சாஸ்நலா, ஜன. 19 - சாஸ்நலா நிலக்கரிச் சுரங்கத்தில் வெள்ளம் புகுந்தது காரணமாக சிக்கிக்கொண்ட 375 தொழிலாளர்களுள் யாரும் உயிர்பிழைத்திருக்கும் அறிகுறி இல்லை என்று அதிகாரிகள் இன்று கூறினர்.
மீட்பு கோஷ்டி ஒன்றும் என்ஜினீயரிங் மற்றும் உயர்மட்ட புலன் விசாரணைக்குழு ஒன்றும் சுரங்கத்தின் உள்ளே இன்று காலை சென்று திரும்பின. சுரங்கத்தில் துர்நாற்றம் பொறுக்க முடியாமல் உள்ளதால் மீட்பு வேலை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
மீட்புக் கோஷ்டியினர் 7 சடங்களைக் கண்டனர் என்று சுரங்க பாதுகாப்பு டைரக்டர் ஜெனரல் திரு. எஸ்.எஸ். பிரசாத் கூறினார். 375 தொழிலாளர்களுள் யாரும் உயிர்பிழைத்திருக்கும் சாத்தியமில்லை என்றார்.
7 சடலங்களில் 2 சடலங்கள் மீட்கப்பட்டன. அவைகளில் ஒரு சடலம் திரு. மொகம்மது இஸ்மாயில் என்பது சடலத்திலிருந்த உலோகவில்லை (டோக்கன்) யிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
சுரங்கத்தில் இடுப்பளவு தண்ணீர் உள்ளது. மேலும் இறங்கும் இடம் சரியாக இல்லை. காற்றோட்டப் பாதைகளும் சேதமடைந்துள்ளது. சுரங்கத்தில் சில பாகங்கள் இடிந்து விழுந்து கொண்டிருப்பதால் மீட்பு வேலை நிறுத்திவைக்கப்பட்டதென்று திரு. பிரசாத் கூறினார்.
முதல்கோஷ்டி இடுப்பளவு தண்ணீரில் 36 மீட்டர் தூரமே செல்ல முடிந்தது. உயர் அதிகாரிகள் சென்ற இரண்டாவது கோஷ்டி உடனே திரும்பி வந்தது. இதற்கிடையே சுரங்கத்தில் பழுதுபார்க்கும் வேலை திருப்திகரமாக நடந்து வருகிறது. இதில் சுமார் 50 பேர் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.