முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம்
சென்னையில் இன்று நடந்த திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சென்னையில் இன்று நடந்த திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. இளைஞர் அணி மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவரும் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். மேலும் கூட்டத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கழகம் மீதும், கட்சித் தலைவர் மீதும் நம்பிக்கை வைத்து தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தும், ஜூன் - 3இல் கலைஞர் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுவோம் என்பது உள்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் முக்கியமாக, முதுகில் குத்திய காங்கிரஸ் கட்சிக்குக் கண்டனம் என்று தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றியிருந்தனர். அந்த தீர்மானத்தில், கடந்த பல தேர்தல்களிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டுப் பல சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றது காங்கிரஸ். அவர்கள் கட்சியில் இருப்பவர்களை வைத்து களப்பணி செய்யாத நிலையிலும் காங்கிரஸ் வெற்றிபெறக் காரணம் கட்சி உடன்பிறப்புகள்தான் என்பதை யாருமே மறுக்க முடியாது! மறைக்க முடியாது! நடந்து முடிந்த தேர்தலிலும் தி.மு.க.வினரின் உழைப்பினால் 5 சட்டமன்ற உறுப்பினர்களை வென்றனர்.
Advertisement
Advertisement
தேசிய கட்சியாக இருந்துகொண்டு தேர்தலுக்கு முன்பாகவே மாநிலக் கட்சியான தி.மு.க. உறுப்பினர்களின் வாக்குகளால் மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் பெற்றனர். இத்தனையும் பெற்றுக் கொண்டு, ஒரு நன்றி கூட சொல்லாமல், நன்றி உணர்ச்சியும் இல்லாமல் ஒரே இரவில் அணி மாறிச் சென்றிருக்கின்றனர். பழம்பெரும் பேரியக்கம் அரசியலின் அடிப்படை நாகரிகத்தைக் கூட கடைப்பிடிக்க முடியாத அளவுக்கு, பதவி ஆசை அவர்களின் மூளையை மழுங்கடித்துவிட்டது. அடுத்தவர் உழைப்பில் ஒட்டுண்ணியாய் உண்டு கொழுப்பதும், தன் தேவைக்கேற்ப கொள்கை மறந்து துரோகம் புரிவதும் காங்கிரஸுக்குப் புதிதில்லைதான்.
இன்று நமக்குச் செய்த துரோகத்தை, நாளை பதவி கொடுத்த புதிய கூட்டாளிக்கும் செய்வார்கள். பயணிக்கும் படகிலேயே ஓட்டை போடும் அறிவாளிகள்தான் காங்கிரஸ் கட்சியினர். தி.மு.க. ஆட்சியமைக்க வேண்டும் என விரும்பிய மக்களின் வாக்குகளால்தான் இன்று அவர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்களே தவிர, இது அவர்கள் தங்கள் சொந்தச் செல்வாக்கினால் பெற்ற வெற்றியல்ல என்பதைக்கூட உணராமல், வரலாறு படைத்துவிட்டதாக உளறுகிறார்கள். சொந்த உழைப்பில் ஒருநாளும் வெற்றி பெற முடியாமல், நம்பியவர்களுக்கெல்லாம் துரோகமிழைக்கும் அறமில்லாத காங்கிரஸ் கட்சிக்கு இந்தக் கூட்டம் தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
திமுகவின் இந்த கண்டன தீர்மானத்திற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்வினையை ஆற்றியுள்ளது.