2 முறை கை சின்னத்தில் வெற்றி கண்ட கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன்
2 முறை கை சின்னத்தில் வெற்றி கண்ட கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன்...
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள வெள்ளை மலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன், 10 ஆண்டுகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பொறுப்பை வகித்தவர்.
சட்டப்பேரவைத் தேர்தலில் 6 முறையும், நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று முறையும் போட்டியிட்டுள்ளார். 1983-ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டபோது, தோழர்கள் கல்யாணசுந்தரம், டாங்கே உள்ளிட்டோருடன் இணைந்து ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கினார். 1983-ஆம் ஆண்டு முதல் 2000-ஆம் ஆண்டு வரை அக்கட்சியின் மாநிலச் செயலராகப் பணியாற்றினார்.
1989, 1991 ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் வட சென்னை தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இரண்டு தேர்தலிலும் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்திருந்தது ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி. எனவே, காங்கிரஸின் கை சின்னத்தில் போட்டியிட நேரிட்டது. 1989-இல் திமுக வேட்பாளர் என்.வி.எம். சோமுவை வீழ்த்தி 4,45,197 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 1991-இல் திமுக வேட்பாளர் ஆலடி அருணாவை வீழ்த்தி 4,00,454 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
Advertisement
இதுதொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் திருச்சி மாவட்ட செயலரும், தற்போதைய மாமன்ற உறுப்பினருமான க. சுரேஷ் கூறுகையில், ராஜீவ் காந்தி தமிழகம் வரும்போதெல்லாம் அவரது பேச்சை மொழிபெயர்க்கும் பணியையும் ஏற்றவர் தா. பாண்டியன்.
மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைய முடிவு செய்து, 2000-இல் திருச்சியில்தான் இணைப்பு விழா நடைபெற்றது. திருச்சி தலைமை தபால் நிலையத்திலிருந்து தொடங்கி, பாலக்கரை மரக்கடை வரையில் பேரணி சென்றது. மரக்கடை பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் மீண்டும் கட்சியில் இணைந்தார் தா. பாண்டியன். வாழ்நாள் முழுவதும் தீவிர கம்யூனிஸ்ட் ஆகவே வாழ்ந்து மறைந்தார் என்றார் க. சுரேஷ்
-ஆர்.முருகன்