கோவை வடக்கில் மும்முனைப் போட்டியை எதிர்கொள்ளும் வானதி சீனிவாசன்: மக்களின் ஆதரவு யார் பக்கம்?
கோவை வடக்குத் தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவி வருவதன் பின்னணியில் மக்களின் ஆதரவு யாருக்குக் கிடைக்கும் என்பது குறித்து...
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கோவை வடக்குத் தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவி வருவதன் பின்னணியில் மக்களின் ஆதரவு யாருக்குக் கிடைக்கும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
கோவை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி என்ற பெயரில் கடந்த 1967 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை தேர்தலை சந்தித்த இந்தத் தொகுதி, மறு சீரமைப்புக்கு பிறகு கோவை வடக்கு தொகுதியாக அறிவிக்கப்பட்டு 2011 முதல் தேர்தலை சந்தித்து வருகிறது. கடந்த 2011, 2016 மற்றும் 2021 தேர்தல்களில் தொடர்ந்து அதிமுக வெற்றி பெற்று வருகிறது. இந்த முறை தனது கோட்டையான கோவை வடக்குத் தொகுதியை கூட்டணி கட்சியான பாஜகவுக்கு விட்டுக்கொடுத்திருக்கிறது அதிமுக.
2011 இல் மயிலாப்பூர், 2016 இல் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானிதி சீனிவாசன், 2021 தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை வீழ்த்தி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று முதல் முறையாக பேரவைக்குள் சென்றார்.
Advertisement
இந்த நிலையில், 2026 பேரவைத் தேர்தலில் தனது கோட்டை எனக் கருதப்பட்ட கோவை தெற்குத் தொகுதியிலிருந்து விலகி, அதிமுக கூட்டணியில் கோவை வடக்குத் தொகுதியில் வானிதி சீனிவாசன் களமிறங்கியுள்ளார்.
கோவை வடக்குத் தொகுதியில் சிறு, குறு தொழிற்சாலைகள் ஏராளமான அளவில் உள்ளன. லேத் பட்டறைகள், பவுண்டரிகள், என்ஜினீயரிங் நிறுவனங்கள், கிரைண்டர், பம்ப்செட் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
வேளாண்மைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம் போன்ற கல்வி நிறுவனங்கள், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் இந்த தொகுதியில் உள்ளன.
கொங்கு வேளாள கவுண்டர்கள், நாயுடுகள், போயர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், வெளிமாவட்ட, வெளிமாநிலத்தவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கின்றனர்.
வரலாற்று ரீதியாக அதிமுகவின் கோட்டையாகத் திகழும் கோவை வடக்குத் தொகுதி, கோவை மாவட்டத்திலேயே அதிக வாக்காளர்கள் கொண்ட இராண்டாவது பெரிய தொகுதி. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்களில், மிகவும் கடுமையான போட்டி மற்றும் சித்தாந்த ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த தொகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
தனது கோட்டை எனக் கருதப்பட்ட கோவை தெற்குத் தொகுதியிலிருந்து விலகி, கோவை வடக்குத் தொகுதிக்கு மாறியுள்ள பாஜகவின் வானதி சீனிவாசன், திமுக வேட்பாளர் செந்தமிழ்ச் செல்வன் மற்றும் நடிகர் விஜய்யின் புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வி. சம்பத்குமார், நாம் தமிழர் கட்சி நர்மதா ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
தமிழகத்திலேயே மிகவும் கடுமையான போட்டி நிறைந்த மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்றாக கோவை வடக்கு கருதப்படுகிறது.
மறு சீரமைப்புக்கு பிறகு கோவை வடக்குத் தொகுதியாக மாறிய பிறகு நடைபெற்றுள்ள மூன்று தோ்தல்களிலும் அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2011இல் நடைபெற்ற தோ்தலில் அதிமுக வேட்பாளா் டி.மலரவன், திமுகவின் வீர கோபாலனை 40,098 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா்.
2016 இல் நடைபெற்ற தோ்தலில் அதிமுக வேட்பாளா் பி.ஆா்.ஜி.அருண்குமாா் வெற்றி பெற்றாா். இவா் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட திமுகவின் மீனா லோகுவை 7,724 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா்.
இதைத் தொடா்ந்து 2021 இல் நடைபெற்ற தோ்தலில் அதிமுக வேட்பாளா் அம்மன் கே. அர்ஜுனன் 81,454 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றாா். இவா் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட திமுகவின் சண்முகசுந்தரத்தை 4,000-க்கு சற்று அதிகமான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தாா். அதேவேளையில், மக்கள் நீதி மய்யம் 13 சதவீத வாக்குகளைப் பெற்று, ஒரு குறிப்பிடத்தக்க மூன்றாவது சக்தியாக உருவெடுத்தது.
இந்த பகுதியின் தேர்தல் வரலாறு, அதிமுகவிற்கு மக்கள் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருவதையே சுட்டிக்காட்டுகிறது; இருப்பினும், மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 133 தொகுதிகளைக் கைப்பற்றி திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த ஒரு மாநிலத்தில், இந்த தொகுதியில் பதிவான மிகக் குறைந்த வாக்கு வித்தியாசம், இந்த தொகுதி எவ்வளவு கடுமையான போட்டி நிறைந்ததாகத் திகழ்கிறது என்பதைத் தெளிவாக உணர்த்தியது.
