முகப்பு
செய்திகள்

6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட்

திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து நீடிக்கும் இழுபறி.

Updated On : 22 மார்ச், 2026 at 8:02 AM
மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் பெ . சண்முகம் - DIN
பகிர்:

திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், 6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருப்பதாக மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் பெ . சண்முகம் தெரிவித்துள்ளார்.

திமுக தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக் குழுவினருடன், மார்க்சிஸ்ட் குழு நான்கு கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனிடையே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையொப்பம் ஆனது.

இந்நிலையில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் சென்னை தியாகராயநகரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலர் எம்.ஏ. பேபி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை நடைபெற்றது. இதில் அக் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம், முன்னாள் மாநிலச் செயலர்கள் கே. பாலகிருஷ்ணன், ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனர்.

அதில், 6 தொகுதிகளுக்கு குறையாமல் ஒப்புக்கொள்ளக் கூடாது என ஒருமித்த கருத்து தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உடனான பேச்சு தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது

இந்த நிலையில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலினுடன் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் பெ . சண்முகம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய பெ . சண்முகம், “5 தொகுதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எங்களிடன் வலியுறுத்தினார். முதல்வர் தெரிவித்தது குறித்து மாநிலக் குழுவுடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும்.

தற்போது வரை 6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம். கூட்டணியில் குழப்பமில்லை, கூட்டணியில் இருந்து விலக மாட்டோம். சென்னையில் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்ய கேட்டுக்கொண்டுள்ளோம்” என்றார்.

As the DMK-Marxist Communist Party (Marxist) seat-sharing dispute continues, Communist Party of India (Marxist) State Secretary P. Shanmugam has stated that he is confident of a 6-seat distribution.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.