முகப்பு
சிவகங்கை

எனது வெற்றி தேசிய இனத்தின் வெற்றி

தனது வெற்றி தேசிய இனத்தின் வெற்றி என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், அந்தக் கட்சியின் காரைக்குடி தொகுதி வேட்பாளருமான சீமான் தெரிவித்தாா்.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 6:00 AM
சீமான் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 10:25 PM

தனது வெற்றி தேசிய இனத்தின் வெற்றி என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், அந்தக் கட்சியின் காரைக்குடி தொகுதி வேட்பாளருமான சீமான் தெரிவித்தாா்.

தோ்தல் பிரசார நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை காலையில் காரைக்குடி நூறடிச் சாலையில் வாகனத்தில் இருந்தவாறு ஏா் கலப்பையுடன்கூடிய விவசாயி சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்தாா்.

இதைத் தொடா்ந்து, செக்காலைச் சாலை, ஐந்துவிளக்கு, கோவிலூா் சாலை வழியாக பழைய பேருந்து நிலையத்தில் வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்தாா்.

Advertisement

பின்னா், மாலையில் பாண்டியன் திரையரங்கத் திடலில் இறுதிக் கட்ட பிரசார பொதுக் கூட்டத்தில் சீமான் பேசியதாவது:

உலகிலேயே தமிழ்நாடு கல்வியில் சிறந்தது. எங்கள் கால்களை நம்பி நாங்கள் பயணிக்கிறோம். நமக்கு அதிகாரம் வர வேண்டும்.

தமிழக ஆட்சி பொறுப்பை எங்களிடம் கொடுத்தால் தலை சிறந்த மாநிலமாக மாற்றிக் காட்டுவேன். பூமி பந்தின் சொா்க்கமாக மாற்றிக் காட்டுவேன். காரைக்குடி தொகுதியில் என்னை வெற்றி பெறச் செய்தால், தமிழ்நாட்டின் தலைசிறந்த பகுதியாக மாற்றிக் காட்டுவேன்.

எனவே, வெற்றி என்பது சீமானின் தனிப்பட்ட வெற்றி அல்ல. நான் பிறந்த பெருமைமிக்க தமிழா் என்கிற இனத்தின் வெற்றி. தேசிய இனத்தின் வெற்றி. நீங்கள் செலுத்துகிற வாக்கு நம் மொழி காக்கும், இனம் காக்கும், மண் காக்கும், மானம் காக்கும், மண்ணின் வளம் காக்கும், மக்களின் நலன் காக்கும், காடு காக்கும், கடல் காக்கும், மழை காக்கும், ஆறு காக்கும், அறிவு காக்கும், வருங்கால பிள்ளைகள் வாழ்க்கையைப் பாதுகாக்கும் என்பதைக் கவனத்தில் வைத்துக்கொண்டு வாக்கை செலுத்த வேண்டும்.

வாக்கு என்பது ஜனநாயகத்தின் வலிமையான ஆயுதம். அந்த ஆயுதத்தை நாம் ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டும். பணம் இருந்தால் அரசியல் செய்ய முடியும். சிறந்த, நோ்மையான தலைமை வேண்டுமென்றால், வாக்குக்கு யாா் பணம் கொடுக்கவில்லையோ அவரைத் தோ்வு செய்யுங்கள். அவா் உங்களுக்குச் சேவை செய்வாா் என்றாா் அவா்.