2024 மக்களவைத் தேர்தலில், இதே தொகுதியின் வாக்குப்பதிவு முடிவுகள் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. கோவை வடக்குத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில், திமுக 40.76 சதவீத வாக்குகளையும், பாஜக 35.83 சதவீத வாக்குகளையும் பெற்றன; அதேவேளையில் அதிமுகவின் வாக்கு சதவீதம் வெறும் 14.6 சதவீதமாகக் குறைந்தது. இந்த முடிவுகள், தனது கூட்டணிக் கட்சிகளின் துணையின்றி, கோவைப் பகுதியில் பாஜக தனக்கென ஒரு வலுவான நேரடி வாக்கு வங்கியை உருவாக்கியுள்ளது என்பதைத் தெளிவாக நிரூபித்தன.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தமிழ்ச் செல்வன், பெண்களுக்கான உரிமைத் தொகை போன்ற மாநில நலத்திட்டங்களின் வெற்றியை முன்னிறுத்தியும், கட்சி சார்ந்த கட்டமைப்பின் வலிமை மற்றும் கூட்டணி கட்சியினர் பலத்தில் பிரசாரம் செய்து வருகிறது. இதற்குப் பதிலடியாக, பாஜக மகளிரணிப் பிரிவில் தான் வகிக்கும் தேசிய அளவிலான பொறுப்பின் செல்வாக்கை முன்னிறுத்தியும், தற்போதைய எம்எல்ஏவான அம்மன் அர்ஜுனனின் தொகுதி பணிகளை முன்னிறுத்தியும், மத்திய அரசின் உள்கட்டமைப்பு நிதி ஒதுக்கீடு குறித்த வாக்குறுதிகளையும், தமிழ் அடையாளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய தளங்களின் வாயிலாக நகர்ப்புற வாக்குகளை பெறுவதற்கான வேளைகளில் பாஜக ஈடுபட்டு வருகிறது. அதேவேளையில், தவெக வேட்பாளர் வி. சம்பத்குமார் தலைவர் விஜய் ரசிகர்கள் மத்தியில் நிலவும் பிரம்மாண்டமான மக்கள் ஆதரவை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வாக்கு சேகரித்து வருகிறார்.
கோவை வடக்கு தொகுதியைப் பொருத்தவரை போக்குவரத்து நெரிசல் முக்கிய பிரச்னையாக உள்ளது. முக்கியச் சாலைகள் அகலப்படுத்தப்படாமலும், தேவையான இடங்களில் மேம்பாலங்கள் இல்லாமலும் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது நாள்தோறு பிரச்னையாகி இருக்கிறது.
தற்போதைய தேர்தல் பிரசாரக் களத்தில், உள்ளூர் சார்ந்த குறைபாடுகளே முன்னிறுத்தப்படுகிறது. முக்கிய சாலையான சத்தியமங்கலம் சாலையில் கணபதி பகுதியில் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, கணபதி மற்றும் சரவணம்பட்டி பகுதிகளில் தாமதமாகி வரும் மேம்பாலத் திட்டங்கள், சீரற்ற சிறுவாணி குடிநீர் விநியோகம் மற்றும் நகரின் புகழ்பெற்ற பம்ப் மற்றும் மோட்டார் தொழில் நிறுவனங்களுக்கான அதிகரித்து வரும் செயல்பாட்டுச் செலவுகள், மின்சாரக் கட்டண உயர்வு ஆகியவை குறித்த புகார்களே முக்கிய இடம்பிடித்துள்ளன.
தமிழக பேரவைத் தோ்தலில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி, பாஜக, பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, தவெக, நாதக என நான்கு முனைப் போட்டி உருவாகியுள்ளது.
அதே நேரத்தில், இந்த தேர்தல் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே நடைபெறும் இரு முனைப் போட்டியாக பார்க்கப்படுகிறது.
வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாள்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் மாநிலம் முழுவதும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இதில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் அனுபவம் வாய்ந்த மூத்த தலைமையும், நவீன கால அரசியல் லட்சியங்களும் கலந்த ஒரு பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கின்றனர்.
கோவை வடக்குத் தொகுதியை பொறுத்தவரை எத்தனை வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், திமுக வேட்பாளர் செந்தமிழ்ச் செல்வன் மற்றும் நடிகர் விஜய்யின் புதிய கட்சியான தவெக இடையேதான் உண்மையான மும்முனைப் போட்டி நிகழ்ந்து வருவதாக தேர்தல் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
திமுகவைப் பொருத்தவரை கடந்த தோ்தலில் 4 ஆயிரத்துக்கு சற்று அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த தொகுதி என்பதால் இந்த முறை வெற்றி பெறக் கடுமையாகப் போராடி வருகிறது.
அதேநேரம் மாநகரப் பகுதி வாக்காளா்கள், இளைஞா்கள், இளம் பெண்களின் வாக்குகளை தவெகவும், நாம் தமிழரும் ஓரளவுக்குப் பெறுவாா்கள் என்பதால், முதல் 3 வேட்பாளா்களின் வெற்றியை அடுத்துள்ள வேட்பாளா்கள் நிா்ணயிக்கக் கூடிய தோ்தலாக இது இருக்கும் எனக் கருதலாம்.
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது; வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறுகிறது.