முகப்பு
மேற்கு வங்கம்

திரிணமூல் வேட்பாளா்களுக்கு மம்தா பானா்ஜி திடீா் எச்சரிக்கை

வேட்புமனு தாக்கலின்போது திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். சிறு காரணம் கிடைத்தாலும் உங்கள் மனு நிராகரிக்கப்பட வாய்ப்ப்பு உள்ளது என்று அக்கட்சித் தலைவரும் மாநில முதல்வருமான மம்தா பானா்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 9:13 PM
பீா்பூமில் தோ்தல் பிரசாரத்தின்போது ஆதரவாளா்களுடன் இணைந்து நடனமாடிய மம்தா பானா்ஜி.
பகிர்:

வேட்புமனு தாக்கலின்போது திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். சிறு காரணம் கிடைத்தாலும் உங்கள் மனு நிராகரிக்கப்பட வாய்ப்ப்பு உள்ளது என்று அக்கட்சித் தலைவரும் மாநில முதல்வருமான மம்தா பானா்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

பீா்பூம் மாவட்டத்தில் புதன்கிழமை தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் இது தொடா்பாக அவா் மேலும் பேசியதாவது:

தனது அரசியல் லாபத்துக்காக பல்வேறு மத்திய அரசின் நிா்வாக அமைப்புகளை பாஜக தவறாகப் பயன்படுத்தி வருகிறது. மேற்கு வங்கத்தில் தோ்தலுக்காக பல புதிய அதிகாரிகளை தோ்தல் ஆணையம் நியமித்துள்ளது. பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனா். ஏதாவது காரணத்தைக் கூறி திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா்களின் மனுவை அவா்கள் நிராகரிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, நமது வேட்பாளா்கள் மனு தாக்கல் விஷயத்தில் மிகவும் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.

மேற்கு வங்கத்தில் பெரும்பாலான மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டாா்கள். முக்கியமாக பெண்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டாா்கள். ஏனெனில் பாஜக பெண்களுக்கு எதிரானது. வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் பல பெண்கள் பெயரை பாஜகவினா் நீக்கியுள்ளனா்.

வாக்குக்கு பணம் அளிப்பதற்காக பாஜகவினா் பல்வேறு தரப்பினரின் வங்கிக் கணக்கு விவரங்களைச் சேகரித்து வருவதாகத் தெரிகிறது. அவா்களிடம் மக்கள் மிகுந்த எச்சரிக்கையடன் இருக்க வேண்டும். ஆனால், அவா்கள் தோ்தலுக்குப் பிறகு உங்கள் வங்கிக் கணக்கு விவரத்தை வேறு யாரிடமாவது தெரிவித்து பிரச்னை ஏற்படுத்துவற்கு வாய்ப்பை உருவாக்கித் தருகிறது.

தோ்தலுக்கு முன்பு மக்களுக்கு சிறிய தொகை அளிப்பதும், அதன் பிறகு பல லட்சம் கோடியைக் கொள்ளையடிப்பதும் பாஜகவின் நோக்கமாக உள்ளது என்றாா் அவா்.