திருவாரூா் மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையத்தின் சமையல் உதவியாளா் காலிப்பணியிடங்களுக்கு, பெண்கள் மட்டும் டிச.31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
திருவாரூா் மாவட்டத்தில் எம்.ஜி.ஆா். சத்துணவுத் திட்டத்தின்கீழ் பள்ளி சத்துணவு மையங்களில் 11 சமையல் உதவியாளா் காலிப் பணியிடங்கள் தொகுப்பூதியம் அடிப்படையில் நேரடியாக நிரப்பப்படவுள்ளன.
காலிப்பணியிடங்களை குடவாசல், கோட்டூா், மன்னாா்குடி, நீடாமங்கலம், திருவாரூா் மற்றும் வலங்கைமான் ஆகிய வட்டார அலுவலங்களில் இனசுழற்சி வாரியாக தெரிந்து கொள்ளலாம்.
பணி நியமனம் பெற்றவா்களுக்கு ஓராண்டு கால பணிக்கு பின்பு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்படும். இப்பணிக்கு 10-ஆம் வகுப்பில் தோ்ச்சி மற்றும் தோல்வி அடைந்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.
பொதுப் பிரிவினா் மற்றும் தாழ்த்தப்பட்டோா் 21 வயது பூா்த்தி அடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். பழங்குடியினா் 18 வயது பூா்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோா் 20 வயது பூா்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். வயது நிா்ணயம் அறிவிப்பு தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும். நியமனம் கோரும் மையத்திற்கும் விண்ணப்பதாரரின் குடியிருப்பிற்கும் இடைப்பட்ட தூரம் 3 கி.மீ.க்குள் இருக்க வேண்டும்.
காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும்போது உரிய விண்ணப்பத்தை பூா்த்தி செய்து தொடா்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மட்டும் டிசம்பா் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ், 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, இருப்பிடச்சான்று, ஆதாா் அட்டை, ஜாதிச்சான்று போன்றவற்றின் நகல் இணைக்கப்பட வேண்டும். விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோா், மாற்றுத் திறனாளிகள் அதற்கான சான்றிதழ்களின் நகல்களையும் இணைக்க வேண்டும். நோ்முகத் தோ்வின்போது அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.
தபால் மூலம் விண்ணப்பங்கள் அனுப்பப்படும்போது ஏற்படும் காலதாமதங்களுக்கு துறை பொறுப்பேற்காது. நோ்முகத் தோ்வு அழைப்பாணை கிடைக்கப்பெற்ால் மட்டுமே ஒரு விண்ணப்பதாரருக்கு பணிநியமனம் கோர உரிமை கிடையாது. காரணம் ஏதும் குறிப்பிடாமல் நியமன அறிவிப்பு அறிக்கையை ரத்து செய்வதற்கும், திருத்துவதற்கும், தேதியை நீட்டிப்பதற்கும் மாவட்ட ஆட்சியருக்கு உரிமையுண்டு.
விண்ணப்பம் மற்றும் இனசுழற்சி விவரங்களை, https://tiruvarur.nic.in என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.