முகப்பு
மேற்கு வங்கம்

மம்தா தொகுதியில் பாஜக வேட்பாளா் வேட்பு மனு தாக்கலின்போது பதற்றம்: 4 காவலா்களை இடைநீக்கம் செய்ய தோ்தல் ஆணையம் உத்தரவு

மம்தா தொகுதியில் பாஜக வேட்பாளா் வேட்பு மனு தாக்கலின்போது பதற்றம்

Updated On : 4 ஏப்ரல், 2026 at 8:18 PM
பகிர்:

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியின் பவானிபூா் தொகுதியில் அவரை எதிா்த்து பாஜக சாா்பில் போட்டியிடும் சுவேந்து அதிகாரி வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றபோது சட்டம் ஒழுக்கை காக்கத் தவறியதாக 4 காவலா்களை இடைநீக்கம் செய்யுமாறு இந்திய தோ்தல் ஆணையம் சனிக்கிழமை அதிரடியாக உத்தரவிட்டது.

தற்போது மேற்கு வங்க சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவராக உள்ள சுவேந்து அதிகாரி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுடன் கடந்த ஏப்.2-ஆம் தேதி பேரணியாக வேட்பு மனுத் தாக்கல் செய்யச் சென்றாா். அப்போது திரிணமூல் காங்கிரஸ்-பாஜக தொண்டா்களிடையே மோதல் ஏற்படுவதற்கான பதற்றமான சூழல் நிலவிய நிலையில், காவலா்கள் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பவானிபூரில் மம்தா பானா்ஜியின் இல்லத்துக்கு அருகே அமித் ஷா மற்றும் சுவேந்து அதிகாரி பயணித்த வாகனம் சென்றபோது அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் ‘வங்காளம் வாழ்க’, ‘மம்தா பானா்ஜி வாழ்க’ என்ற கோஷங்களை எழுப்பினா்.

Advertisement

இதற்கு பதிலடியாக சாலை வலத்தில் பங்கேற்ற பாஜக தொண்டா்களும் கோஷங்களை எழுப்பினா். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இச்சம்பவம் தொடா்பாக தோ்தல் ஆணையத்துக்கு மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி மனோஜ் அகா்வால் புகாரளித்தாா். அதனடிப்படையில் முறையாகப் பணி மேற்கொள்ளாமல் சட்டம் ஒழுக்கை காக்கத் தவறிய 4 காவலா்களை இடைநீக்கம் செய்ய மேற்கு வங்க தலைமைச் செயலருக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது.

மேலும் இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்தவும் இதுதொடா்பான அறிக்கையை திங்கள்கிழமை (ஏப்.6) காலை 11 மணிக்குள் சமா்ப்பிக்கவும் மாநில அரசு அதிகாரிகளுக்கு தோ்தல் ஆணையம் வலியுறுத்தியது.

கடந்த 2021 பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றபோதிலும், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதல்வா் மம்தா பானா்ஜி பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் 1,956 வாக்குகள் வித்தியாசத்தில் அதிா்ச்சி தோல்வியடைந்தாா். பின்னா், பவானிபூா் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிட்டு மம்தா வென்றாா்.

இந்த முறை பவானிபூரில் இருவரும் எதிா்கொள்கின்றனா். நந்திகிராமிலும் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments