24.2.1976: விருத்தாசலம் அருகே தொழுதூர் கிராமத்தில் பெரிய தீ விபத்து: 300 வீடுகளும் தீக்கிரை
விருத்தாசலம் அருகே தொழுதூர் கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்து பற்றி...
விருத்தாசலம், பிப். 22 - விருத்தாசலம் அருகே தொழுதூர் கிராமத்தில் இன்று ஏற்பட்ட கோர தீவிபத்தில் கிராமத்தில் உள்ள 300 வீடுகளும், நாசமாயின.
இதனால் 400 குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளன. தீயை அணைப்பதில் ஈடுபட்ட போது அமிர்த அம்மாள் (65 வயது) சின்னசாமி (35 வயது) என்ற இருவர் தீக்காயமுற்று திட்டக்குடி அரசினர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் 2 மணிக்கு இவ்விபத்து ஏற்பட்டது.
விருத்தாசலம் ஸ்ரீரங்கம் தீபிணக்கு இடங்களிலிருந்து 3 யூனிட்டுகளும் பெண்ணாடம் சர்க்கரை ஆலையை சேர்ந்த ஒரு தீயணைக்கும் யூனிட்டும் அக்கிராமத்துக்கு விரைந்து சென்றன. இரவு 10 மணிவரை தீ அணைக்கப்படவில்லை.
Advertisement
மாவட்ட ரெவின்யூ அதிகாரி குப்புமுத்து ராஜு, ரெவினியூ டிவிஷனல் அதிகாரி ஸி செங்கல்வராயன், தாசில்தார் சாமிதுரை, டெபுடி தாசில்தார் கோமதி நாயகன் ஆகியோர், தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண ஏற்பாடுகளை செய்வதற்கு அக்கிராமத்துக்கு விரைந்துள்ளனர்.
இந்த தீ விபத்தின் விளைவாக ரூ. 5 லட்சத்துக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
30 நகர சபைகள், பஞ்சாயத்து யூனியன்களை கலைத்து விசேஷ அதிகாரிகளை நியமிக்க திட்டம்?
சென்னை, பிப். 22 - நிர்வாக முறைகேடுகள், ஊழல், பராபட்ச நடவடிக்கை ஆகியவை காரணமாக, தமிழ் நாட்டில் முதல் கட்டமாக, சில நகராட்சிகள் உள்ளிட்ட சுமார் 30 பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்கள் கலைக்கப்பட்டு, விசேஷ அதிகாரியின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்படும் என்று, விஷயமறிந்த வட்டாரங்களிலிருந்து அறியப்படுகிறது.
தமிழ் நாட்டில் ஏறத்தாழ 13 ஆயிரம் பஞ்சாயத்துக்களும், 374 பஞ்சாயத்து யூனியன்களும், 95 நகராட்சிகளும் உள்ளன .
இவற்றிற்கான பதவிக்காலம் ஏற்கெனவே முடிந்துவிட்ட போதிலும், அரசு நிறைவேற்றிய சட்டத்தின் மூலம் பதவி ஆயுள் நீடிப்பு கொடுக்கப்பட்டது. இதன்படி அந்த உள்ளாட்சி நிறுவனங்களின் ஆயுட் காலம், வருகிற ஆகஸ்டு மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது. நீடிப்பு கொடுக்கப்பட்ட போதிலும், இவற்றின் ஆயுட்காலத்தை குறிப்பிட்ட காரணங்களுக்காக ரத்து செய்து கமிஷனரை விசேஷ அதிகாரியாக நியமித்து, அவருடைய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரும் அதிகாரம் அரசுக்கு உள்ளது.
13 ஆயிரம் பஞ்சாயத்துக்களும் ஊழல் நிர்வாகத்திற்கு ஆள்பட்டதாகச் சொல்ல முடியாது என்று சொன்னாலும், பெரும்பாலான பஞ்சாயத்து யூனியன்கள் விவகாரம் அவ்வளவு திருப்திகரமாக இல்லை என்பது அரசிடம் உள்ள தகவல்கள், பூர்வாங்க விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள், நகராட்சித் தலைவர்கள் பணம் கையாடல் போன்றவைகளில் ஈடுபட நடைமுறையில் உள்ள சட்டப்படி முடியாது. ஏனெனில், நிர்வாக விவகாரங்கள், பண விஷயங்கள் ஆகிய அனைத்தும் பஞ்சாயத்து யூனியன் கமிஷனர்கள் அல்லது நகராட்சிக் கமிஷனர்கள் அதிகார வரம்புக்கு உட்பட்டவை ஆகும். என்றாலும் கான்டிராக்டுகளை ஏற்றுக் கொள்வது, நியமனங்கள் போன்றவற்றில் முறைகேடுகள், பாரபட்சம் ஆகியவை நடைபெறவும் அதன் மூலம் ஊழல் நடைபெறவும் வாய்ப்புகள் இருந்தன. இதைப் போன்ற முறைகேடுகள் அரசின் கவனத்திற்கு வந்தன. பூர்வாங்க விசாரணையிலும் அவை பெருமளவுக்குச் சரி என்று தெரியவந்ததாக விஷயமறிந்த வட்டாரங்களிலிருந்து அறியப்படுகிறது. ...