தொகுதி அலசல்; காரைக்குடி- கடும் போட்டியை எதிர்கொள்ளும் சீமான்!
தனது சொ ந்த மாவட்டமான சிவகங்கையில் அடங்கியுள்ள காரைக்குடி பேரவைத் தொகுதியில் முதல் முறையாகக் களமிறங்கியுள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் போட்டியை எதிர்கொண்டுள்ளார்.
கல்வி நகரம் என்ற பெருமைக்குரியது காரைக்குடி. உணவு வகைகள், கட்டடக் கலைக்குப் பெயர் பெற்றது இந்தத் தொகுதி. காரைக்குடி மாநகராட்சி, கண்டனூர், புதுவயல் பேரூராட்சிகள், சாக்கோட்டை, கல்லல், தேவகோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள சில ஊராட்சிப் பகுதிகளும், தேவகோட்டை நகராட்சிப் பகுதிகளும் இந்தத் தொகுதியில் அடங்கியுள்ளன.
முக்குலத்தோர், வல்லம்பர், நகரத்தார் (செட்டியார்), பட்டியலினத்தவர், முத்தரையர், தேவேந்திர குல வேளாளர், வெள்ளாளர், யாதவர், உடையார், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் இந்தத் தொகுதியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.
Advertisement
பிரச்னைகள்: காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம், செக்ரி ஆராய்ச்சி நிறுவனம் என எண்ணற்ற கல்வி நிறுவனங்கள் உள்ளன. ஆனாலும், பட்டதாரி மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகள் இந்தத் தொகுதியில் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை என்பது முக்கிய பிரச்னை. மேலும், வேளாண் மேம்பாட்டுக்கும், நவீன மருத்துவ வசதிகளுக்குமான கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்பது இந்தத் தொகுதியின் முக்கிய கோரிக்கைளில் ஒன்று.
சம பலத்தில் காங்கிரஸ், அதிமுக: கடந்த 1957 முதல் இதுவரை நடைபெற்ற 15 பேரவைத் தேர்தல்களில் அதிமுக, காங்கிரஸ் கட்சிகள் தலா 4 முறையும், திமுக 3 முறையும், சுதந்திரா கட்சி இரு முறையும், தமாகா, பாஜக ஆகியவை தலா ஒரு முறையும் இங்கு வென்றுள்ளன. 2026 பேரவைத் தேர்தலில் இந்தத் தொகுதியை திமுகவினருக்கு ஒதுக்க வேண்டும் என அந்தக் கட்சியினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், ஏற்கெனவே இந்தத் தொகுதியில் வென்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கே தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் அதிமுக, காங்கிரஸ் தலா 4 முறை வென்று சம பலத்தில் உள்ளன. இருப்பினும், கடந்த இரு பேரவைத் தேர்தல்களாக காங்கிரஸ் தொடர்ந்து வெற்றி பெற்றிருப்பது கவனிக்க வேண்டியதாக உள்ளது.
களத்தில் உள்ள வேட்பாளர்கள்:
சிவகங்கையை சொந்த மாவட்டமாகக் கொண்ட நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முதல் முறையாக இந்தத் தொகுதியில் களம் காண்கிறார். காங்கிரஸ் கட்சி சார்பில் அந்தக் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் சா. மாங்குடி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அமமுக வேட்பாளராக தேர்போகி வி. பாண்டி, தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக பிரபல பல் மருத்துவர் டி.கே. பிரபு ஆகியோர் களத்தில் உள்ளனர்.
முதல்வர் வேட்பாளர் சீமான்: திராவிடக் கட்சிகளை எதிர்த்துக் களமாடி, தமிழகத்தில் தொடர்ந்து வாக்கு வங்கி உயரும் கட்சியாக உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் "மண்ணின் மைந்தர்' என்ற வகையில் மக்களிடம் ஈர்ப்பைப் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சியின் முதல்வர் வேட்பாளராகத் தன்னை முன்னிலைப்படுத்தி களம் காணும் சீமான், கவனிக்கத்தக்கவராக உள்ளார்.
கடந்த 2021 பேரவைத் தேர்தலில் இந்தத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி நான்குமுனைப் போட்டியை ஏற்படுத்தியிருந்தது. இந்தக் கட்சி சார்பில் போட்டியிட்ட என். துரைமாணிக்கம் 23,872 வாக்குகளைப் பெற்றார். தற்போது, சீமான் இந்தத் தொகுதியில் நேரடியாகக் களம் காண்பதால் அந்தக் கட்சிக்கான வாக்குகள் கணிசமாக உயரும் என்பது உறுதி.
தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாகவே தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து, பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் சீமான். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கண்டிப்பாக இந்தத் தொகுதியில் வெல்ல வேண்டும் என அவரது கட்சி நிர்வாகிகள் முழுவீச்சில் தேர்தல் பணியாற்றுவது சீமானுக்கு சாதகமாக உள்ளது. தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி தமிழகத்தை வலம் வரும் சீமான், தனது தொகுதியிலும் வலம் வந்தால் அது அவருக்கு மிகப் பெரிய பலத்தை சேர்க்கும். இந்தத் தொகுதியில் சீமானின் வெற்றிவாய்ப்பு அனைத்து அரசியல் கட்சிகளாலும் உற்றுநோக்கப்படுகிறது.
காங்கிரஸ் வேட்பாளர்: காங்கிரஸ் கட்சி சார்பில் களம் காணும் சட்டப்பேரவை உறுப்பினர் சா. மாங்குடி, மக்களுக்கு ஏற்கெனவே நன்கு அறிமுகமானவர். காரைக்குடியில் புதிய அரசு சட்டக் கல்லூரி, சிறு தகவல் தொழில்நுட்பப் பூங்கா, தேவகோட்டையில் புதிய பேருந்து நிலையம் எனப் பல வாக்குறுதிகளை நிறைவேற்றியிருப்பது இவருக்கு பலம் சேர்க்கிறது. மேலும், இவரது எளிமையான அணுகுமுறை, கூட்டணிக் கட்சியான திமுகவின் வாக்கு வங்கி பலம் ஆகியவையும் இவருக்கு சாதகம். அதேநேரத்தில், நிறைவேற்றப்படாத கோரிக்கைகளைச் சுட்டிக்காட்டி எதிர்க் கட்சிகள் மேற்கொள்ளும் பிரசாரம், காங்கிரஸ் கட்சியிலும், கூட்டணிக் கட்சிகளிலும் உள்ள பரவலான அதிருப்தி ஆகியவை இவருக்கு பாதகமான அம்சம். இவர், வெற்றி பெறுவது காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் கெüரவமாகக் கருதப்படுகிறது.
கூடுதல் பலத்தில் அமமுக: அமமுக வேட்பாளராகப் போட்டியிடும் தேர்போகி வி. பாண்டி அந்தக் கட்சியின் மாவட்டச் செயலர். தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர். கடந்த 2021 பேரவைத் தேர்தலில் அமுமுக பெரிய கட்சிகளுடன் கூட்டணியில் இல்லாமல் களம் கண்டிருந்த நிலையில், அந்தக் கட்சியின் வேட் பாளராக இங்கு களம் கண்ட தேர்போகி வி. பாண்டி 44,864 வாக்குகளைப் பெற்று மூன்றாமிடம் பெற்றார். இந்தத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட எச். ராஜா 54,365 வாக்குகளைப் பெற்று இரண்டாமிடம் பெற்றார். தற்போது, பாஜக, அதிமுகவுடன் இணைந்து அமமுக சார்பில் இங்கு களம் காண்பது தேர்போகி வி. பாண்டிக்கு கூடுதல் பலமாகக் குறிப்பிடப்படுகிறது.
களம் காணும் மருத்துவர்: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் களம் காணும் பிரபல பல் மருத்துவர் டி.கே. பிரபு, மக்களுக்கு அறிமுகமானவர். இருப்பினும், தேர்தல் களத்துக்குப் புதியவர். சுதந்திரப் போராட்ட வீரர் குடும்பத்தின் வாரிசு என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு இவர் மேற்கொள்ளும் பிரசாரம் கவனம் பெற்றுள்ளது. இவர் அனைவரிடத்திலும் அன்பாகப் பழகும் சுபாவம் கொண்டவர் என்பதால் மக்களிடம் உள்ள நன்மதிப்பும், விஜய்யின் தலைமைக்கான வாக்குகளும் இவருக்கு பெரும் பலம்.
காரைக்குடி தொகுதியில் நான்குமுனைப் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், மண்ணின் மைந்தர் சீமான் காரைக்குடி தொகுதியில் கடும் போட்டியை எதிர்கொள்வது தவிர்க்க இயலாதது.
வாக்காளர்கள்
ஆண்கள்
1,48,0876
பெண்கள்
1,55,256
மூன்றாம் பாலினத்தவர்
28
மொத்தம் - 3,03,371