250 அரசு அலுவலர்கள் பணியிட மாற்றம்: தேர்தல் ஆணையத்துக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் மனு
ஒரே நாளில் 250 அரசு அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் மனு தாக்கல் செய்தது குறித்து...
மேற்கு வங்கத்தில் ஒரே நாளில் 250-க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் மனு தாக்கல் செய்துள்ளது.
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் இரண்டு கட்டங்களாக ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய நாள்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி வேட்பாளராகப் போட்டியிடும் பவானிபூர் உள்பட 170 காவல் நிலையங்களின் பொறுப்பு அலுவலர்கள், 83 பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்கள் என 250-க்கும் மேற்பட்ட அலுவலர்களை சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்திய தேர்தல் ஆணையம் பணியிடமாற்றம் செய்தது.
Advertisement
இதனை எதிர்த்து, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யும் வழக்குரைஞருமான கல்யாண் பானர்ஜி இன்று (மார்ச் 30) கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) நடைபெற உள்ளது.
பாஜகவின் தூண்டுதலின்பேரில் தேர்தல் ஆணையம் அலுவலர்களைத் தொடர்ச்சியாக இடமாற்றம் செய்வதாகவும், இதன்காரணமாக, தனது கைகளிலிருந்து நிர்வாக அதிகாரம் பறிக்கப்பட்டுவிட்டது எனவும் மமதா தொடர்ந்து குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.