந்த தொகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அருகில் உள்ள செய்யாறு சிப்காட் தொழிற்பேட்டைக்கும், படப்பை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் வேலைக்குச் செல்கின்றனர். பின்தங்கிய இந்த தொகுதியை இதுவரை யாரும் முன்னேற்றவில்லை. எனவே இந்த தொகுதியில் தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் சிப்காட் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.
வந்தவாசி என்றாலே நினைவுக்கு வரும் அளவுக்கு வந்தவாசியில் தயாராகும் கோரைப்பாய்கள் பிரசித்தி பெற்றவையாகும். இந்த தொழிலை நம்பி நூற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளது. ஆனால் பாய்க்கு உரிய விலை கிடைப்பதில்லை. எனவே பாய் கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும், வந்தவாசியை பாய் நகரமாக அறிவிக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.
தற்போது வந்தவாசி நகரில் வந்தவாசி-ஆரணி-செய்யாறு சாலையையும், சேத்பட் சாலையையும் இணைக்கும் புறவழிச்சாலை ஒன்று மட்டுமே உள்ளது. இந்த தொகுதியில் உள்ள தென்னாங்கூர் ஸ்ரீபாண்டுரங்கன் கோயிலுக்கும், மாம்பட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலுக்கும் வெளிமாநில பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
மேலும் அருகில் உள்ள மேல்மருவத்தூர் கோயிலுக்கும் வந்தவாசி வழியாக வெளிமாநில பக்தர்கள் அதிகளவில் செல்கின்றனர். மேலும் தென்மாவட்டங்களிலிருந்து திருப்பதி மற்றும் காஞ்சிபுரத்துக்கு செல்லும் வாகனங்கள் வந்தவாசி வழியாகத்தான் செல்கின்றன. இதனால் வந்தவாசி நகரில் அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வந்தவாசி நகரைச் சுற்றி வெளி சுற்றுவட்ட சாலை அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
திண்டிவனத்திலிருந்து வந்தவாசி வழியாக நகரி செல்லும் ரயில் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வெண்குன்றம் கிராமத்தில் சுமார் 1500 அடி உயரம் கொண்ட தவளகிரி மலை மீதுள்ள ஸ்ரீதவளகிரீஸ்வரர் மலைக்கோயிலுக்கு புதிய படிக்கட்டுகள் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். வந்தவாசியை ஒட்டிச் செல்லும் சுகநதியை தூய்மைபடுத்தி அதில் படகு குழாம் அமைக்க வேண்டும். சுகநதியில் தேவையான தடுப்பணைகளை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.
சுமார் 261 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேய படையினருக்கும், பிரெஞ்ச் படையினருக்கும் இடையே வந்தவாசி கோட்டையில் நடந்த உலக பிரசித்தி பெற்ற போரின் காரணமாக அந்த கோட்டை சிதிலமடைந்தது. வரலாறு சிறப்பு வாய்ந்த இந்த கோட்டையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வந்தவாசி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு வருபவர்களுக்கு முதலுதவி சிகிச்சை மட்டுமே அளிக்கப்படும் நிலை உள்ளது. எனவே இந்த மருத்துவமனையை தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக உள்ளது.
மேலும் தெள்ளாரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்க வேண்டும். மங்கலம் மாமண்டூரில் மூடிக் கிடக்கும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை மீண்டும் திறந்து செயல்படுத்த வேண்டும் ஆகியவையும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
போட்டியிட வாய்ப்பு:
எம்ஜிஆர் அதிமுகவை தோற்றுவித்த பின்னர் நடந்த ஒரு இடைத்தேர்தல் உள்ளிட்ட 11 தேர்தல்களில் அதிமுக கூட்டணி அதிக முறை இந்த தொகுதியை கைப்பற்றியுள்ளது. இதில் 6 தேர்தல்களில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், ஒரு இடைத்தேர்தல் உள்ளிட்ட 5 தேர்தல்களில் திமுகவும் வென்றுள்ளது. தற்போது திமுகவிடம் உள்ள இந்த தொகுதியை அதிமுக மீண்டும் கைப்பற்ற நினைக்கிறது.
அதே நேரத்தில் இந்த தொகுதியில் தங்கள் வெற்றி தொடர வேண்டும் என்று திமுக நினைக்கிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக சுமார் 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவை வென்றது. அப்போது தனித்து நின்ற பாமக 24,277 வாக்குகளும், மக்கள் நல கூட்டணியில் இடம்பெற்ற விசிக சுமார் 7,745 வாக்குகளும் பெற்றது. இப்போது பாமகவுடன் கூட்டணி ஏற்பட்டுள்ளதால் தங்களுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று அதிமுகவினர் நினைக்கின்றனர். எனவே அதிமுக சார்பில் போட்டியிட கடும் போட்டி நிலவுகிறது.
அதிமுக தரப்பில் மாவட்ட இலக்கிய அணி செயலர் விஜய் என்பவரின் மனைவி அன்னபூரணி உள்ளிட்டோரும், திமுக தரப்பில் தற்போதைய எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் உள்ளிட்டோரும் இங்கு போட்டியிட திட்டமிட்டு கடும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.