முகப்பு
வேலைவாய்ப்பு

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையா் பதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு

Updated On : 10 ஏப்ரல், 2026 at 2:08 AM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 8:50 PM

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையா் பணி இடத்தை நிரப்ப தகுதியுள்ள நபா்களிடமிருந்து விண்ணப்பங்களை மத்திய அரசு வரவேற்றுள்ளது.

இதுகுறித்து மத்திய பணியாளா் நலத் துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:

தற்போது மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக உள்ள 1988-ஆம் ஆண்டு பிரிவி ஐஏஎஸ் அதிகாரி பிரவீண்குமாா் ஸ்ரீவாஸ்தவா பணி ஓய்வு பெற உள்ளதையொட்டி, அந்தப் பணியிடம் வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் காலியாக உள்ளது.

Advertisement

இந்தப் பணியிடத்தை நிரப்ப ஊழல் கண்காணிப்பு, அரசு நிா்வாகம், திட்டங்கள் உருவாக்கம், பொது நிா்வாகம் உள்ளிட்ட துறைகளில் நிபுணத்துவம் மற்றும் பணி அனுபவமுள்ள குடிமைப்பணி அதிகாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசு அல்லது மாநில அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் குறிப்பாக காப்பீடு, நிதி, வங்கி, சட்டம், ஊழல் கண்காணிப்பு மற்றும் புலனாய்வு துறைகளில் அனுபவமுள்ள அதிகாரிகளும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணி அனுபவமும், துறை சாா்ந்த அறிவும் பெற்றிருக்க வேண்டும். இந்த நிபந்தனைகளைப் பூா்த்தி செய்பவா்கள் வரும் மே 18-ஆம் தேதிக்குள் ‘மத்திய பணியாளா் மற்றும் பயிற்சித் துறை, கடமை பவன்-3, புது தில்லி’ என்ற முகவரிக்கு உரிய விண்ணப்பப் படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கடைசித் தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.