முகப்பு
அரை நூற்றாண்டுக்கு முன்

12.3.1976: சென்னை போலீஸார் சீருடை மாறுகிறது

சென்னை போலீஸார் சீருடை மாற்றம் பற்றி...

Updated On : 12 மார்ச், 2026 at 4:01 AM
12.3.1976
பகிர்:

சென்னை, மார்ச். 11 - சென்னை போலீசாரின் சீருடை மாறுகிறது. காக்கி நிற அரைக்கால் சட்டையுடன் (டிரவுசர்) இதுவரை காட்சி அளித்துவந்த சென்னை மாநகர போலீசார், இனி முழுக்கால் சட்டை அணிந்து புதிய பொலிவுடன் காட்சி அளிப்பார்கள். சென்னை மாநகரில் பணியாற்றும் ஏறத்தாழ நாலாயிரம் போலீஸ்காரர்கள் விஷயத்தில் இந்த உடை மாற்றம் உடனடியாக அமலுக்கு வரும்.

மாநிலம் பூராவிலும் மொத்தம் நாற்பது ஆயிரத்துக்கும் சற்றுக் கூடுதலான எண்ணிக்கையில் போலீஸ்காரர்கள், தலைமை போலீஸ்காரர்கள் (ஹெட் கான்ஸ்டபிள்கள்) பணியாற்றுகிறார்கள். இவர்கள் விஷயத்திலும் இந்த உடைமாற்றம் படிப்படியாக அமலுக்குவரும் என்று மாநில போலீஸ் மாறுகிறது இன்ஸ்பெக்டர் ஜெனரல் எப்.வி. அருள் தெரிவித்தார்.

தென் மாநிலங்களிலேயே காலத்திற்கேற்ப போலீஸ்காரர்கள் உடை மாற்றத்தை அமல்படுத்தும் முதலாவது மாநில அரசு தமிழ்நாடு தான்.

Advertisement

ஏற்கெனவே சென்னை மாநகர பெண் போலீசார் காக்கி நிற முழுக்கால் சட்டையுடன் "யூனிபாரம்" அணிந்துள்ளனர். எனவே அவர்கள் விஷயத்தில் உடை மாற்றப் பிரச்னை இராது.

போலீஸ்காரர்களுக்கு செய்யப்படும் இந்த உடை மாற்றத்தைத் தொடர்ந்து அவர்களுக்கு காக்கி நிற காலுறையும்(ஸ்டாக்கின்ஸ்), கறுப்பு நிற பூட்ஸும் வழங்கப்படும். சில மாதங்களுக்கு முன்பு போலீஸ் தொப்பியில் மாற்றம் செய்யப்பட்டது தெரிந்ததே.

பாக்., சீன வசம் 46,700 ச. மைல் இந்திய பிரதேசம்

புதுடில்லி, மார்ச்: 11 - பாகிஸ்தான், சீனா ஆகியவை ஆக்ரமித்து வைத்துக் கொண்டிருக்கும் இந்தியப் பகுதி மொத்தம் சுமார் 46,700 சதுர மைல்.

சமாதான வழியில் இரு தரப்பு பேச்சு மூலம் ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் சட்ட விரோதமாக வைத்துக் கொண்டிருக்கும் பிரதேச பிரச்னையை தீர்ப்பது இந்திய சர்க்கார் கொள்கை என்று லோக சபையில் இன்று எழுத்து மூலம் ஒரு கேள்விக்கு பதிலளிக்கப்பட்டது.

சீனா சம்பந்தப்பட்டவரை நமது தேசிய - கெரளவத்துக்கும், நலனுக்கும் ஏற்ப தீர்வு காண்பதற்கு அதனுடன் பேச்சு நடத்தத் தயார் என இந்திய சர்க்கார் பல தடவை கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை சீனாவிடமிருந்து சாதகமான பதில் இல்லை.

summary

Chennai police uniforms are changing

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.