இந்தத் தேர்தலில் தேமுதிகதான் 'கேம் சேஞ்சர்': பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு நேர்காணல்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தினமணிக்கு அளித்த சிறப்பு நேர்காணல் குறித்து...
தேமுதிக பொதுச் செயலாளரும், விருத்தாசலம் தொகுதி தேமுதிக வேட்பாளருமான பிரேமலதா விஜயகாந்த், பரபரப்பான தேர்தல் பரப்புரைக்கு மத்தியில் தினமணிக்கு அளித்த சிறப்பு நேர்காணல்...
இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியைத் தேர்ந்தெடுக்க காரணம் என்ன?
தேமுதிக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விருப்பத்தின்பேரிலேயே திமுகவுடன் கூட்டணி சேர்வது என முடிவு எடுக்கப்பட்டது. அவர்களின் முடிவுதான் என் முடிவு. அதையே நான் செயல்படுத்தியுள்ளேன்.
Advertisement
10 தொகுதிகளில் இரண்டில் நீங்களும், உங்கள் மகனும் நிற்கிறீர்கள். உங்கள் கட்சியினர் இதை எப்படி பார்க்கிறார்கள்?
மாவட்டச் செயலாளர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகே விஜய பிரபாகரன் போட்டியிடும் முடிவு எடுக்கப்பட்டது. உண்மையில், விஜய பிரபாகரன் தேர்தலில் "சீட்' வேண்டாம் என்றுதான் கூறினார். தேமுதிக வெற்றிக்காக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்யப் போவதாகவும் தெரிவித்தார். ஒட்டுமொத்த மாவட்டச் செயலாளர்கள் வற்புறுத்தலின் பேரிலேயே அவர் இந்தத் தேர்தலில் களம் காண்கிறார்.
தேமுதிக போட்டியிடும் தொகுதிகளில் கூட்டணிக் கட்சியினர் ஒத்துழைப்பு எப்படி உள்ளது?
நாங்கள் போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் ஒருவர் வெற்றிக்காக, இன்னொருவர் பாடுபடுகின்றனர்.
ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணியை இறுதி செய்ய நீண்டகாலம் எடுத்துக் கொள்வது ஏன்?
இவ்விவகாரத்தில் பத்திரிகைகள்தான் எங்களுக்கு அழுத்தம் கொடுத்தன. இதை ஊடகங்கள்தான் மிகைப்படுத்துகின்றன. வேட்பாளரை தாமதமாக அறிவித்து பிரசாரத்தை தொடங்காத கட்சிகள்கூட உள்ளன. ஆனால், எங்களை மட்டும் ஊடகங்கள் குறிவைக்கின்றன.
விஜய்யின் தவெக-வால் எந்தக் கூட்டணிக்கு பாதிப்பு அதிகம் என்று கருதுகிறீர்கள்?
கண்டிப்பாக பாதிப்பு இல்லை. தேமுதிக தொடங்கி, 2006-ஆம் ஆண்டு முதல்முறையாக களம்கண்ட விஜயகாந்த், தேர்தலில் நிரூபித்ததை போன்று, விஜய்யும் தன்னை நிரூபிக்க வேண்டும். மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில்தான் இதுகுறித்து தெரியவரும்.
திமுகவை தீய சக்தி என விஜய் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இது உங்கள் கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?
திமுக மீதான விஜய்யின் விமர்சனம் களத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. விஜய்யின் வருகை, எங்கள் கூட்டணிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
விஜய்க்கு பெருமளவில் இளைஞர்களின் கூட்டம் கூடுவதால், அரசியல் மாற்றம் ஏற்படுமா?
விஜய் முதல்முறையாக தற்போதுதான் மக்களைச் சந்திக்க வெளியே வருகிறார். அதனால்தான் இதுபோன்ற கூட்டம் வருகிறது. அந்தக் காலகட்டத்தில் கேப்டன் விஜயகாந்துக்கும் இதுபோன்ற மக்கள் கூட்டம் கூடியுள்ளது. நடிகர் என்ற முறையில் அவருக்கு கூட்டம் கூடுகிறது. எங்களுக்கு இது எதுவும் புதிதல்ல. இதனால், எந்த மாற்றமும் ஏற்படாது.
திமுகவின் கடந்த ஐந்து ஆண்டுகால திட்டங்களால் கடன் சுமை அதிகரித்துள்ளதாகவும், பெண்கள் அமைதிப் புரட்சியை தேர்தலில் ஏற்படுத்துவார்கள் என்றும் எதிர்க்கட்சிகள் கூறுவது குறித்து?
கண்டிப்பாக ஆட்சியாளர்கள் மீது விமர்சனங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால், அதையெல்லாம் கடந்து, ஏற்கெனவே உள்ள கட்சிகளை கூட்டணியில் தக்கவைத்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், புதிதாக சில கட்சிகளையும் இணைத்து மெகா கூட்டணியை முன்னெடுத்துள்ளார். மிக சாமர்த்தியமாக முதல்வர் ஸ்டாலின் அமைத்துள்ள இந்தக் கூட்டணியில், தேமுதிகவும் இணைந்துள்ளது. இந்தத் தேர்தலில் நாங்கள்தான் "கேம் சேஞ்சராக' இருப்போம். திமுக தேர்தல் அறிக்கை மக்களிடம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
போதைப் பொருள் விவகாரம், பெண்களுக்கு பாதுகாப்புக் குறைபாடு போன்ற அரசு மீதான எதிர்ப்பலை தாக்கத்தை ஏற்படுத்துமா?
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் தலையாய கடமை. அதை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம். போதைப் பொருள்களும் கண்டிப்பாக தடை செய்யப்பட வேண்டிய ஒன்றுதான். இதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
இது தில்லிக்கும், தமிழகத்துக்குமான தேர்தலா? அல்லது தமிழக பிரச்னைகளை முன்வைத்து நடத்தப்படும் தேர்தலா?
தமிழகத்தில் தற்போதைய தேர்தலில் ஐந்துமுனைப் போட்டி நிலவுகிறது. ஆனால், நமது வாக்கு வெற்றிக் கூட்டணிக்குத்தான் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். எத்தனை முனைப் போட்டி நிலவினாலும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருக்கே வெற்றி கிடைக்கும்.
தொங்கு சட்டப்பேரவை ஏற்பட்டு கூட்டணி ஆட்சி அமைந்தால், அதில் தேமுதிக பங்குபெறுமா?
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. ஊகத்தின் அடிப்படையில் இப்போது பதில் சொல்ல முடியாது. முதல்வர் மு.க. ஸ்டாலின் 2-ஆவது முறையாக ஆட்சியமைப்பார். மே 4 வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகே இதுகுறித்து கருத்துக் கூறமுடியும்.
நேர்காணல்: சி.ஆர்.எம். சபரி
படம்: வே.சக்தி