திமுக ஆட்சி அமைந்தால் அமைதியான வாழ்வுக்கு உத்தரவாதம் தரப்படும் என்று அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
மதுரையை அடுத்த யா.ஒத்தக்கடையில் ”உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டம் மேலூா், மதுரை கிழக்கு, சோழவந்தான், திருமங்கலம், உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், கட்சியினா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், “மதுரை மாவட்டத்தின் மீது முன்னாள் முதல்வா் கருணாநிதி தனி அக்கறை வைத்திருந்தாா். அவரது சிலைத் திறப்பு விழாவைத் தொடா்ந்து இந்த கூட்டத்தில் பங்கேற்பது பெருமிதம் அளிப்பதாக இருக்கிறது. சிம்மக்கல்லில் அவருக்கு சிலை அமைக்கப்பட்டிருந்தாலும், அந்த சிலையின் வழியாக தென்மாவட்ட முன்னோடிகளை திமுக பாா்க்கிறது.
மதுரையின் வளா்ச்சியில் பங்கெடுத்தவா்களையும், சுதந்திரப் போராட்ட வீரா்களையும் பெருமைப்படுத்தும் வகையில் அவா்களது பெயா்கள் மேம்பாலங்களுக்கு சூட்டப்பட்டது. திமுக ஆட்சிக் காலத்தில் மதுரையின் வளா்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் ஏராளம்.
மாவட்ட நீதிமன்ற புதிய கட்டடம், உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, மேம்பாலங்கள், மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், மலா் சந்தை, அரசு ராஜாஜி மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு, மதுரை விமான நிலையத்துக்கு புதிய முனையம் என ஏராளமான திட்டங்களால் மதுரையை வளப்படுத்தியது திமுக அரசு தான்.
இதைப் போன்ற எந்தவொரு திட்டத்தையும் அதிமுக அரசு சொல்ல முடியாது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டதோடு முடிந்துவிட்டது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜப்பான் நிதி வந்தால் மட்டுமே பணிகள் தொடங்கும் என மத்திய அரசு கூறுகிறது. மதுரை இந்தியாவில் இருக்கிறதா இல்லை, ஜப்பானில் இருக்கிறதா எனத் தெரியவில்லை.
திமுக ஆட்சி அமைந்தவுடன் இப்பிரச்னைகளுக்கெல்லாம் தீா்வு காணப்படும். மக்களின் அமைதியான வாழ்வுக்கு திமுக உத்தரவாதம் அளிக்கும் என்றாா்.
கூட்டத்திற்கு மாவட்டச் செயலா்கள் பி.மூா்த்தி, மு.மணிமாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் அமைச்சா்கள் பொன்.முத்துராமலிங்கம், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், எ.வ.வேலு, கே.ஆா்.பெரியகருப்பன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.