முகப்பு
செய்திகள்

காங்கிரஸின் அடிமை திமுக, அதனால்தான் கூடுதல் தொகுதி: அண்ணாமலை

தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸுக்கு மட்டும் கூடுதல் தொகுதியை வழங்கிய திமுக குறித்து அண்ணாமலை பேசியது...

Updated On : 12 ஏப்ரல், 2026 at 12:25 PM
தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை - ANI
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 11:29 AM

திமுக தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸுக்கு மட்டும் கூடுதல் தொகுதியை வழங்கியது ஏன்? என்ற கேள்வியை தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளதால் அனைத்துக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பிலும் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளன.

அண்ணாமலை தேர்தலில் போட்டியிடாதபோதிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்ந்த வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்து வருகிறார். இந்த நிலையில், காரைக்குடி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடக்கூடிய தேர்போகி பாண்டிக்காக, அண்ணாமலை வாக்கு சேகரித்தார்.

Advertisement

வாக்கு சேகரிப்பின்போது காங்கிரஸ் குறித்து அவர் பேசியதாவது:

“ திட்டங்களை செயல்படுத்த வேண்டுமென்றால் சென்னையின் ஆதரவும் தில்லியின் ஆதரவும் வேண்டும். அப்போதுதான் இங்குள்ள குழந்தைச் செல்வங்களுக்கு உள்ளூரில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த முடியும். அப்போதுதான் காரைக்குடியின் தலையெழுத்தை மாற்ற முடியும். செட்டிநாடு கலாசாரத்தின் தலைநகராக இருக்கக் கூடிய காரைக்குடி அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும்.

காரைக்குடியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சியால் தமிழகத்துக்கு என்ன பயன் என்று நீங்களே சொல்லுங்கள். காங்கிரஸ் மத்தியில் 12 காலமாக ஆட்சியில் இல்லை. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமாக காங்கிரஸ் தனது ஆட்சியை இழந்து கொண்டிருக்கின்றது.

எந்த மாநிலத்திலும் காங்கிரஸை விரும்புவதற்கு மக்கள் தயாராக இல்லை. தமிழகத்தில் மட்டும் 28 பேர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்கள். நன்கு சிந்தித்துப் பாருங்கள். திமுகவைப் பொறுத்தவரையில், அனைத்துக் கட்சிகளுக்கும் தொகுதிகளைக் குறைத்தார்கள்.

திருமாவளவன் உள்பட, மார்க்சிஸ்ட் மற்றும் கொங்குநாடு போன்ற அனைத்துக் கட்சிகளுக்கும் தொகுதியைக் குறைத்த திமுக, காங்கிரஸுக்கு மட்டும் 3 தொகுதிகளைக் கூடுதலாகக் கொடுத்தது ஏன்? காங்கிரஸ் கட்சியின் அடிமை திமுக என்பதை உணர்த்துவதற்காகத்தான் ஒன்றுமே இல்லாத காங்கிரஸ் கட்சிக்கு அதாவது கடலில் கிடைத்த பெருங்காயம்போல உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் கூடுதலாகக் கொடுத்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதுவரை பிரசாரத்துக்காக தமிழகம் வரவில்லை” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.