முகப்பு
அரை நூற்றாண்டுக்கு முன்

11.3.1976: த.நா. அரிசி கொள்முதல் உடனடி நிறுத்தம் - கவர்னர் அறிவிப்பு

த.நா. அரிசி கொள்முதல் உடனடி நிறுத்தம் என கவர்னர் அறிவிப்பு...

Updated On : 11 மார்ச், 2026 at 4:00 AM
11.3.1976
பகிர்:

சென்னை, மார்ச். 10: தமிழ்நாட்டில் நெல், அரிசிக் கொள்முதல் நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்திவிட்டதாக கவர்னர் கே.கே ஷா இன்று நிருபர்கள் கூட்டத்தில் அறிவித்தார்.

மாவட்டங்களுக்குள்ளேயே ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குக் கொண்டு போவதற்கிருந்த நடமாட்டக் கட்டுப்பாடு நீக்கப்படுகிறது. ஆனால் எல்லைப்புறத்திலுள்ள தாலுக்காக்களில் கட்டுப்பாடு இருந்து வரும்.

நியாய விலைக் கடைகளில் அரிசி சில்லறை விலை குறைக்கப்படும். அதோடு எல்லா ஊதியக்காரர்களுக்கும் ஒரே சீரான விலையும் நிர்ணயிக்கப்படுகிறது.

Advertisement

ஒரு மாவட்டத்தின் ஒரு பகுதியிலிருந்து அதே மாவட்டத்தின் இன்னொரு பகுதிக்கு நெல், அரிசி கொண்டு செல்வதற்கு இருந்த நடமாட்டக் கட்டுப்பாடு கன்னியாகுமரி மாவட்டம் நீங்கலாக வேறு எல்லா மாவட்டங்களிலும் ரத்து செய்யப்படுகிறது" என்று கவர்னர் ஷா அறிவித்தார்.

எல்லை தாலுக்காக்களில்

கேரள மாநில எல்லையை ஒட்டிய தமிழ்நாட்டின் மதுரை, நெல்லை, கோவை ஆகிய மாவட்டங்களில் சில தாலூகாக்கள் "அறிவிக்கப்பட்ட பகுதிகள்" ஆகக் கருதப்பட்டு அந்த எல்லைப் பகுதிகளில் மட்டும் நடமாட்டக் கட்டுப்பாடு நீடிக்கும்.

சென்னை மாநகரைப் பொறுத்தவரையில் நகர மக்களின் அரிசித் தேவையைப் பூர்த்தி செய்ய செங்கற்பட்டு, வட ஆற்காடு, தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களிலிருந்து கூட்டுறவுத் துறை, மாநில அரசின் உணவு வழங்குத் துறை ஆகியவற்றின் மூலம் தருவித்து அரசாங்கமே உணவு வழங்குத் துறை சில்லறை விற்பனைக் கடைகள், கூட்டுறவு பண்டகசாலைகள் மூலம் வினியோகிக்கும் என்றும் கவர்னர் அறிவித்தார். ...

வறட்சி பகுதிகளில் கிணறு வெட்ட திட்டம்: கவர்னர் தகவல்

சென்னை, மார்ச், 10- பருவமழை தவறியதன் காரணமாக வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகள் வெட்டுவதற்கான தீவிர திட்டம் ஒன்றை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது" என்று கவர்னர் ஷா இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

திருநெல்வேலி, ராமனாதபுரம் ஆகியவை உள்ளிட்ட சில மாவட்டங்களின் பகுதிகளில் வறட்சி நிலை காரணமாக இத்தகைய கிணறுகளை அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதுவரையில் சுமார் நானூறு குழாய்க் கிணறுகள் அமைக்கப்பட்டுவிட்டன.

அடுத்த நாலு மாத காலத்தில் மேலும் 2 ஆயிரம் கிணறுகளை அமைக்க உத்தேசிக்கப்பட்டு முனைப்பாக வேலை நடைபெறு கிறது என்று ஷா விளக்கினார்.

ஒவ்வொரு கிணறும் நூறு முதல் 150 அடி வரை ஆழமுள்ளதாக இருக்கும். ஒரு கிணறு அமைக்க ஆறு முதல் ஏழாயிரம் ரூபாய் வரை செலவாகும் என்ற விவரங்களையும் கவர்னர் தந்தார்.

summary

11.3.1976: Immediate stoppage of T.N. rice procurement - Governor's announcement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.