முகப்பு
வேலைவாய்ப்பு

காஷ்மீரில் அரசு வேலை: 2 ஆயிரம் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த 30 ஆயிரம் பண்டிட்டுகள்

பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள சுமார் 2 ஆயிரம் அரசுப் பணியிடங்களுக்கு 30 ஆயிரம் காஷ்மீர் பண்டிட்டுகள் விண்ணப்பித்துள்ளனர்.

Updated On : 31 ஜனவரி, 2021 at 11:19 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:55 AM

ஜம்மு: பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள சுமார் 2 ஆயிரம் அரசுப் பணியிடங்களுக்கு 30 ஆயிரம் காஷ்மீர் பண்டிட்டுகள் விண்ணப்பித்துள்ளனர்.

காஷ்மீரில் இருந்து இடம் பெயர்ந்த பண்டிட்டுகளுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது. பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டம் என்ற பெயரில், இடம் பெயர்ந்த 6 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் பணியில் சேர்ந்தவர்களுக்கு குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்படும் என்றும் அப்போதைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டது.இதையடுத்து 3,841 பேர் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு துறைகளில் பணியமர்த்தப்பட்டனர்.

மீதமுள்ள சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புதற்கான பணிகளில் ஜம்மு - காஷ்மீர் அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் ஈடுபட்டுள்ளது. இதற்காக 30 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பதாகவும் தேர்வு நடைமுறைகள் அனைத்தும் ஏப்ரல் மாதத்துக்குள் நிறைவடையும் என்றும் அரசின் நிவாரணம், மறுவாழ்வுத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement

அவர் மேலும் கூறும்போது, அரசு ஊழியர்களுக்கான 6 ஆயிரம் குடியிருப்புகள் கட்டும் திட்டம் கடந்த சில மாதங்களாக துரித கதியில் நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 6 ஆயிரம் வீடுகளில் ஏற்கெனவே ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 1,500 வீடுகளை கட்டுவதற்கான அரசின் அனுமதி கடந்த நவம்பரில் கிடைத்துள்ளது.

சுமார் 2,200 வீடுகளை கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு வீடு கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மார்ச் மாதத்துக்குள் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படும். இதுவரை மொத்தம் 5 ஆயிரம் வீடுகளுக்கான பூர்வாங்கப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மேலும் ஆயிரம் வீடுகளைக் கட்டுவதற்கு ஒரு மாதத்துக்குள் இடம் தேர்வு செய்யப்படும். வீடுகள் அனைத்தும் அடுத்த 18 முதல் 24 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகள் வசம் ஒப்படைக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.