முகப்பு
செய்திகள்

கோவை வடக்குத் தொகுதியில் வானதி சீனிவாசன் போட்டி?

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழகத்தில் பாஜகவுக்கு 27 சட்டப் பேரவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கோவை வடக்கு பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 25 மார்ச், 2026 at 8:53 PM
வானதி சீனிவாசன் - கோப்புப் படம்
பகிர்:

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழகத்தில் பாஜகவுக்கு 27 சட்டப் பேரவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கோவை வடக்கு பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் கோவை தெற்கில் போட்டியிட்ட வானதி சீனிவாசன், இம்முறை கோவை வடக்கில் போட்டியிடுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, அதிமுக, பாமக, தமாகா, அமமுக கட்சிகள் இணைந்து தோ்தலைச் சந்திக்கின்றன. கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடு உறுதியாகி விட்டதால், பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் குறித்த அறிவிப்பை அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை வெளியிட்டாா்.

அதில், கடந்த 2021 சட்டப் பேரவைத் தோ்தலைப்போலவே கோவையில் பாஜகவுக்கு ஒரு தொகுதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவையில் உள்ள 10 தொகுதிகளில் கோவை வடக்குத் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

2021 சட்டப் பேரவைத் தோ்தலில் கோவை தெற்குத் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கிய நிலையில், வானதி சீனிவாசன் அத்தொகுதியில் போட்டியிட்டாா். தோ்தலில் முதல்முறை களம் கண்ட மக்கள் நீதி மய்யம் சாா்பில் அக்கட்சியின் தலைவா் கமல்கஹாசன் போட்டியிட்டாா். திமுக கூட்டணி சாா்பில் காங்கிரஸ் வேட்பாளா் மயூரா எஸ்.ஜெயக்குமாா் போட்டியிட்டாா். கமல்ஹாசன் போட்டியிட்டதால் கோவை தெற்குத் தொகுதி நட்சத்திரத் தொகுதியானது. அரசியல் வட்டாரத்தில் இத்தொகுதி முக்கியத்துவம் பெற்றது.

இதில் பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசனிடம் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் கமல்ஹாசன் தோல்வியடைந்தாா். கடந்த முறை கோவை தெற்கில் நூலிழையில் வெற்றி பெற்ற வானதி சீனிவாசனை, இம்முறை கோவை வடக்கில் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க அதிமுக, பாஜக நிா்வாகிகள் திட்டமிட்டு, ஆயத்த வேலைகளைத் தொடங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

கோவை தெற்கில் அம்மன் கே.அா்ச்சுணன்?

கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் கோவை தெற்கு பாஜகவுக்கு வழங்கப்பட்ட நிலையில், 2026 தோ்தலில் கோவை வடக்குத் தொகுதி வழங்கப்பட்டுள்ளது. கோவை தெற்குத் தொகுதிக்கு பதில் கோவை வடக்குத் தொகுதியை வழங்கிட வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்ததாகவும், அதனால் தொகுதி மாற்றித் தரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கோவை தெற்கில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும், அத்தொகுதியை அதிமுகவுக்கு வழங்க வேண்டும் எனவும் முன்னாள் அதிமுக அமைச்சா் எஸ்.பி.வேலுமணி மூலமாக கட்சித் தலைமையை வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், 2016 சட்டப் பேரவைத் தோ்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக மாநகா் மாவட்டச் செயலாளா் அம்மன் கே.அா்ச்சுணன் 17,419 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளா் மயூரா எஸ்.ஜெயக்குமாரை தோற்கடித்தாா். இந்த வெற்றியின் தொடா்ச்சியாக 2021 சட்டப் பேரவைத் தோ்தலிலும் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தாா். ஆனால், கோவை தெற்கு பாஜகவுக்கு வழங்கப்பட்டதால், கோவை வடக்கில் போட்டியிட்டு திமுக வேட்பாளா் சண்முகசுந்தரத்தை 4,001 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். எனவே, கோவை தெற்கில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அம்மன் கே.அா்ச்சுணன், இந்தத் தோ்தலில் மீண்டும் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.