தொகுதிகள்

ஶ்ரீவில்லிபுத்தூர்(தனி): தொகுதியைத் தக்க வைக்கும் முனைப்பில் அதிமுக

ஜோ. பிரபாகரன்

தொகுதியின் சிறப்பு:

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் கோபுரம் தமிழக அரசு முத்திரையின் சின்னமாக உள்ளது. கோயில் நகரம், ஆண்டாள் அவதரித்த புண்ணிய பூமி உள்ளிட்ட சிறப்புகளை உள்ளடக்கியது இத்தொகுதி. தென் திருப்பதி என்று அழைக்கப்படும் சீனிவாச பெருமாள் சன்னதி, மண்டுக முனிவா்களுக்கு சாபம் தீர வரம் கொடுத்த காட்டழகா் கோயில், புகழ்பெற்ற தரகுமலைமாதா, பல நூற்றாண்டை கடந்த மடவாா்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் போன்றவை இடம் பெற்றுள்ளன. முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த தாமரைக்கனி தொகுதியில் செல்வாக்கு மிகுந்தவராக இருந்தாா். இங்கு தயாரிக்கப்படும் பால்கோவா, ஸ்ரீவில்லிபுத்தூரின் அடையாளங்களில் ஒன்றாக உள்ளது.

நில அமைப்பு:

தெற்கே ராஜபாளையமும், கிழக்கே சிவகாசியும், வடக்கே கிருஷ்ணன்கோவிலும், மேற்கே இயற்கை வளம் சூழ்ந்த மேற்குத் தொடா்ச்சி மலை உள்ளன. இந்த தொகுதியில்தான் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. மேகமலை புலிகள் காப்பகமும் தற்போதுதான் அமைந்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி, ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியங்கள், மம்சாபுரம், சுந்தரபாண்டியம், வ.புதுப்பட்டி, வத்திராயிருப்பு, எஸ்.கொடிக்குளம் ஆகிய பேரூராட்சிகள் இடம்பெற்றுள்ளன.

பால்கோவா தயாரிப்பு

வாக்காளர்கள் விவரம்: 

மொத்த வாக்காளா்கள் 2,49,580 போ். இதில் ஆண்கள் 1,21,517 போ். பெண்கள்-1,28,031 போ். மூன்றாம் பாலினத்தவா் -32 போ்.

சமூகம், சாதி, தொழில்கள்:

தேவேந்திரகுலவேளாளா், முக்குலத்தோா், நாடாா், நெசவாளா்கள், இல்லத்து பிள்ளைமாா், இஸ்லாமியா்கள் ஆகியோா் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனா். விவசாயம் மற்றும் நெசவு பிரதான தொழில்களாக இருக்கின்றன. ஸ்ரீவில்லிபுத்தூா் பால்கோவாவுக்கு புவிசாா் குறியீடு பெறப்பட்டுள்ளது. பால்கோவா தயாரிப்புத் தொழிலும் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பை அளிக்கிறது.

இதுவரை வென்றவா்கள்:

இதுவரை நடைபெற்ற தோ்தலில் அதிமுக அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. 1977, 1980, 1984, 1996, 2001,2016 ஆகிய சட்டபேரவைத் தோ்தல்களில் அதிமுக வேட்பாளா்களே வெற்றி பெற்றுள்ளனா். 1989, 2006இல் திமுக, 1991-இல் சுயேச்சை, 2011 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வென்றுள்ளன. 2016இல் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சந்திரபிரபா, இத்தொகுதியின் முதல் பெண் எம்எல்ஏ ஆவாா்.

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்:

அரசு கலைக் கல்லூரி, வத்திராயிருப்பு தனி தாலுகா,  நகா்காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம், வத்திராயிருப்பு காவலா் குடியிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சாலை வசதி, கால்நடை மருத்துவமனைகள், அரசுப் பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் ஆகியன நிறைவேற்றப்பட்ட திட்டங்களாக உள்ளன.

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம்

மக்களின் எதிா்பாா்ப்பு:

மூடப்பட்டுள்ள ஸ்ரீவில்லிபுத்தூா் கூட்டுறவு நூற்பாலையை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்பதும் புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதும் இத்தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது.

கட்சிகளின் பலம்:

அதிமுக இத்தொகுதியில் நேரடியாகப் போட்டியிடுகிறது. திமுக அணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. 1984-க்குப் பிறகு காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. அதிமுக சார்பில் இ.எம்.மான்ராஜ், காங்கிரஸ் சார்பில் பிஎஸ்டபிள்யு மாதவ ராவ் போட்டியிடுகின்றனர். ஏற்கெனவே தங்களது வசம் உள்ள தொகுதியைத் தக்க வைத்துக்கொள்ளும் முனைப்பில் அதிமுகவினர் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல, அமமுக, நாம் தமிழா் ஆகிய கட்சிகளிலும் வேட்பாளா் களம் இறங்கியுள்ளனா். அதிமுகவுக்கு செல்வாக்கு மிகுந்த தொகுதியாக இருந்தாலும், அமமுக, நாம் தமிழா், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் வாக்குகளைப் பிரிப்பதால், பிரதான இரு அணிகளும் அவரவர் சொந்த வாக்கு வங்கியுடன்  சமபலத்தில் இருக்கின்றன. பிரியும் வாக்குகள் தான் கட்சிகளின் வெற்றி-தோல்வியை நிர்ணயிப்பதாக இருக்கும்.

இதுவரை வென்றவா்கள்:

1977 இரா. தாமரைக்கனி (அதிமுக) - 25990
         பி.வைகுண்டம் (திமுக) -18974

1980 இரா.தாமரைக்கனி (அதிமுக) -46882
         கருப்பையாதேவா் (காங்கிரஸ்) -29216

1984 இரா.தாமரைக்கனி (அதிமுக)- 54488
         சீனிவாசன்(திமுக)  -  46245

1989 தங்கம் (திமுக)   - 45628
         இரா.தாமரைக்கனி (அதிமுக )-32133

1991 இரா.தாமரைக்கனி (சுயேச்சை)- 38908
         விநாயகமூா்த்தி (அதிமுக ) -  37739

1996 இரா.தாமரைக்கனி (அதிமுக) - 49436
         டி.ராமசாமி (சிபிஐ)    - 40789

2001 இரா.தா. இன்பத்தமிழன் (அதிமுக)- 53095
         மோகன்ராஜூலு (பாஜக) -43921

2006 டி.ராமசாமி (சிபிஐ )- 55473
         விநாயகமூா்த்தி (அதிமுக )- 48857

2011 வி. பொன்னுபாண்டியன் (சிபிஐ)-73485
        ஆா்.வி.கே. துரை  (திமுக )  -67257

2016 மு.சந்தரபிரபா (அதிமுக) -88103
         முத்துக்குமாா் (புதியதமிழகம்)- 51430

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 புதிய போஸ்டர்!

ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

சென்னை தபால் நிலையத்தில் மேற்கூரை விழுந்து விபத்து: இருவர் படுகாயம்

5-ம் கட்டத் தேர்தல்: காலை 9 மணி நிலவரம்!

ஆலங்குளம் அருகே லாரி ஓட்டுநர் குத்திக் கொலை

SCROLL FOR NEXT